PUBLISHED ON : ஏப் 05, 2020

சுய தொழிலே மேன்மை!
அரசு ஊழியராக பணிபுரிகிறார், என் நண்பர். அவருக்கு, ஒரே மகள். பி.ஏ., முடித்தாள். திருமண வயது வந்ததும், மாப்பிள்ளை தேடினார். பி.இ., படித்த இன்ஜினியர் வரன் கிடைத்தது.
மாப்பிள்ளை, அரசு மற்றும் தனியார் பணியில் இல்லாமல், கிராமத்தில், அவருக்கு இருந்த நிலத்தில், விவசாயம் செய்து கொண்டிருந்தார். தன் மகளுக்கும், குடும்பத்தாருக்கும் பிடித்திருந்ததால், அந்த மாப்பிள்ளையை பேசி முடித்து, திருமணம் செய்து வைத்தார்.
திருமணத்திற்கு வந்தவர்கள், 'ஒரே பெண்ணை வைத்திருக்கிறாய், அரசு ஊழியர் அல்லது பெரிய பணக்காரராக பார்த்து திருமணம் செய்து கொடுத்திருக்கலாமே...' என்றனர்.
அந்த நேரத்தில், உற்றார், உறவினரின் பேச்சு, அவருக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும், மனம் தளராமல், மகளுக்கு செய்ய வேண்டிய சீர், செனத்திகளுடன் அனுப்பி வைத்தார், நண்பர்.
கிராமத்து, பி.இ., பட்டதாரி மாப்பிள்ளை மிகவும் கெட்டிக்காரராக இருந்தார். அவருடைய நிலத்தில், இயற்கை முறையில் விவசாயம் செய்து, எண்ணெய் வித்துகளை பயிர் செய்தார். அத்துடன், சுகாதார முறையில் மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய்யை, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விளம்பரப்படுத்தினார்.
மேலும், உயர் ரக நெல் வகைகளில் பயிர் செய்த அரிசியையும், சமூக வலைதளம் மூலம் விளம்பரப்படுத்தி, விற்பனையில் சாதனை படைத்தார். இப்போது, பத்திரிகை பேட்டிகளில் இடம்பெற ஆரம்பித்துள்ளார்.
அரசு மற்றும் தனியார் துறையில், மாத சம்பளம் வாங்குவதை விட, இப்படி சுயமான முறையில் விவசாயம் செய்து, உயர் நிலையை அடைவது பெருமை வாய்ந்தது என்பதை, நண்பரின் மருமகன் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் திறமை, வளர்ச்சி கண்டு, நண்பர் வீட்டாரும், சுற்றத்தாரும் இப்போது பெருமையாக பேசுகின்றனர்.
- கே. அருணாசலம், தென்காசி.
இளைஞர்களே, உழைக்க தயாராகுங்கள்!
இன்று, தமிழகத்தின் பெரிய நகரம், சிறு நகரம் மட்டுமின்றி, சிற்றுாரில் கூட மளிகை கடை, ஓட்டல், ஜவுளிக்கடை, இறைச்சி கடை மற்றும் கட்டடம் கட்டும் பணிகளில், ஹிந்தி பேசும் வடமாநிலத்தவர் தான் உள்ளனர்.
தமிழகத்தில் தொழிலாளர்களே இல்லையா, இளைஞர்களுக்கு பஞ்சமா என விசாரித்த போது, கிடைத்த தகவல் அதிர்ச்சியளித்தது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட, வடமாநில இளைஞர்களை பணியமர்த்தியுள்ள, பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், 'தினசரிகளில், 'ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்தாலும், தமிழ் இளைஞர்கள் வருவது, ஒன்றிரண்டு பேர் தான். அவர்களும், எட்டு மணி நேர உழைப்பை தருவதற்கு தயாராய் இருப்பதில்லை.
'பீகார் மாநில இளைஞர்களுக்கு, தங்க இடம், மூன்று வேளை உணவு, மாதம் முடிந்ததும் சம்பளம் என்றால், தினசரி, 12 மணி நேர உழைப்பை தர, தயாராய் உள்ளனர். அதனால் தான், வெளி மாநில வேலை ஆட்களையே விரும்புகிறோம்...' என்றார்.
இப்படியே போனால், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. அதீத உழைப்பை காட்டினால் மட்டுமே, நிறுவனங்கள், உங்களை போட்டி போட்டு அழைக்கும்.
ஆகவே, தமிழக இளைஞர்களே... கடுமையாக உழைக்க தயாராகுங்கள். இல்லாவிடில், வேலை தேடி, வட மாநிலத்தவர் தமிழகம் வருவது போல், நீங்களும், வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டி வரும்.
டி. ஜெய்சிங், கோவை.
'கொரோனா' விழிப்புணர்வும், துாய்மையும்!
பக்கத்து தெருவில் வசிக்கும் என் மகனின் நண்பர்கள், தேர்வுக்காக சேர்ந்து படிக்க, எங்கள் வீட்டிற்கு வருவர். எங்கள் அடுக்ககம் வாசலில், வேப்ப இலைகள் போட்ட தண்ணீர் வைத்திருந்தோம்.
மகனின் நண்பர்கள், வாசலில் வைத்திருந்த தண்ணீரில், கை, கால் கழுவி, வீட்டிற்குள் வந்தனர்.
வழக்கமாக, மண் காலுடன், 'ஹால் கார்பெட்' மீது ஏறி குதிப்பர்.
சிறிது நேரம் படித்தவுடன், வடையும், காபியும் தந்தேன். கைகளை கழுவி சாப்பிட்டனர்.
வழக்கமாக, கையில் வாங்கி கடித்து, கிடைக்கும் துணியில் கை துடைக்கும் வழக்கம், மறைந்து போயிருந்தது.
'ஏண்டா பசங்களா... எத்தனை முறை கண்டதை மிதிச்சிருப்பீங்க... உள்ளே வந்ததும், கால் கழுவுங்க, சாப்பிடும் முன், கை கழுவுங்கன்னு முட்டிக்கிட்டோம். நழுவிடுவீங்க... இப்ப யாரும் சொல்லாமலே, சுத்தத்தை கடைப்பிடிக்கிறீங்களே... 'கொரோனா' சொல்லித் தந்த பாடமா...' என, சிரித்தார், மாமனார்.
'தாத்தா... இதுக்கு முன்ன, நீங்களும், கை, கால் கழுவ, வீட்டு வாசல்ல தண்ணீர் வைக்கலையே...' என, பதிலுக்கு அவர்களும் வாரினர்.
துாய்மை விழிப்புணர்வை, 'கொரோனா' மீட்டெடுத்திருப்பது நிஜம். இப்போது பல வீடுகளில், வாசலில், சாணி தெளிப்பதும், வீடு முழுக்க சாம்பிராணி புகை போடுவதும் வழக்கமாகி உள்ளது.
இதுதான் நம் முன்னோர், கலாசாரமாக கடைப்பிடித்த நெறி. இனி, இதை எப்போதும் கடைப்பிடிப்போம்.
கீதா பாலு, ஐதராபாத்.
