தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண்ணுரிமை!

பெண்ணுரிமை!

பெண்ணுரிமை!


PUBLISHED ON : செப் 18, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆகாய விமானம் ஒன்று, பயங்கர சத்தத்துடன் வானில் செல்ல, கருப்பம்பட்டி கிராமத்து சிறுவர், சிறுமியர் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கைதட்டி, மகிழ்ந்து ஆரவாரித்தனர்.

விமான சத்தத்தை கேட்டு, ஆசையுடன் வெளியே ஓடி வந்தாள், சிவகாமி.

''ஏய்... ஆம்பள பையன் மாதிரி எங்க வெளிய ஓடுற... பொட்டப்புள்ள அடக்க ஒடுக்கமா, வீட்டுக்குள்ள இருக்குறத விட்டுட்டு வெளியே ஓடுறியே... பாக்கறவங்க என்ன நினைப்பாங்க... உள்ளே போ...'' அப்பா காளியின் அதட்டலுக்கு பயந்து, வீட்டிற்குள் சென்றாள், சிவகாமி.

'ச்சே... பொம்பளையாப் பிறந்தது பெரிய தப்பா...' அம்மா ஆராயியுடன் சேர்ந்து, சிவகாமி புலம்பியது, காதில் விழ, ''அங்க என்னடி முணுமுணுக்கறீங்க...'' என்று அதட்டினான், காளி.

'பாழாப் போன சாராயத்தை குடிச்சிட்டு வந்து, பொம்பளைங்ககிட்ட வீரத்தை காட்ட வேண்டியது... இந்த ஆள் திருந்தவே மாட்டார்; நல்லா படிச்சிட்டிருந்த புள்ளைய பெரிய மனுஷி ஆயிட்டாங்கிற ஒரு காரணத்த வச்சு, பள்ளிக் கூடத்த விட்டு நிறுத்திட்டார். அவ, அங்க போனாலாவது, கொஞ்ச நேரம் நிம்மதியா இருப்பா. இந்த மனுஷன நம்பி, இவள எப்படி கரை சேர்க்கப் போறேனோ...' புலம்பியபடி, கணவன் கழற்றிப் போட்ட துணிகளை துவைத்து, கொடியில் காயப் போட்டாள், ஆராயி.

தோட்டத்தில் கட்டி வைத்திருந்த பசு மாடு, சத்தம் கொடுத்தவாறு இருந்தது.

''ஏய்... செவிட்டு முண்டங்களா... பசு மாடு கத்துது, காதுல விழல... அதுக்கு தண்ணி கிண்ணி காட்டினீங்களா, இல்லயா...'' என்றான் காளி.

'இன்னைக்கோ, நாளைக்கோ கன்னு போடப் போற சென மாடு சத்தம் போடும்ன்னு தெரியாதா... குடிச்சிட்டா ஏதாவது பிரச்னை செய்றதே பொழப்பா போச்சு...' புலம்பியவாறு, மிச்சமிருந்த வேலைகளை முடித்தாள், ஆராயி.

மறுநாள் காலை -

''என்னங்க... நம்ம பசு மாடு, கன்னு போட்டுடுச்சு...''ஆராயி போட்ட சத்தத்தில், எழுந்து தோட்டத்துக்கு ஓடினாள், சிவகாமி. ஈன்ற அழகான கன்றை, அரவணைப்பாய் நாவால் நக்கி, சுத்தப்படுத்தியது அந்தப் பசு.

ஆர்வமாக ஓடி, கன்னுக் குட்டியை பார்த்த காளியின் முகம் மாறியது.

''ச்சே.. இதுவும் கெடாரியாப் போச்சே... இந்த வருஷமாவது பொட்டக் குட்டியப் போடும்ன்னு நினைச்சேனே... இப்படி செய்துடுச்சே சனியன்,'' என்று புலம்பியவன், கோபத்தில், கம்பை எடுத்து மாட்டை அடிக்க ஆரம்பித்தான்.

ஆராயும், சிவகாமியும் செய்வதறியாது, ஆளுக்கு ஒரு பக்கமாக, காளியை இழுத்து, அப்புறப்படுத்தினர்.

கோபத்தின் உச்சியில் இருந்த ஆராயி, ''தோ பாருய்யா... இனி ஒரு அடி, மாடு மேல விழுந்துச்சுன்னா, இங்க என்ன நடக்கும்ன்னு எனக்கே தெரியாது. கன்னு போட்டு, ஒருநாள் கூட ஆகல; பச்ச உசிரு. அதைப் போய், இப்படி அடிக்கறியே... நீயெல்லாம் ஒரு மனுஷனா... ச்சே... காலத்துக்கும் உன் கூட பெரிய இழவாப் போச்சு... மனுஷனுக்கு ஒரு நியாயம்; மாட்டுக்கு ஒரு நியாயமா... நான் பொட்டப் புள்ள பெத்தப்ப, இப்படித்தான் என்ன சித்ரவத செஞ்சே... இப்போ அந்த வாயில்லா ஜீவன் கெடாரி போட்டுடுச்சுன்னு இப்படி அடிக்கிறீயே... நீயெல்லாம் ஒரு மனுஷனா...'' என்றாள்.

பதில் ஏதும் பேசாமல், துண்டை தோளில் போட்டபடி, வெளியே சென்ற காளி, அடுத்த ஒரு மணி நேரத்தில், மாட்டுத் தரகருடன், வீட்டுக்கு வந்தான்.

ஆராயியும், சிவகாமியும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாமல், அப்பசுவை கன்றோடு விற்று, வண்டியில் ஏற்றி விட்டான். கையில் எவ்வளவு வாங்கினானோ தெரியவில்லை; இரண்டு நாட்களுக்கு, வீட்டுக்கு வரவில்லை.

''ஆராயி... உன் புருஷன் குடிச்சிட்டு நினைவில்லாம, கடை வாசல்ல கிடக்கானாம்; போய் என்னன்னு பாத்து, தூக்கிட்டு வாடி,'' என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னதும், ஏற்கனவே, கணவன் செய்த ரகளையில், வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த ஆராயி, வேண்டா வெறுப்பாக சென்றாள்.

இரண்டு நாட்களாக தொடர்ந்து குடித்து குடித்து மோசமான நிலையில் இருந்த அவனை, மருத்துவமனையில் சேர்த்தாள் ஆராயி. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டான் காளி. மகளை கட்டிப்பிடித்து அழுத ஆராயி,''உங்கப்பா நம்மை விட்டுட்டுப் போயிட்டாருடி... நான் என்ன செய்ய போறேனோ தெரியலயே... படிச்சி படிச்சி சொன்னேனே... பாவி மனுஷன் கேட்கலயே... இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்டுப் போயிட்டாரே...''

சடலமாய் கிடந்த அப்பாவின் உடல் அருகே சென்றாள், சிவகாமி; ஏனோ அவளுக்கு அழுகை வரவில்லை.

''காளிக்கு பொறந்த ஒத்த புள்ளையும், பொட்டப் புள்ளையாப் போச்சு... அதனால, பங்காளி உறவுல யாராவது ஒரு பையன கொள்ளி வைக்க சொல்லுங்க. இருக்கற நிலத்துல, கால் காணிய அவனுக்கு எழுதிக் கொடுத்துட சொல்லலாம்...'' என்றார் நாட்டாண்மை.

சிவகாமிக்கு ஆறுதல் சொல்ல வந்திருந்த உடற்கல்வி ஆசிரியை பாக்கியலட்சுமி குறுக்கிட்டு, ''பொம்பளப் புள்ளையா இருந்தா என்ன... பெத்த புள்ள கொள்ளி வைக்கறது தானே முறை... ஏன் ஆம்பளப்புள்ள, பொம்பளப் புள்ளன்னு பிரிச்சுப் பேசறீங்க. இதுக்காக, இருக்கற கொஞ்ச நிலத்துல, கால் காணிய விடச் சொல்றது என்னங்க நியாயம்... சிவகாமியே, அவங்க அப்பாவுக்கு, கொள்ளி வைக்கட்டும்,'' என்றாள்.

''ஏம்மா... இந்த பாடம் நடத்துற வேலைய பள்ளிக் கூடத்தோட நிறுத்திக்கோ. எங்க ஊரு விஷயத்துல தலையிடாத... ஊர்க்காரவ நாங்க முடிவு எடுத்தா எடுத்தது தான்,'' என்றார் நாட்டாண்மை.

கணவனின் உடல் அருகே தலைவிரி கோலமாய் அமர்ந்திருந்த ஆராயி, ஆவேசத்துடன் எழுந்து, ''அந்த அம்மா சொல்றதுல என்னய்யா தப்பு இருக்கு... ஆம்பளைங்க தான் கொள்ளி வைக்கணும்ன்னு எந்த சட்டத்துல எழுதி இருக்கு. இன்னும் எத்தன நாளைக்கு தான், இதையே சொல்லி, எங்கள அடக்கி வைப்பிங்க... இப்போ, நான் காளியோட மனைவியா சொல்றேன்... என் மகள் சிவகாமி தான், அவ அப்பனுக்கு கொள்ளி வைப்பா,'' என்றாள் கண்டிப்புடன்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே அப்பாவிற்கு கொள்ளி வைத்தாள் சிவகாமி.

ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதால், ஆராயி குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது பஞ்சாயத்து.

வீட்டின் மூலையில், கவலையோடு, நிராதரவாக உட்கார்ந்திருந்தாள், ஆராயி. அவள் மடியில் தலை வைத்து படுத்திருந்த சிவகாமியை மெல்ல தடவிக் கொடுத்தவாறு,''அறுத்துட்ட பொம்பளன்னு கூடப் பாக்காம, ஊரை விட்டு ஒதுக்கி வச்சிட்டானுங்களே... இனிமே நாம என்ன செய்யப் போறோம்ன்னு தெரியலயே...'' என்று புலம்பினாள் ஆராயி. அப்போது, வாசலில், ''சிவகாமி...'' என்ற குரல் கேட்க, எழுந்து வெளியே வந்தாள், சிவகாமி.

வாசலில், உடற்கல்வி ஆசிரியை பாக்கியலட்சுமி நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்ததும், அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் வெளிப்பட கேவிக் கேவி அழுதாள் சிவகாமி. அவளை ஆறுதல்படுத்திய ஆசிரியை,''அம்மா... உங்க பொண்ணு நல்லாப் படிக்கறவ; அதோட விளையாட்டுல ஆர்வமும், திறமையும் இருக்கு. அவள பள்ளிக்கூடத்துக்கு அனுப்புங்க,'' என்றாள்.

''இப்போ நாங்க இருக்குற நிலையில, என்ன செய்யப் போறோம்ன்னே தெரியல; இதுல நீங்க வேற ஏதேதோ சொல்றீங்களே...'' என்றாள் ஆற்றாமையுடன் ஆராயி.

''அவளை நல்லாப் படிக்க வச்சு, நல்ல நிலைமைக்கு கொண்டு வர்றது என்னோட பொறுப்பு; நீங்க கவலைப்படாம என்னோட புறப்படுங்க. உங்களுக்கு ஒரு வீடு பாத்து, ஏதாவது வேலை வாங்கித் தர்றேன்,'' என்று பாக்கியலட்சுமி கூறியதும், இருவரின் முகத்திலும் தெளிவு பிறந்தது.

பாக்கியலட்சுமியின் கையை பிடித்து, கதறி அழுதாள் சிவகாமி.

ஒரு சிறிய வீடு பார்த்து, அருகில் உள்ள வீடுகளுக்கு, பத்துப் பாத்திரம் தேய்க்கும் வேலையும் வாங்கிக் கொடுத்தாள், பாக்கியலட்சுமி.

பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள், சிவகாமி. இந்நிலையில், ஒருநாள், 'சிவகாமி... இன்னையிலிருந்து நீ தினமும் ஓட்டப் பந்தய பயிற்சி செய்; உன்னோட அகன்ற தோள்களும், திடமான கால்களும், ஓட்டப் பந்தயத்தில் உனக்கு இருக்கிற ஆர்வத்தாலும் நீ கண்டிப்பா ஜெயிப்பே...' என்று கூறினாள் பாக்கியலட்சுமி. ஆசிரியையின் வார்த்தை அவளுள் முழு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மறுநாளிலிருந்து தினமும் காலையும், மாலையும் கடுமையான பயிற்சி மேற்கொண்டாள் சிவகாமி. அதன் விளைவாக, ஆண்டு இறுதியில், பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெற்ற, 200 மீட்டர், 500 மீட்டர், 1,000 மீட்டர் பிரிவுகளில், பங்கு பெற்று, முதல் பரிசை பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானாள். அதிலும், தங்கப்பதக்கம் வென்று அசத்திய சிவகாமியின் வீட்டை, பத்திரிகைகளும், ஊடக நிருபர்களும் முற்றுகையிட்டனர். 'ஒரு ஆசிரியர் நினைத்தால்...' என்ற தலைப்பில், சிவகாமியின் சாதனை பத்திரிகைகளில் வெளியாகின. ஆராயி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

ஆண்டுகள் கடந்தன... அவளது சாதனைகளும் தொடர்ந்தன. மேல்நிலைக் கல்வியில், அறிவியல் பாடம் தேர்வு செய்து, நல்ல மதிப்பெண்களும் பெற்ற சிவகாமிக்கு, விளையாட்டுப் பிரிவில், மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்தது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே, ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து, ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றாள். மருத்துவ படிப்பு முடிந்ததும், அவளது சாதனையை பாராட்டி, மருத்துவர் வேலை வழங்கியது, அரசு.

அதன்பின், தொடர்ந்து நான்கு முறை தங்கம் வென்று, தங்க மங்கையாக ஜொலித்தாள், சிவகாமி.

அன்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்காவது முறை தங்கம் வென்று ஊர் திரும்பிய சிவகாமியை, ஊடகங்கள் நேர்காணல் செய்தன... 'நான்காவது முறையாக, தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்றுள்ளீர்கள். இது எப்படி உங்களுக்கு சாத்தியமானது...' என்று கேள்வி கேட்ட போது, ''பொட்டப்புள்ளன்னு சொல்லிச் சொல்லி, என்னை அடக்கி வளர்த்தார், என் அப்பா. ஆனா, பள்ளிப் பருவத்திலிருந்தே, என் திறமையை கண்டறிந்து, எனக்கு ஓட்டப் பயிற்சி அளித்து, ஊக்குவித்து வந்தார், என் ஆசிரியை பாக்கியலட்சுமி. ஆசிய விளையாட்டுப் போட்டியில், முதல் முறை தங்கம் வென்ற போது, என் ஆசிரியையிடம் ஆசி பெற்று, பதக்கத்தையும், பரிசுத் தொகையையும் அவரிடம் கொடுத்து, நான் பிறந்த கிராமத்துக்கு, மின்சார வசதி ஏற்பாடு செய்யுமாறு கோரினேன்.

''அதற்கு அவர், 'இத்தொகை போதாது; நீ இன்னமும் நிறைய போட்டிகளில் வென்று சாதித்தால், பதக்கங்களை ஏலம் விட்டும், பரிசுத் தொகையை கொண்டும், உன் கனவை நனவாக்கலாம்...' என்றார். அதற்காகவே, இந்த சாதனை,'' என்றாள்.

அவளது, அழகான, அர்த்தமுள்ள பேட்டி, கருப்பம்பட்டி கிராமத்து மக்களை சென்றடைந்த போது, அனைவரும் நெகிழ்ச்சியில் கண் கலங்கினர்.

இதுவரை, இருட்டில் கிடந்த கருப்பம்பட்டி கிராமம், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோலம் பூண்டிருந்தது. பாக்கியலட்சுமி, ஆராயி மற்றும் சிவகாமியை மேளதாளத்துடன் வரவேற்று, ஊருக்குள் அழைத்து வந்தனர், ஊர் மக்கள்.

அப்போது, வானத்தில் பயங்கர சத்தத்துடன், ஆகாய விமானம் ஒன்று பறந்து சென்றது. கூடியிருந்த சிறுவர்களோடு சேர்ந்து, வானத்தை நிமிர்ந்து பார்த்து, ஆரவாரித்து, கையசைத்து மகிழ்ந்தாள், 'தங்க மங்கை' சிவகாமி!

பூபதி பெரியசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us