தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 08, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 08, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எங்களாலும் முடியும்!



நாங்கள் சாதாரண

பெண்கள் இல்லை

எங்கள் வம்சம்

இதிகாச நாயகிகளைக்

கொண்டது!

அதிலொருத்தி

சூரியனை

உதிக்க விடாமல்

தடுத்தாள்!

இன்னொருத்தியோ

கணவனை

எமனிடமிருந்து

மீட்டு வந்தாள்!

கணவனின் தேருக்கு

கட்டை விரலையே

கடையாணியாக்கினாள்

ஒருத்தி!

மூன்று தேவர்களையும்

குழந்தையாக்கி

பாலுாட்டியவளும்

எங்கள் வம்சம் தான்!

கேட்பதற்கே

பெருமையாக

இருக்கிறதல்லவா...

எங்களாலும்

இந்த வித்தையெல்லாம்

செய்ய முடியும்!

ஆனால் -

நேரம் தான் இல்லை...

குடம் குடமாய்

தண்ணீர் பிடிப்பதிலும்

ரேஷனுக்கு

'க்யூ'வில் நிற்பதிலும்

மிச்ச நேரத்துக்கு

ஆபீஸ் போக

பஸ்சுக்கு நிற்பதிலுமே

எங்கள் பொழுது

போய் விடுகிறது!

இல்லாவிட்டால்

எங்களாலும்

இதையெல்லாம்

செய்ய முடியும்!

ர. ஐவண்ணம், திருவண்ணாமலை.

பிரமித்து போகட்டும்!



அவர்கள் பிரமித்து போகட்டும்

உன் அழகைப் பார்த்தல்ல...

உன் அறிவைப் பார்த்து!

அவர்கள் திணறிப் போகட்டும்

உன் தேகத்தைப் பார்த்தல்ல...

உன் திறமையை பார்த்து!

அவர்கள் வாயை பிளந்து நிற்கட்டும்

உன் வளைவுகளைப் பார்த்தல்ல...

உன் வாழ்க்கையை பார்த்து!

அவர்கள் அசந்து போகட்டும்

உன் மெல்லிடையை கண்டல்ல...

உன் மேலாண்மையை கண்டு!

அவர்கள் சிலையாய் நிற்கட்டும்

உன் வெட்கப் புன்னகை பார்த்தல்ல...

உன் வீர புன்னகை பார்த்து!

அவர்கள் பித்தம் கொள்ளட்டும்

உன் நெற்றி வனப்பை கண்டல்ல...

உன் வெற்றி அடுக்கை கண்டு!

அவர்கள் சங்கடம் கொள்ளட்டும்

சமைந்த உன் பெண்மையை கண்டல்ல...

சமயோசிதமாய் முடிவெடுக்கும்

உன் திண்மையை கண்டு!

அவர்கள் ஒடுங்கி போகட்டும்

உன் ஓரப் பார்வை கண்டல்ல...

உன் ஒழுக்கப் பார்வை கண்டு!

போக பொருளாய் பார்த்த கண்ணை

ஏகலைவியாய் பார்க்க வைக்கும் திறமை

உன்னிடம் தான் உள்ளது பெண்ணே...

அழகால் உன்னை அடையாளப்படுத்தாமல்

அறிவால் உன்னை அடையாளப்படுத்து!

உன்னுள் கட்டி வைத்திருக்கும்

சக்தியை வெளியே இழுத்து வா...

உன்னை தொட்டு பார்க்க நினைத்தவர்

எட்டி நின்று வணங்கட்டும்...

தெய்வத்தை கண்டது போல்!

கா. பவித்ரா, திண்டுக்கல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us