PUBLISHED ON : அக் 03, 2010

அக்., 8 - நவராத்திரி ஆரம்பம்!
பெண் பாவம் மட்டுமல்ல, அவர்களது கோபமும் பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும். எந்த ஒரு வீட்டில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லையோ, அங்குள்ளவர்கள் பல ஜென்மங்கள் எடுத்து, நரகத்தையே அடைவர். எனவே, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், நம் முன்னோர் சில திருநாட்களையும், விரதங்களையும் உருவாக்கினர். அதன் மூலம் பெண்களுக்கு ஆன்மிக அறிவு புகட்டப்பட்டது. இதனால், அவர்கள் தங்களுக்குள்ளேயே கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டனர். இதனால், குடும்ப வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படவில்லை.
பெண்களுக்கு இயற்கையாகவே தைரியம் அதிகம். பெரும்பாலான சிவன், பெருமாள் கோவில்களில் சுவாமிகள் தனித்து இருப்ப தில்லை; அம்பாள் மற்றும் தாயாருடனேயே இருப்பர். ஆனால், சமயபுரம், புன்னைநல்லூர், பெரியபாளையம், மயிலாப்பூர், சோட்டாணிக்கரை இன்னும் எத்தனையோ இடங்களில் அம்மனுக்கென தனிக்கோவில்கள் உள்ளன. பெண்கள் தனித்து வாழ்ந்தாலும் கூட, தெய்வீகத் தன்மையுடனும், தைரியத்துடனும் வாழ முடி யும் என்பதை எடுத்துக்காட்டவே இப்படி செய்தனர். பெண்களிடம் தைரியத்தை வளர்க்கும் வகையிலேயே, நவராத்திரியுடன் தொடர்புடைய புராணக்கதையும் இருக்கிறது.
ரம்பன் என்ற அசுரன் தகாத ஆசை கொண்டு, ஒரு எருமையுடன் உறவு கொண்டான். அந்த எருமைக்கு எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட மகன் பிறந்தான். எருமையை, 'மகிஷம்' என்பர்; எனவே, அவன் மகிஷாசுரன் எனப்பட்டான். அவன் பல தவங்கள் இருந்து, பெண்களை அலட்சியமாக நினைத்து, ஒரு பெண்ணைத் தவிர மற்றவர்களால் தனக்கு அழிவு நேரக்கூடாதென தேவர்களிடம் வரம் பெற்றான். இதைப் பயன்படுத்தி, பல கொடூரச் செயல்களைச் செய்தான். உலகில் தர்மம் அழிந்து, அநியாயம் ஓங்கியது. தேவர்கள் இதுபற்றி பராசக்தியிடம் முறையிட்டனர். பிரம்மாவின் சக்தி பிராஹ்மணியாகவும், விஷ்ணுவின் சக்தி வைஷ்ணவியாகவும், ருத்ரனின் சக்தி ருத்ராணியாகவும், குமரக்கடவுளின் சக்தி கவுமாரியாகவும், இந்திரனின் சக்தி இந்திராணியாகவும், மகேஸ்வரனின் சக்தி மகேஸ்வரியாகவும், வராகரின் சக்தி வராகியாகவும், நிருதியின் சக்தி நரசிம்ஹியாகவும் ஒன்பது சக்திகள் வெளிப்பட்டன. இந்த சக்திகள் ஒன்றிணைந்து, பதினெட்டு கரங்களுடன் ஆயுதமேந்தி வந்தனர். அவள் மகிஷாசுரனை அழித்தாள். இதனால், 'மகிஷாசுரமர்த்தினி' என்று பெயர் பெற்றாள். இந்த சக்தியே சண்டமுண்டன் என்ற அசுரனை அழித்து, 'சாமுண்டி' என்றும், சும்பநிசும்பரை அழித்து, 'துர்க்கை' என்றும் பெயர் பெற்றனர். பத்ரகாளி என்று வர்ணிப்பதும் இவளைத் தான். தன் பக்தர்களுக்கு இடையூறு வந்தால் பராசக்தி பத்ரகாளியாகி விடுவாள். அவளே சாந்த நிலையில் பார்வதியாய் இருந்து இந்த உலக உயிர்களையெல்லாம் பாதுகாப்பாள்.
நவராத்திரி நாட்களில், பெண்கள், தினமும் அம்பாளுக்கு பூஜை செய்து, தங்களால் முடிந்த நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும். அம்பாளுக்குரிய பாடல்களை இனிய குரலில் பாடி, அவளை மகிழ்விக்க வேண்டும். முக்கியமாக, தைரியத்துடன் வாழ்வதற்கு, அவளது இன்னருளைக் கேட்டுப் பெற வேண்டும்.
***
