தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர் - நாதமெனும் கோவிலிலே... (6)

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர் - நாதமெனும் கோவிலிலே... (6)

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர் - நாதமெனும் கோவிலிலே... (6)


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறு வயதில் வாணி கற்றுக்கொண்ட கர்நாடக சங்கீதம் தான், பின்னாளில் அவருக்கு மூன்று தேசிய விருதுகளை பெற்றுத் தரப்போகிறது என்று நினைத்திருப்பாரா?

மூன்று பாடல்களுமே, அத்தனை எளிதில் பாட முடியாத, மிகவும் கடினமானவை. அதனால் தான் இப்போதும் கூட, அந்த பாடல்களை சாதாரணமாக போட்டிகளிலும், மேடைகளிலும் அதிகமாக யாரும் பாடுவதில்லை.

'அருமையாக அமைந்திருக்கிறது டியூன். ஆனால், கஷ்டமானதாக இருக்கிறதே...' என்று யோசிக்கும்போதே, 'கஷ்டமான டியூனாக இருந்தால் என்ன, இருக்கவே இருக்கிறார், வாணி...' என்பார்களாம் அப்போதைய இசையமைப்பாளர்கள்.

வாணிக்கு, 2வது, 3வது தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள், கே.வி.மகாதேவன் இசையமைத்த, தெலுங்கு திரைப்பட பாடல்கள்.

மகாதேவன் குறித்து, வாணி ஜெயராம் கூறியது...

தென்னிந்தியாவில் பாட ஆரம்பிக்கிறதுக்கு சில ஆண்டுகளுக்கு முன், சம்பூர்ண ராமாயணம் என்ற படத்தை, தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்தனர். அதுக்காக, பம்பாயிலிருந்து நாங்கள்லாம் இங்க வந்தபோதுதான், நான் முதல் முதலா,

கே.வி.மகாதேவன் சாரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைச்சது.

அதுவரைக்கும் நான், வட மாநிலத்தை சேர்ந்தவள்ன்னு நினைச்சுட்டிருந்த, கே.வி.எம்., சாருக்கு, தமிழகத்தை சேர்ந்தவள்னு தெரிஞ்சு ஆச்சரியப்பட்டார் என்கிறார், வாணி.

அதுமட்டுமல்ல, வாணிக்கு, மூன்றாவது தேசிய விருது பெற்றுத் தந்த, சுவாதி கிரணம் திரைப்படத்தில் மொத்தம், 12 பாடல்கள். அதில், எட்டு பாடல்கள், வாணியின் குரலில் வந்தவை.

ஒரு தெலுங்கு படம், தமிழகத்தில் சக்கை போடு போட்டது என்றால், அது, சங்கராபரணம் தான். சங்கராபரணம் படத்தை பற்றி பேசும்போது, மறைந்த பாடகர், எஸ்.பி.பி., பற்றி, தன் நினைவுகளை பகிர்ந்தார், வாணி:

சங்கராபரணம் படத்தோட பாடல்கள், 'ரெக்கார்ட்' பண்ணும்போது, பாலு சார் வர்றதுக்கு தாமதம் ஆச்சு. 'எங்க நம்ம சங்கர சாஸ்திரிகள இன்னும் ஆளை காணோமே'ன்னு நான் கிண்டல் பண்ணுவேன். அதே நேரத்துல, 'சங்கர சாஸ்திரிகள் ஆஜர் அக்கா'ன்னு, அவரு உள்ளே நுழைய, 'ரெக்கார்டிங் ஸ்டுடியோ'வே சிரிப்பலையில் அதிரும்.

அதையெல்லாம் இப்போ நினைச்சு பார்க்கும்போது, எஸ்.பி.பி., நம்முடன் இல்லையே என்று வருத்தமா இருக்கு. அதேபோல, எஸ்.பி.பி., சாரும், நானும் சேர்ந்து பாடின நிறைய பாடல்கள், 'சூப்பர் ஹிட்!'

தமிழில், 'ஒரே நாள் உனை நான், தேவாமிர்தம் ஜீவாமிர்தம், ஒரே ஜீவன், இலக்கணம் மாறுதோ, பாரதி கண்ணம்மா' என, பல பாடல்களைச் சொல்லிக்கிட்டே போகலாம்.

கன்னட படத்துல பாட, நாங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை, முதல் விமானத்தில் கிளம்பி, பெங்களூருக்கு போய், கிட்டத்தட்ட, 10 - 15 பாடல்... என்னோட சோலோ, அவரோட சோலோ, எங்க ரெண்டு பேரோட, 'டூயட்' என, பல பாடல்கள் பாடிட்டு, இரவு, 9:50 விமானத்துல திரும்பி வந்துருக்கோம், என்றார்.

தன் குருவாகவே வாணிஜெயராம் நினைக்கும் ஒருவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

எம்.எஸ்.வி., சாரோட பல பாடல்கள் கேட்பதற்கு ரொம்ப ஈஸியா இருந்தாலும், அந்த இசையோட கட்டமைப்பு ரொம்ப சிக்கலாக இருக்கும். தமிழ் திரை இசையோட வளர்ச்சியில், நிச்சயமாக அவருடைய பங்கு மிகப்பெரியது.

பத்தினிப்பெண் படத்துக்கு, எம்.எஸ்.வி., சார் இசையில, நான் ஒரு பாட்டு பாடினேன். 'ரெக்கார்டிங்' முடிச்சுட்டு, 'ரிக்கார்டிஸ்ட்' அறைக்கு போய், பாட்டு எப்படி வந்துருக்குன்னு கேட்க போனபோது, 'வாணியம்மா, இங்க கொஞ்சம் வாங்க'ன்னு கூப்பிட்டார்.

'நான், 15 நாளா மண்டைய உடைச்சுகிட்டு இந்த டியூனை போட்டிருக்கேன். நீங்க என்னடான்னா, ஒரு டம்ளர் தண்ணி குடிக்கிற மாதிரி இந்த பாட்டை முடிச்சுட்டீங்களே'ன்னு பாராட்டினார்.

மிகப்பெரிய இசை ஜாம்பவான்கிட்டேருந்து கிடைச்ச இந்த பாராட்டை என்னால மறக்கவே முடியாது, என்கிறார்.

அக்காலத்து - இக்காலத்து சூப்பர் ஸ்டார்களின் படங்களில் பாடிய பெருமை வாணி ஜெயராமுக்கு உண்டு. தமிழில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி. அதன்பின், கமல், ரஜினி. மலையாளத்தில், பிரேம் நசீர், மது. கன்னடத்தில், ராஜ்குமார். தெலுங்கில், என்.டி.ஆர்., - நாகேஸ்வரராவ். அதுபோல, ஹிந்தியிலும் முன்னணி கதாநாயகர்கள் என, அத்தனை பேர் படங்களிலும் பாடியவர், வாணி ஜெயராம்.

இதில் சொந்த குரலில் பாட கூடியவர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் என்பதால், அவருடன் சேர்ந்து பல, 'டூயட்' பாடல்கள் பாடி மிகப்பெரிய, 'ஹிட்' ஆகியிருக்கிறது.

- தொடரும்

ஸ்ரீவித்யா தேசிகன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us