PUBLISHED ON : நவ 20, 2016

அன்புள்ள மகளுக்கு —
என் வயது, 57; என் கணவர் வயது, 65. என் பெற்றோருக்கு மூன்று பெண்கள். முதல் இருவரையும் நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைத்தவர்கள், கடைசி பெண்ணான என்னை மட்டும், குலத் தொழிலான, முடி திருத்தும் தொழில் செய்பவருக்கு மணம் செய்வித்தனர். எனக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரு பிள்ளைகள். இருவரையும் கஷ்டப்பட்டு நன்றாக படிக்க வைத்தேன். மகளுக்கு திருமணமாகி, இரட்டை ஆண் குழந்தைகளுடன் என் வீட்டின் அருகிலேயே வசிக்கின்றனர்.
மகனுக்கு வயது, 34; எம்.காம்., படித்துள்ளான். நல்ல வேலைக்கு போவான் என்று நினைத்தேன்; ஆனால், நண்பர்கள் பேச்சை கேட்டு, 'ஜெராக்ஸ்' கடை வைத்தான். நான், வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. இந்நிலையில், கடையில், வேலைக்கு சேர்ந்தாள், ஒரு பெண். அவளுக்கு திருமணமாகி, ஏழாம் வகுப்பு படிக்கும் மகளும், கல்லூரியில் படிக்கும் மகனும் உள்ளனர். அவளுக்கு தற்போது, கணவர் இல்லை. அவள், என் மகனின் புத்தியை மாற்றி விட்டாள். பெற்றோர் பாசமே இல்லாமல், அவளுடன் குடும்பம் நடத்துகிறான், என் மகன். எங்களை பார்க்க வருவதோ, என் மகளிடம் பேசுவதோ இல்லை. கேட்டால், எந்த பதிலும் சொல்வதில்லை.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டால், 'பத்து ஆண்டுகளாய் காதலிக்கிறேன்; அவளை விட்டு வர மாட்டேன்...' என்கிறான்.
என் உடன் பிறந்தவர்கள் எல்லாரும் அவனுக்கு தான் சாதகமாக பேசுகின்றனர். என் மகன், எங்களை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று நம்பினோம்; ஆனால், இப்படி செய்து விட்டான். அவனை நினைத்து, வீட்டிற்குள் முடங்கி, தினமும், அழுதபடி இருக்கிறேன். ஒருநாள் கூட நிம்மதியாக இருந்ததில்லை.
தற்போது, அவனிடம், 'உனக்கு பெற்ற தாய் தகப்பன் வேண்டாம் எனும் போது, நாங்களும் உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டோம்...' என்று ஸ்டேஷனில் வைத்து கடிதம் எழுதி, கையெழுத்து போட சொல்லி கேட்கலாம் என்று நினைக்கிறோம். நீங்கள் நல்ல பதிலை தர வேண்டும். நான், என் கண்ணீரில் இக்கடிதத்தை எழுதுகிறேன். நான், என் மகன் மீது அதிகமாக பாசம் வைத்து உள்ளேன். அவள் மிகவும் மோசமான பெண்; அவளை எப்படி மருமகளாக ஏற்க முடியும்?
காவல் துறையில் பணியாற்றும் என் அக்கா பெண்ணும், காவல் துறை அதிகாரியாக உள்ள ஒன்று விட்ட தம்பியும் என் மகனுக்கு தான் ஆதரவாக பேசுகின்றனர். பலருக்கு நீங்கள் தக்க ஆலோசனை சொல்லியுள்ளீர்கள். அதுபோல எனக்கும் நல்ல ஆலோசனை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உன் அம்மா.
அன்பு அம்மாவுக்கு —
உங்கள் கணவர், சிகை அலங்காரக் கலைஞராக பணிபுரிவது, இழிவான விஷயமல்ல. உங்கள் மகன், தன் படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போகாமல், ஜெராக்ஸ் கடை வைத்தது, அவனுக்கு பெரிய சறுக்கல் தான்; அத்துடன், கடையில், வேலை செய்யும், 40 வயது பெண்ணுடன் உறவு வைத்திருப்பது துரதிருஷ்டமானது. அப்பெண்ணின் கணவன் இறந்து விட்டானா அல்லது ஓடி விட்டானா என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. உங்கள் தம்பி மற்றும் அக்காள் மகள் அனைவரும், உங்கள் மகன் பக்கம் தான் என்றால், அவனது காதலில், ஏதேனும் நியாயத்தை கண்டிருக்க கூடும்.
உங்கள் மகன் முறைப்படி திருமணம் செய்து, குழந்தைகளை பெற்ற பின், கள்ளக்காதலில் ஈடுபடவில்லை; சரியோ, தவறோ தன்னை விட, மூத்த பெண்ணை, 10 ஆண்டுகளாக காதலிக்கிறான். அவளுக்காக, உறவுகளை உதறி விட, தயாராய் இருக்கிறான்.
மகன் வேண்டாம் என, காவல் நிலையத்தில் கையெழுத்து போட நினைப்பது விவேகமான செயல் அல்ல. என்ன செய்தாலும், அவன் உங்கள் மகன் தான். அவன், அந்த பெண்ணை, முறைப்படி திருமணம் செய்து கொள்ள விழைந்தால் அனுமதியுங்கள். அப்பெண்ணின் பிள்ளைகளை நீங்கள் பேரன், பேத்தியாக பாவிக்க வேண்டாம். உங்கள் கோபதாபத்தை குறைத்து மகனிடம் மட்டும் உறவு பாராட்டுங்கள்.
வாரம் ஒருமுறை, மகள் வீட்டுக்கு சென்று, பேரக்குழந்தைகளை கொஞ்சுங்கள். நாம் பிறக்கும் போதே, பிள்ளைகளுடன் பிறக்கவில்லை. இறக்கும் போதும் அவர்களை கூட அழைத்துக் கொண்டு போகப் போவதில்லை. எல்லாம் இடையில் வந்த பந்தம், இடையில் போனால் அழுது புலம்ப வேண்டாம். வாழ்க்கையை தத்துவார்த்தமாக எதிர் கொள்ளுங்கள். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் தொடர்ந்தபடி தான்
உள்ளது. அதனால், உணர்ச்சிவசப்படாமல், அறிவுப்பூர்வமாக பிரச்னைகளை அணுகினால், நிச்சயம் தீர்வு கிடைக்கும்.
பொருளாதார ரீதியாய் வசதியாய் இருந்தால் நீங்களும், உங்கள் கணவரும் ஆன்மிக சுற்றுலா செல்லுங்கள். வாராவாரம் கோவிலுக்கு சென்று வாருங்கள்; மனதிற்கு பிடித்ததை, சமைத்து சாப்பிடுங்கள்; ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று, ஒருநாள் தங்கி, அங்கிருப்போரின் சோகக் கதைகளை கேளுங்கள்; அவர்களின் சோகங்களுக்கு முன், உங்கள் சோகம் ஒன்றுமில்லை என்று தோன்றும்.
உறவு சிக்கல்கள் தீர, சிறந்த மருந்து சமரசம். தன் இருப்பை, நிலைப்படுத்தி, தலையை மட்டும் வளைந்து கொடுக்குமே நாணல், அதை போல இருப்போமே!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
