
இயக்குனர்களை வியக்க வைத்த, அஜீத்!
அஜீத் என்றாலே, சட்டையில் துாசு ஒட்டாமல் சண்டை போடக் கூடியவர் என்பது, பல இயக்குனர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த, 'இமேஜை' மாற்றும் முயற்சியாக, வலிமை படத்தில், அதிரடியான, 'ஆக் ஷன்' காட்சிகளில் நடித்து வரும், அஜீத், ஒரு காட்சியில், 100 அடி உயரத்தில் நின்றபடி, பறந்து பறந்து, சண்டை செய்திருக்கிறார். இப்படி, 'ரிஸ்க்' எடுத்து நடித்து வரும் சேதி கேட்டு, கோடம்பாக்கத்திலுள்ள சில இயக்குனர்கள், 'அஜீத்தா இப்படி...' என, ஆச்சர்யப்படுகின்றனர்.
— சினிமா பொன்னையா
சூடு பறக்க தயாரான, சுனைனா!
வாய்ப்பு குறைந்து விட்டதால், குணசித்திர நடிகையாக, சில படங்களில் நடித்துள்ள சுனைனா, தான் ஏற்கனவே நடித்த சில, 'ஹிட்' பட, கதாநாயகர்களுடன் மீண்டும் இணைய, துரத்தி வருகிறார். அதோடு, 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பது போல், தன் பழைய சட்ட திட்டங்களை கடாசி விட்டு, இறங்கி அடிக்க தயாராகி விட்டதாக சொல்லி வரும், சுனைனா, 'பிகினி, லிப் டு லிப்' முத்தக் காட்சிகளில் சூடு பறக்கவும், 'கிரீன் சிக்னல்' காட்டியுள்ளார். போவதும் வருவதும் மோட்டார் வண்டி; பொங்கி தின்பது புது மண் சட்டி!
எலீசா
நயன்தாராவின் பங்களிப்பு!
கதாநாயகியாக நடித்தபோது, இயக்குனர்களின் நடிகையாக இருந்தார், நயன்தாரா. ஆனால், கதையின் நாயகியான பின், இயக்குனர்கள் சொல்வதை கேட்டு, தன் பாணியையும் அதில் கலந்து நடித்து வருகிறார். அதோடு, சொந்த வசனங்களையும் கலந்து பேசி நடித்து வரும், நயன்தாரா, 'என் பங்களிப்பும் இருந்தால் தான் கதையில், 'இன்வால்மென்ட்' அதிகமாக இருக்கும். அதனால் தான் இப்படி செய்கிறேன்...' என்று, இயக்குனர்களை சமாதானப்படுத்தி விடுகிறார். பட்டத்து ஆனை பல்லக்குப் பின்னே வருமா!
—எலீசா
ராம்கோபால் வர்மாவின், கடைசி ஆசை!
என்.டி.ஆர்., - ஜெகன்மோகன் ரெட்டி போன்ற, ஆந்திர அரசியல் புள்ளிகளின், வாழ்க்கை வரலாறு படத்தை, இயக்கி, சர்ச்சையை ஏற்படுத்தினார், இயக்குனர், ராம்கோபால் வர்மா. அவரிடம், 'ஸ்ரீதேவியின், வாழ்க்கை வரலாறை படமாக்குவீர்களா?' என்று கேட்டனர். அதற்கு, 'ஸ்ரீதேவியின் வாழ்க்கையை, படமாக எடுப்பது கடினம்; நான் உயிர் வாழ, கடைசியாக, ஒரு மணி நேரம் மட்டும் உள்ளது என்றால், ஸ்ரீதேவியின் கல்லறையில் வாழ ஆசைப்படுகிறேன். அதோடு, அவரின் கல்லறை அருகே, என்னையும் தகனம் செய்ய வேண்டும் என்பதே கடைசி ஆசை...' என்று சொல்லி, பாலிவுட்டில், இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
'ஆக் ஷன் கிங்' நடிகர், 'செகன்ட் இன்னிங்'சில், வில்லனாகவும்; இப்போது, குணசித்திர வேடங்களிலும் நடிக்கிறார். அப்படி நடிப்பவர், கதாநாயகனுக்கு இணையாக, தன் கதாபாத்திரமும் இருக்க வேண்டும் என்று சொல்வதோடு, 'பர்பாமென்ஸ்' ரீதியாக, அவர்களை பின்னுக்கு தள்ளியும் விடுகிறார். அந்த வகையில், 'ஆக் ஷன் கிங்'குடன் இணைந்து நடித்த, மெரினா நடிகரின், கதாநாயகன், 'இமேஜை'யே ஒரு படத்தில், காலி பண்ணி விட்டார். இதனால், அடுத்தபடியாக, அவருடன் நடிக்கயிருந்த சில இளசுகள், தங்களது கதாநாயகன், 'இமேஜை' காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாக, 'எங்கள் படத்திற்கு, 'ஆக் ஷன் கிங்' நடிகரே தேவையில்லை...' என்று, தயாரிப்பாளர்களுடன், போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.
'டேய் சிவா... தொழில்ல, அந்த அர்ஜுனை கூட்டு சேர்க்காதேன்னு சொன்னேனே கேட்டியா... அனுபவம் உள்ளவன், உதவியா இருப்பான்னு சொன்னே... இப்ப என்னாச்சு... தன் அனுபவ அறிவால், உன்னை கவிழ்த்துட்டு, 'பிசினசை' புடிச்சுட்டான். இனியாவது, உஷாரா இருந்துக்க...' என்று அறிவுறுத்தினார், அப்பா.
சினி துளிகள்!
* கதாநாயகனாக நடித்த படங்கள் தோல்வியடைந்ததால், வில்லன், குணசித்திர வேடம் என்று, நடித்து வரும் அர்ஜுன், முன்னணி கதாநாயகர்களின் படங்களில், முக்கிய வேடங்களில் நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார்.
அவ்ளோதான்!

