
நாம் செய்யும், செயலை வைத்து தீர்மானிக்கப்படுவது அல்ல, பாவ-புண்ணியம்; செயலின் விளைவை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை விளக்கும் கதை இது:
வேடன் ஒருவன், மனைவி மக்களுடன் வாழ்ந்து வந்தான். விலங்குகளை கொல்வதும், கண்ணி -வலைகளை வைத்து பறவைகளை பிடிப்பதும் தான், அவனின் தொழில்.
ஒருநாள், காட்டில் வெகு துாரம் அலைந்து, திரிந்தும், வேடனுக்கு, அன்று ஏதும் கிடைக்கவில்லை. சோர்ந்து, களைத்து, மிகுந்த பசியுடன் ஒரு குளக்கரைக்கு வந்தான்.
'தெய்வமே... என் குடும்பம் முழுவதும், நாளை பட்டினி கிடக்கும்படியான நிலை உண்டாகி விட்டதே... என்ன செய்வேன்?' என்று கண்கலங்கி, தண்ணீர் குடிக்க போனான்.
அப்போது, எதிர் கரையில் பயங்கரமான உறுமல் கேட்டது. கையில் அள்ளிய தண்ணீரை, அப்படியே குளத்தில் சிதற விட்டு நிமிர்ந்து பார்த்தான், வேடன்.
எதிர் கரையில், விசித்திரமான தோற்றம் கொண்ட ஒரு விலங்கு இருந்தது. அதற்கு பார்வை கிடையாது. அப்படிப்பட்ட பயங்கரமான விலங்கை, அதுவரை பார்த்ததில்லை, வேடன். இருந்தாலும், குருட்டு விலங்கை கொல்வதா என, தயங்கினான்.
அப்போது, மனைவி, மக்கள் பசியால் வாடும் முகங்களின் தோற்றம், வேடனின் மனதில் காட்சியளித்தது. துணிந்து, அந்த விலங்கின் மீது, அம்பை எய்தான்.
பயங்கர ஓலமிட்ட விலங்கு, துடிதுடித்து விழுந்து இறந்தது. அதே விநாடி, ஆகாயத்திலிருந்து தேவர்கள், மலர் மாரி பொழிந்தனர்.
திகைத்தான், வேடன். வானுலக விமானம் ஒன்று, அவன் எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து வெளிப்பட்ட தேவர்கள், சகல மரியாதைகளுடன் வேடனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சொர்க்கத்துக்கு சென்ற விபரம், வேடனுக்கு சொல்லப்பட்டது. அதாவது, முனிவர் ஒருவர், பிரம்மாவை நினைத்து, கடுந்தவம் செய்தார்; தவத்திற்கு இரங்கிய பிரம்ம தேவர், முனிவர் முன் காட்சி தந்து, 'வேண்டியது என்ன?'- என்று கேட்டார்.
'நான்முகனே... உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் கொல்லக் கூடிய சக்தியை எனக்கு அளியுங்கள்...' என, வேண்டினார், முனிவர்.
'அசுரர்கள் கூட, இப்படிப்பட்ட வரத்தை கேட்க மாட்டார்களே...' என்று நினைத்தார், பிரம்மா. நினைப்பு, சாபமாக வெளிப்பட்டது.
'முனிவனே... நீ ஒரு குருட்டு விலங்காக பிறப்பாய்... உன்னை கொல்பவனுக்கு, சொர்க்க யோகம் கிடைக்கும்...' என்றார், பிரம்மா.
அந்த முனிவரின் தீய எண்ணமே, அவரை விலங்காக பிறக்க வைத்து, வேடன் மூலமாக அவர் கதையை முடிக்கவும் வைத்தது.
தீய எண்ணம், கீழான நிலையை அளிக்கும் என்பதை விளக்குவதோடு, பாவம் என்பது, செயலைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல; செயலின் விளைவைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது என்பதும் புரிந்ததா!
பி. என். பரசுராமன்

