தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆணவம் வேண்டாமே!

ஆணவம் வேண்டாமே!

ஆணவம் வேண்டாமே!


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவ.,21 கால பைரவாஷ்டமி

பணம், பதவி, படிப்பு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, தாங்களே உயர்ந்தவர் என்ற ஆணவத்தில், மற்றவர்களை, மட்டம் தட்டிப் பேசுவது, சிலரது குணம். இதை, உலகுக்கு உணர்த்த, பைரவராக அவதாரம் எடுத்தார், சிவபெருமான்.

படைக்கும் தொழிலைச் செய்பவர், பிரம்மா; ஆனால், அவரையே உருவாக்குபவர்கள் சிவனும், விஷ்ணுவும்!

ஒவ்வொரு யுகத்தின் முடிவில், சாதாரண உயிரினங்களை போல் அழிந்து, அடுத்த யுகத்திற்காக படைக்கப்படுகிறார், பிரம்மா.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அதேபோன்று, படைப்பு தொழிலைக் கவுரவப்படுத்தும் வகையில், பிரம்மாவுக்கும் ஐந்து முகங்களைத் தந்திருந்தார், சிவன். இதன் காரணமாக, தானும் சிவனுக்கு நிகர்; தன்னால் தான் உலக உயிர்கள் படைக்கப்படுகிறது என்ற ஆணவம் பிரம்மாவிற்கு ஏற்பட்டது. அவரது ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு முகத்தை அகற்றி விட்டார் சிவன். அதற்காக, அவர் எடுத்த அவதாரமே பைரவர்.

தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், பைரவருக்கு சன்னிதி இருக்கும். இவருக்கு அஷ்டமி திதி சிறப்பு; குறிப்பாக, கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை, 'கால பைரவாஷ்டமி' எனக் குறிப்பிடுவர். அஷ்டமி திதி பயத்தை தரக்கூடியது; இதனால் தான், அந்த திதியை, சுபநிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால், அத்திதியைத் தேர்ந்தெடுத்து பிறந்து, மக்களுக்கு பயத்தைப் போக்கி, ஆனந்தத்தை தருகின்றன, தெய்வங்கள்.

கிருஷ்ணாவதாரம் எடுக்க, இந்த திதியையே தேர்ந்தெடுத்தார், திருமால். அதனால், இதை, 'ஜென்மாஷ்டமி' என்பதுண்டு. துர்க்கை வழிபாட்டையும், அஷ்டமியன்று செய்வதன் மூலம், பயம் நீங்கும்.

சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் ஆகிய இடங்களில் உள்ள பைரவர் கோவில்கள், மிகவும் சிறப்பு மிக்கவை.

இதில், வைரவன்பட்டி கோவிலில் உள்ள பைரவர், தனிச்சன்னிதியில், வலப்புறம் திரும்பிய நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். இவரை, 'வைரவர்' என்று அழைக்கின்றனர். இக்கோவில் குளத்திலுள்ள தீர்த்தத்தை, தலையில் தெளித்தாலே, பாவங்கள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கருவறை சுற்றுச்சுவரில், விஸ்வரூப ஆஞ்சநேயரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார், ராமபிரான். இலங்கைக்கு சென்று, சீதை நலமுடன் இருப்பதை அறிந்து, தன்னிடம், நற்செய்தி கூறியதால், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கை கூப்பி வணங்கியதாக, தல வரலாறு கூறுகிறது.

நம் பணியாளராக இருப்பினும், அவர் திறமை மிக்கவராக இருந்தால், வணக்கத்துக்குரியவர் என்பதை இந்த அரிய காட்சி, நமக்கு எடுத்துரைக்கிறது. அகம்பாவம் ஒழிந்து, பணிவான குணம் பிறக்க, இவரை வழிபடுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து, காரைக்குடி செல்லும் சாலையில், 8 கி.மீ., தூரத்தில் உள்ளது, இக்கோவில்.



- தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us