தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பின் வாங்கும் முன்னணியில் இருங்கள்!

பின் வாங்கும் முன்னணியில் இருங்கள்!

பின் வாங்கும் முன்னணியில் இருங்கள்!


PUBLISHED ON : செப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் பயணம் ஒன்றில், டிக்கெட் பரிசோதகர் ஒருவரின் இருக்கைக்கு நேர் எதிரே, என் இருக்கை அமைந்தது.

ரயில் பெட்டிக்குள் தேநீர் விற்பவரிடம், தேநீர் வாங்கி, ஒரு மடக்கு தான் குடித்தார், டிக்கெட் பரிசோதகர். உடனே, முகம் சுளித்தபடி எழுந்து, கை கழுவும் இடத்தில், தேநீரை ஊற்றி, வெற்றுக் கோப்பையை, அதன் கீழே இருந்த தொட்டிக்குள் போட்டு வந்தவர், என்னை பார்த்து, 'டீயா இது... சர்க்கரை பாகு மாதிரி அவ்வளவு இனிப்பு! 10 ரூபாய் வாங்குறாங்க; டீ போட தெரியல...' என்றார்.

பத்து ரூபாய் கொடுத்தோம் என்பதற்காக, மல்லுக்கட்டி, பிடிக்காத சர்க்கரை பாகை, அவர் குடித்து தீர்க்கவில்லை. இவருக்கு நீரிழிவு தொல்லை இருந்திருக்கலாம் அல்லது தனக்கு ஒவ்வாத ஒன்றை குடித்து, உடம்பை கெடுத்து கொள்ள மனமில்லாமல், 'பத்து ரூபாய் வீணானாலும் பரவாயில்லை; என் உடல் நலம், வீணாக கூடாது...' என்ற முடிவில் தேநீரை, கீழே ஊற்றியிருக்கலாம்.

ஆனால், பின்வாங்குவதற்கு, மிக எளிய உதாரணம் இது!

பின்வாங்குவதை, கவுரவ பிரச்னையாகவும், அசிங்கம், கேவலம், மானக்கேடு என்றும் கருதுவோர் தான் அதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்கின்றனர்.

கடைசியில், அதில் தோல்வி அடைந்து, நஷ்டப்பட்டு, 'வீண் கவுரவம் பார்த்த காரணத்தால், முன்னிலும் மோசமாக ஆகிவிட்டதே...' என்று பின்னால் வருந்துகின்றனர்.

பங்காளிகள் இடையே வழக்கு ஒன்று, நீதிமன்றத்தில், 12 ஆண்டுகளாக நடக்கிறது. ஒன்றும் முடிந்த பாடில்லை; முடிவதற்கான அறிகுறியும் இல்லை.

'சுப்ரீம் கோர்ட் வரைக்கும் அவரை விடுவதாக இல்லை...' என்ற வாக்குமூலம், ஒரு பங்குதாரர் சொன்னது, மற்றவரின் காதுகளை வந்து அடைகிறது.

'பங்காளியின் மன உறுதி, இப்போது தெரிந்து விட்டது; இனியும் இவரோடு போராடி, பயன் இல்லை...' என்கிற முடிவுக்கு, அவர் வருகிற போது, சுற்றியிருப்பவர்கள், இம்முடிவை ஆதரிக்கவில்லை.

'விடக்கூடாதுங்க அந்த மனுஷனை... இந்த விஷயத்துல இறங்கி போனா, உங்களுக்கு ரொம்ப கேவலங்க...' என்று தூபம் போடுகின்றனர்; இவரோ, அதை மறுக்கிறார்; இழுத்தடிப்போருக்கு இன்றைய சட்டம், மிகவும் சாதகம் செய்து தருகிறது.

'என்னால், இனி நீதிமன்றத்திற்கு அலைய முடியாது. போதும்; நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்கிறேன்...' என்று துணிந்து, இவர் எடுத்த முடிவில், இவருக்கு சில இழப்புகள் ஏற்பட்டாலும், இன்று நிம்மதியாக இருக்கிறார்.

'பாவம் பயந்துட்டாரு... கேசு ஜெயிக்காதுன்னு அவருக்கே தெரிஞ்சுப் போச்சு...' என்கிற பாணியில், பேசிய வாய்கள் எல்லாம் ஓய்ந்து விட்டன. வெற்றி என்னவோ இருவருக்கும் தான்!

ஒரு பொருளை வாங்குவதில் முனைப்பு காட்டும் போது, அது நன்கு உழைக்காது என்று தெரிந்ததும், பின்வாங்குவது; ஒரு திருமணத்திற்கு சரி வர அழைப்பு இல்லை என்று தெரிந்ததும், பின்வாங்குவது; காற்றும், மழையும் கடுமையாக இருக்கிறது... புயல் எச்சரிக்கை வேறு; இந்நிலையில், பயணம் வேண்டாம் என்று கூறிய குடும்ப உறுப்பினர்களை மீறி, புறப்பட்டே தீருவேன் என்ற முடிவிலிருந்து இறுதியில், பின்வாங்குவது!

அவன் மூஞ்சியே சரியில்லை; அவனுக்கு பணம் கொடுக்காதீங்க என்கிற மனைவியின் முடிவை ஏற்று, பணம் கொடுத்தே தீருவேன் என்ற முடிவில் இருந்து பின்வாங்குவது. மேலும், அந்தக் கல்லூரியில, பையனை அவசரப்பட்டு சேர்க்காதீங்க; சரியான பேராசிரியர்களும் இல்லை; பையனும் கெட்டு போய்விட வாய்ப்பு அதிகம் என்ற அறிவுரைகளை கேட்டதும், பின்வாங்குவது என, இன்னும் பல்வேறு முடிவுகளில் பின்வாங்க நேரிடும் போது, அதை, சுயகவுரவத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்த வேண்டாம்.

மாறாக, லாப - நஷ்டங்களை ஆராய்ந்து, சீர்தூக்கிப் பார்த்து, நன்மை, தீமைகளை எடை போட்டு, இவற்றின் அடிப்படையில், தாராளமாக பின்வாங்கலாம்.

அப்போது தான், முன்னால் காலடி எடுத்து வைக்கும் காலடிக்கு மட்டுமல்ல, பின்னால் எடுத்து வைக்கும் காலடிக்கும், பாராட்டு கிடைக்கும்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us