PUBLISHED ON : மார் 08, 2020

பாண்டியர் பரம்பரையில், செண்பக பாண்டியர் என்பவர், வீரம், விவேகத்தில் சிறந்தவர். ஈசனிடம், ஈடு இல்லாத பக்தி கொண்டவர். அவர் மனைவி பெயர், வில்வவதி. அரசரின் குலதெய்வம், சிவ பெருமான்; வழிபடும் தெய்வம், அதாவது, இஷ்டதெய்வம், முருகப்பெருமான்.
அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டுத் திரும்புவதை, வழக்கமாக கொண்டிருந்தார், அரசர். ஒருநாள், அவரின் ஆத்மார்த்தமான வழிபாட்டிற்கு அருள்புரிய தீர்மானித்த, முருகன், முனிவர் வடிவில் வந்து, அரசரின் படுக்கையில் படுத்திருந்தார்.
வழிபாடு முடித்து, திரும்பிய அரசர், அரண்மனையில் நுழைந்ததும், இனிமையான-, மனதை அமைதிப்படுத்தும் நறுமணம் கமழ்வதை உணர்ந்தார். வாசம் வந்த வழியே நடந்தார்; படுக்கையறையில் முனிவர் ஒருவர் படுத்திருந்தார்.
அதைக்கண்ட அரசர் வியந்து, விசாரிப்பதற்குள், படுக்கையை விட்டு எழுந்த முனிவர், அரசரிடம் ஒரு குளிகையை தந்து, 'பிடி இதை; சக்தி நிறைந்தது இது...' என்று சொல்லி, மந்திர உபதேசமும் செய்து, மறைந்தார்.
வந்தவர், வடிவேலன் என்பதைப் புரிந்து கொண்டார், அரசர். பிறகென்ன, மந்திர உபதேசம் பெற்றவர், முருகப்பெருமான் தந்த குளிகையின் உதவியால், யாரும் அறியாதவாறு தினமும் காசி சென்று, வழிபட்டு திரும்புவதை வழக்கமாக கொண்டார்.
இதை அறிந்த அரசரின் மனைவி, 'என்னையும் அழைத்துச் செல்லுங்களேன்...' என, வேண்டினார்.
யோசித்தார், அரசர்.
அழைத்துப் போகுமாறு, முருகப்பெருமான் உத்தரவு கொடுக்கவே, அரசரும், தன் மனைவியுடன், காசி சென்றார்.
திரும்பி வரும் வழியில், மதுரையை நெருங்கும் நேரத்தில், வீட்டு விலக்கானார், அரசி. பயணத்தை நிறுத்தி, மதுரையிலேயே தங்கினார், அரசர். ஐந்தாவது நாள், மனைவியுடன் கோவிலுக்கு போய், ஸ்ரீ மீனாட்சி- சுந்தரேஸ்வரரை வணங்கினார், அரசர்.
அப்போது, சோமசுந்தரப் பெருமான், அசரீரியாக, 'உன் ஊர் பக்கத்திலேயே இனி, காசியை காணலாம்...' என்றார்.
நேரே செண்பக முனிவரிடம் சென்று, நடந்ததை சொல்லி, 'காசியை காட்டுங்கள் சுவாமி...' என, வேண்டினார்.
அதே நேரம், 'அரசே... சித்தர் வடிவில் சிவபெருமானே வந்து, வழி காட்டுவார்...' என, அசரீரி ஒலித்தது. அன்றிரவு, அரசரின் கனவில் சிவன் காட்சியளித்து, 'இங்கு, அருகிலேயே இருக்கிறது தென்காசி. நாளை, இங்கிருந்து, ஓர் எறும்பு வரிசை மேற்கு நோக்கிப் போகும்; அந்த வரிசை முடியும் இடமே, தென்காசி. எறும்பு வரிசையைத் தொடர்ந்து செல்...' என்று அருளி, மறைந்தார்.
கனவு கலைந்த, அரசர், மறுநாள் அதன்படியே செயல்பட்டு, சித்திரா நதியின் கரையில், நந்தியும், சிவலிங்கமும் இருக்கக் கண்டார். எல்லையற்ற ஆனந்தத்துடன், சிவனருளால் கோவில் எழுப்பி, இறைவன் சொன்னபடியே, தென்காசி எனும் நகரத்தையும் உருவாக்கினார்.
இந்த அரசரை, 'காசி கண்ட பராக்ரம பாண்டியர், அரிகேசரி தேவர்' என, சரித்திரம் கூறுகிறது.
அரசரின் துயர் தீர்த்து, இந்த தென்காசி கோவிலில் எழுந்தருளியிருக்கும், ஈசனும் - அன்னை குழல்வாய் மொழியம்மையும், நம் துயரையும் தீர்க்க வேண்டுவோம்; முனிவர் வடிவில் வந்து, அரசருக்கு உபதேசித்த முருகன், நமக்கும் அருள்புரிய வேண்டுவோம்!
பி. என். பரசுராமன்
