
ஆற அமர, ஆறு இட்லிகளை உண்போரும் உண்டு; நின்றபடி, ஏதோ தலையணை உறைக்குள் பஞ்சைத் திணிப்பது போல், உணவை வாய்க்குள் திணித்து ஓடுவோரும் உண்டு.
தீபாவளி உடைகள் மற்றும் பள்ளிச் சீருடையை தைக்கக் கொடுப்பவர்கள், தையல் கலைஞருக்குப் போதிய அவகாசம் தராமல், முதல் நாள் கொடுத்து, மறுநாளே வேண்டும் என்று கேட்டால், பாவம், அவர் என்ன செய்வார்!
பின், தையல் கோணல், காஜா போட்டது சரியில்லை என்றால், எப்படிச் சரியாக வரும்!
சென்னை - திருச்சிக்கு, ௫:௩௦ மணி நேரப் பயணம் என்றால், அதற்கு உரிய நேரத்தை, வாகனம் ஓட்டுபவருக்குத் தர வேண்டும். இதை, ஐந்து மணி நேரமாக ஆக்கினால் கூட ஓட்டுனர் சமாளிப்பார்; இதையே, நான்கு மணி நேரமாக்க ஆசைப்பட்டால், போய் சேருகிற இடம் திருச்சியாக இருக்காது. அது, மருத்துவமனையாகவோ, திரும்பி வர முடியாத இடமாகவோ ஆகிவிடலாம்.
கண்ணாடி முன் நேரத்தை செலவழித்து, சாலையில், அதை, மேக் - அப் செய்ய நினைக்கிறவர்கள், 'பேக்கப்' ஆகிவிடுவரே தவிர, உரிய நேரத்திற்குப் போக மாட்டார்கள்.
ஆகிற நேரம் ஆகட்டும்; இதில், அவசரம் கூடாது என்கிற மனத் தயாரிப்பு வேண்டும்.
சென்னையில், புகழ்மிக்க மருத்துவமனையின் அருகில், ஒருவருக்கு இதய நோய் வருமா, வராதா என்பதை முன்கூட்டியே சொல்லிவிடும் மருத்துவமனை உண்டு.
'உங்கள் பரம்பரையில் எவருக்கேனும் இதய நோய், மதுப் பழக்கம் உண்டா, புகைப்பவரா, அசைவ ஆசாமியா, உடற்பயிற்சி மேற்கொள்பவரா, நடைப்பயிற்சி உண்டா, விளையாட்டில் ஈடுபடுவது உண்டா, தியானம் செய்பவரா...' என்றெல்லாம் வினாத்தாள் கொடுத்து பதில் கேட்பர். நாம் அளிக்கும் பதிலுக்கேற்ப, மதிப்பெண் போட்டபடியே வருவர். மற்ற விடைத்தாள்களில் அதிக மதிப்பெண் வாங்கினால் பாஸ்; இந்த விடைத்தாளில் அதிக மதிப்பெண் வாங்கினால் பெயில். ஆம்... ஹார்ட் பெயில்!
இதில், ஒரு முக்கியமான கேள்வி... 'நீங்கள் டென்ஷன் பார்ட்டியா?' என்பது!
ஆம் என்றால் போச்சு; இதற்கு, ஏகப்பட்ட மதிப்பெண் போடுவர்.
பின், 'மது மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்துங்கள்; அசைவத்தில் மீன் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்; தினமும் நடைபயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள்...' என்றெல்லாம் யோசனை சொல்லி, இவற்றையெல்லாம் பின்பற்றினால் பாரம்பரிய நோய்த் தொல்லை தவிர, மற்ற அனைத்திற்கும் மதிப்பெண் நீக்கி, உங்கள் இதயத்தைப் பாசாக்கி விடுவர். இது மட்டுமல்ல, நீங்கள் பதற்றம் அடையாதிருப்பதற்கான வழிகளையும் சொல்லித் தருவர்.
'பதற்றம் என்றால், சவுகரியமான நிலையில் அமர்ந்து, இரு கைகளையும் மடித்து, வயிற்றின் மீது வைத்துக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சாக இழுங்கள். பின், அதை மெல்ல வெளிப்படுத்துங்கள். இப்படி, 10 முறை செய்தால், உங்கள் பதற்றம் குறைந்து விட்டதை உணர்வீர்கள்...' என்று சொல்லித் தருவர்.
' சீக்கிரம்... என்ன செய்றீங்க... எல்லாரும், இப்படி, 'மசமச'ன்னு நின்னுக்கிட்டிருந்தா வேலை எப்படி ஆகும்... என்ன செய்வீங்களோ தெரியாது; இன்னும் பத்து நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சாகணும்...' என்று, ஒரு மணி நேர வேலையை, அரை மணிக்குள் முடிக்கச் சொல்லி ஒப்படைக்கிற டென்ஷன் பார்ட்டிகள், தங்கள் இதயத் துடிப்பைத் தேவையில்லாமல் படபடக்க வைப்பதோடு, பிறரது இதயத்தையும் தாறுமாறாக ஆக்கி, ஆயுள் குறைய வழி செய்கின்றனர்.
எது, எதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதில், நமக்கு நிதானம் தேவை. சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, 'சீக்கிரம்...' என்று அதட்டினால், இட்லியின் நடுப்பகுதி மாவாகத் தான் இருக்கும்; காபியில் சர்க்கரைக்குப் பதில் உப்பு தான் இருக்கும்.
ஆகிற நேரம் ஆகட்டும் என்கிற அணுகுமுறை, பொறுப்பை ஒப்படைப்போருக்கும், பொறுப்பேற்றுச் செயல்படுத்துவோருக்கும் எல்லா வகையிலும் நல்லது.
லேனா தமிழ்வாணன்

