தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பார்த்து பார்த்து ஆட வேண்டிய பாண்டி ஆட்டம்...

பார்த்து பார்த்து ஆட வேண்டிய பாண்டி ஆட்டம்...

பார்த்து பார்த்து ஆட வேண்டிய பாண்டி ஆட்டம்...


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் சிறுவனாக இருந்த போது, பாண்டி ஆட்டம் என்று, ஒரு விளையாட்டை விளையாடுவர், சிறுமியர். எங்களையெல்லாம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்; நாங்கள் ஆடுகிறோம் என்று சொன்னால் சிரிப்பர்.

அவர்கள் விளையாடி விட்டுப் போன பின், அக்கட்டங்களில், நாங்கள் ஆடுவது உண்டு. கண்களை மூடி, இரு கால்களையும் பரப்பி, கட்டங்களில், தாண்டித் தாண்டி குதித்து, சரியாக, கால்களை, கட்டங்களுக்குள் வைக்க வேண்டும்; கோட்டில், காலை வைத்து விட்டால், வெளியேறி விட வேண்டும்.

ஒவ்வொரு முறை, தாண்டி காலூன்றிய பின், 'ரைட்டா...' என்று, மற்றவர்களிடம் கேட்க வேண்டும். 'ரைட்டு...' என்று பதில் வந்தால் தான், ஆட்டத்தை தொடர முடியும்.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகள், ஒவ்வொன்றாக மறக்கப்பட்டு வருகின்றன; அவற்றுள், பாண்டி ஆட்டமும் ஒன்று!

இந்த விளையாட்டைப் பற்றி கூறாமல், நாம் விஷயத்திற்குள் நுழைய முடியாது என்பதால் விளக்கினேன்; இனி, தலைப்பிற்கு வருகிறேன்.

வாழ்க்கையில், பல நேரங்களில், நாம் எடுக்கும் முடிவுகள் தவறாகி விடுகின்றன; பின் அதுகுறித்து வருந்துகிறோம். நஷ்டங்களும், கஷ்டங்களும் வலிகளையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும் போது, 'நாம் அப்படி செய்திருக்கலாம்; இப்படி பேசியிருக்கலாம்; வேறு கோணத்தில் அணுகியிருக்கலாம்; அவரை யோசனை கேட்டிருக்கலாம்; இவரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்...' என்றெல்லாம், தாமதமாக ஞானோதயங்கள் பிறக்கின்றன.

ஆனாலும், நம்மை மாற்றிக் கொள்ளாமல், அதே தவறுகள், பல்வேறு முடிவுகளின் போதும் தொடருகின்றன.

அனுபவம், ஒரு பொல்லாத ஆசிரியன். தண்டனை கொடுத்த பிறகே, பாடங்களை சொல்லி தருகிறான்.

எப்படி, பாண்டி ஆட்டத்தில், 'ரைட்டா... ரைட்டா...' என்று பிறரைக் கேட்ட பின், அடுத்த கட்டத்திற்கு நகர்கிறோமோ, அதேபோல, பிறர் சம்பந்தப்பட்ட வாழ்க்கையிலும், ஒவ்வொரு நகர்விலும், உரியவர்களை கேட்ட பின்னரே, நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.

தனி மனிதராக, திரைப்படம் பார்க்க விரும்பும் போது, நாம் எடுப்பது தான் முடிவு. ஆனால், டிக்கெட்டுகளை எடுத்து விட்டு, மனைவி, பிள்ளைகளை, 'வாங்க படத்திற்கு...' என்று அழைக்கும் போது, மகிழ்ச்சிக்கு பதிலாக, அங்கே, அவர் விமர்சிக்கவே படுகிறார்.

ஒவ்வொருவருக்கும், வெவ்வேறு ரசனைகள்.

'போப்பா... நான், எவ்வளவு நாளா ஓட்டலுக்கு போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்... சினிமாவாம் சினிமா...' என்கிறது மூத்தது.

'எனக்கு, அந்த நடிகர் படமே வேணாம்; கடுப்பா இருக்கும்...' என்கிறது இளையது. 'இந்த, 800 ரூபாயை எங்கிட்ட குடுத்தீங்கன்னா, 'தம்' பிரியாணி செய்து, அமர்க்கள படுத்தியிருப்பேன்...' என்கிறார், மனைவி.

குடும்பத் தலைவர், இப்படி ஒரு குடைச்சலுக்கு ஆளானதுக்கு என்ன காரணம் என்றால், 'ரைட்டா...' கேட்காதது தான். ஒரு சின்ன விஷயத்திற்கே இப்படி என்றால், வாழ்வில் முக்கிய முடிவுகளுக்கு கேட்கவும் வேண்டுமா...

அப்படியிருக்கையில் ஏன் இத்தவறுகள் தொடர்கின்றன தெரியுமா...

'நான் எடுக்கிறது தான் முடிவு; எவனையும், எவளையும் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்ல...' என்கிற அறியாமை மற்றும் அதிகாரப் போக்கே, இதற்கு காரணம்.

'பிறரைக் கேட்டு செய்வதற்கு, நான் என்ன சின்ன பிள்ளையா இல்ல ஏதும் அறியாதவனா... நான் கட்டளையிட்டா, பின்னாடி ஓடி வர வேண்டிய நாய்க்குட்டி நீங்க...' என்றெல்லாம், நமக்குள் இருக்கிற தவறான பார்வைகளே, பிரச்னைகளை பெரிதாக்குகின்றன.

பிறரை கேட்டு செய்வது, கவுரவக் குறைவல்ல. மாறாக, பல வகைகளில், பெரிய பலம்; அனுகூலமும் கூட. கேட்டு இயங்கினால், நன்கு இசைந்து வருவர். 'நம்மை மதிக்கிறார்...' என மகிழ்வர். தவறு நிகழ்ந்து விட்டால் கூட, 'அதனாலென்ன பரவாயில்ல...' என்பர். ஏதேனும் நஷ்டங்கள் என்றால் கூட, பகிர்ந்து கொள்வர்; காயங்கள் என்றால், மருந்திடுவர். பிரச்னை என, ஏதும் வந்து விட்டால், நம்மை, பின்னுக்குத் தள்ளி, முன் நின்று, 'ஆமா... என்னான்ற இப்போ...' என்று நமக்காக பரிந்து பேசி, எதிராளியிடம் வியூகம் அமைப்பர்.

இவ்வளவு நன்மைகளையும் புறக்கணித்து, தனியாளாக ஆட்டம் போடுவது சரி தானா?

- லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us