தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 31, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 31, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேண்டாத வேலை!

அஞ்சல் சேவையை தன் ஏகபோக உரிமையாக வைத்துக் கொண்டிருந்த அஞ்சல் துறை, 30 ஆண்டுகளுக்கு முன், பார்சல் மற்றும் டாகுமென்ட் பட்டுவாடா என்ற தலைப்பின் கீழ், கூரியர் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. மணியார்டர் சேவையைத் தவிர, அனைத்து அஞ்சல் துறை பணிகளையும் தற்போது கூரியர் நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அதன் விளைவு, அஞ்சல் துறையின் வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைய, தங்க காசுகள் விற்பனையை துவக்கியது. நல்ல வேளை, தங்க நகைகள் விற்பனையில் இறங்கவில்லை.

தற்போது, 'ஸ்டாண்டர்ட்' பட்டாசு நிறுவனத்துடன் இணைந்து, பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. 417 முதல் 2,159 ரூபாய் வரையில் ஆறு விதமான தொகுப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளது.

இந்த பட்டாசு விற்பனையை, வேண்டாத வேலை என்று சுட்டிக் காட்ட காரணம், அந்த விற்பனைக்காக அஞ்சல் துறை வகுத்து வைத்துள்ள வழிமுறைகள் தான்.

காசு கொடுத்தால், பொருளை கொடுக்க வேண்டும்; அது தானே வியாபாரம்!

ஆனால், தபால் அலுவலகத்தில், எந்த பட்டாசு தொகுப்பு வேண்டுமோ அதற்கான தொகையை, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கட்ட வேண்டுமாம். அந்த தொகைக்கு ரசீது தருவராம். அந்த ரசீதை எடுத்துச் சென்று, சென்னை, தியாகராய நகரில் உள்ள, 'ஸ்டாண்டர்ட் பயர் கிராக்கர்ஸ்' நிறுவனத்தில் கொடுத்து, பட்டாசுகளை வாங்கிக் கொள்ள வேண்டுமாம். வேடிக்கையாக இல்லை!

தபால் அலுவலகத்தில் பணம் கட்டி, பட்டாசு வாங்கும் விதமாக இருந்தாலும் பரவாயில்லை. குறிப்பிட்ட பட்டாசு நிறுவனத்திற்கு சென்று வாங்குவதற்கு போக்குவரத்து செலவு ஏற்படுமே!

அஞ்சல் துறைக்கு ஏன் இந்த வேண்டாத வேலை! இப்படியெல்லாம் இந்த துறைக்கு ஆலோசனைகளை யார் அள்ளி வழங்குகின்றனரோ தெரியவில்லை!

பாத்திரம் மற்றும் பண்டங்களை ஈடாக வைத்து, மார்வாடி கடைகளில் கொடுப்பது மாதிரி, தபால் அலுவலகங்களில் கடன் வழங்க வேண்டும் என்று முதல்வராவதற்கு முன், எம்.ஜி.ஆர்., சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.

கே.பன்னீர் செல்வம், சென்னை.

பைக்கில் வளர்ப்பு நாயை அழைத்துச் செல்லாதீர்!

சமீபத்தில், இரு சக்கர வாகனத்தில், சிக்னலுக்காக காத்திருந்தேன். அப்போது, என் அருகில், ராஜபாளைய நாயை, இரு சக்கர வாகனத்தின் முன் அமர வைத்தபடி, 'ஸ்டைலாக' வந்து நின்றனர், ஒரு தம்பதியர்.

அவர்களுக்கு பக்கத்தில், சாலையை கடப்பதற்காக, குழந்தையுடன் நின்றிருந்தார், ஒரு அம்மா. அந்த குழந்தை, ஒரு கையில் பிஸ்கெட்டை சாப்பிட்டபடி, மறு கையால் அம்மாவின் விரல் கோர்த்து நின்றிருந்தது.

திடீரென்று, வாகனத்திலிருந்த நாய் தாவி, அந்த குழந்தையின் கையிலிருந்த பிஸ்கெட்டை, 'லபக்' என்று பிடுங்கியது. இதை சற்றும் எதிர்பாராத குழந்தை, பயந்து அழ ஆரம்பித்து, வலிப்பும் வந்து விட்டது; செய்வதறியாது, பதறினார், குழந்தையின் அம்மா.

உடனே, அருகில் இருந்தவர்கள், ஆம்புலன்சை வரவழைத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருகிலிருந்தவர்கள், 'வளர்ப்பு பிராணியை இப்படி, நீங்கள் செல்லும் இடமெல்லாம், பெருமைக்காக துாக்கி சென்று, மற்றவர்களுக்கு தொந்தரவு தராதீர்... வீட்டில் வைத்து வளர்க்க பாருங்கள்; வாகனம் ஓட்டும் உங்களுக்கும் இது இடைஞ்சல் தான்...' என்று கண்டபடி திட்டினர்.

மனிதர்களுக்கே, எதை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியாது; இதில் ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு என்ன தெரியும். இனிமேலாவது, இதுபோன்று, 'பந்தா' காட்டாமல், திருந்தி நடப்பரா!

என். பசுபதி, திருப்பூர்.

திருடுவதில் இது புது வழி!

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்கு ஜோதிடர்கள் போர்வையில் திருடர்கள் சென்று திருடுவது, இப்போது வழக்கமாகி வருகிறது. சமீபத்தில், தோழியின் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

தோழி, தனியாக இருக்கும் போது, ஒருவன் வீட்டிற்கு வந்து, 'உங்கள் கணவருக்கு நேரம் சரியில்லை. அதனால், அவர் உயிருக்கு ஆபத்து. ஆகவே, அவருக்கு தோஷம் கழிக்க வேண்டும்...' என்று கூறி இருக்கிறான்; பயந்து போன தோழியும் அனுமதித்திருக்கிறார்.

வீட்டிற்குள் வந்தவன், பூஜை செய்வது போல நடித்து, ஒரு செம்பில் மஞ்சள் நீரை எடுத்து, அதில், 'உங்கள் கழுத்தில் உள்ள நகையை கழட்டி போடுங்கள். பூஜை முடிந்ததும் திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றிருக்கிறான்.

நகையை கழட்டி போட்டதும், சிறிது குங்குமம் கொண்டு வருமாறு கூற, தோழி உள்ளே போய் வருவதற்குள், நகையை எடுத்து பதுக்கிக் கொண்டிருக்கிறான். 'பூஜை முடிந்த ஐந்து மணி நேரத்திற்கு பிறகே செம்பில் உள்ள நகையை எடுக்கணும். இல்லாவிட்டால் தோஷம் போகாது...' என்று எச்சரிக்கை செய்ய, இவளும் நம்பியுள்ளாள்.

அவன் சொன்ன நேரம் முடிந்த பின் பார்த்தால், நகையை காணவில்லை; ஏமாந்தது தெரிந்திருக்கிறது.

பெண்களே... ஜோசியம் சொல்கிறேன் என்றபடி தெருவில் நடமாடும் இத்தகையோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

எல்.ஆர். உமா ராதாகிருஷ்ணன், வாணியம்பாடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us