
அன்புள்ள சகோதரிக்கு -
என் வயது, 54; என் மனைவி வயது, 48. இருவரும் ரயில்வே துறையில் பணிபுரிகிறோம். எங்களுக்கு ஒரே மகள். வயது, 24; சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறாள். அவளுக்கு திருமணம் செய்து வைக்க, எவ்வளவோ முயன்றும், 'வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் தான், திருமணத்துக்கு ஒப்புக் கொள்வேன்; கடைசி வரை உங்களுடன் தான் இருப்பேன்...' என்கிறாள்.
கொஞ்ச நாள் தனியாக இருந்தாலாவது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்று, பணி மாறுதல் வாங்கி, வேறு ஊருக்கு சென்று விட்டாள், என் மனைவி.
தற்போது, நானும், என் மகளும் மட்டும் தான் வீட்டில் இருக்கிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை, இங்கு வருவாள், என் மனைவி.
சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஆட்கள் இருப்பதால், சாப்பாடு பிரச்னை இல்லை என்றாலும், வயது வந்த பெண்ணை வீட்டில் வைத்திருப்பது, மனதில் பெரிய பாரமாகவே உள்ளது.
இந்நிலையில், வெளியூரில் இருக்கும் என் மனைவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாதது, மகளை பற்றிய கவலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை வியாதி என, வேலைக்கு செல்ல முடியாமல், உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், மிகவும் அவதிப்படுகிறாள்.
பொறுப்பான பதவியில் இருப்பதால், பணி மாறுதலும் கிடைக்கவில்லை.
சமீபத்தில், எனக்கும் சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, 'டயலாசிஸ்' செய்து வருகிறேன்.
என் மகளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று, தெரியாமல், இருவரும் வெவ்வேறு இடங்களிலிருந்து தவிக்கிறோம்.
நாங்கள் என்ன செய்வது என்று தக்க ஆலோசனை தாருங்கள்.
- இப்படிக்கு, உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரனுக்கு -
திருமணத்தை வெவ்வேறு விதமாய் அணுகுகின்றனர், இன்றைய, இளம் பெண்கள். தன் பர்சனாலிட்டி, படிப்பு மற்றும் வேலைக்கு சமமானவனாய், பொருளாதார தன்னிறைவு பெற்று, தனிக்குடித்தனம் போக சம்மதிப்பவனாக இருக்க வேண்டும் என, விரும்புகின்றனர், சிலர். களவும் கற்று மறந்தவனாக, கெட்ட பழக்கங்களில் மூழ்காமல், நீந்துபவனாக, மொத்தத்தில் ஒரு சாகசன், கணவனாக வர விரும்புகின்றனர், சிலர். நெட்டையோ, குட்டையோ, கறுப்போ, சிகப்போ, உயர் படிப்பாளியோ, சாதாரண படிப்பாளியோ, ஏழையோ, பணக்காரனோ, கணவன் ஸ்தானத்துக்கு ஒருவன் வந்து, தன்னை காலம் பூராவும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, விரும்புகின்றனர், சில பெண்கள்.
உன் மகளோ, கணவன் என்ற பெயரில், ஒரு அடிமை வேண்டும் என, விரும்புகிறாள்.
நட்பு மற்றும் உறவினர் வீட்டு பெண்களுக்கு வாய்த்த மாப்பிள்ளைகளை பார்த்து ஏமாற்றமடைந்திருக்கிறாள், உன் மகள். திருமணம், பெற்றோரிடமிருந்து தன்னை பிரித்து விடக்கூடாது என, பயப்படுகிறாள்.
வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது, மிக இழிவான விஷயம் என்ற கருத்து, காலம் காலமாக ஆண்களுக்கு போதிக்கப்பட்டு வந்திருப்பதால், ஒரு ஆண், விரும்பி, வீட்டு மாப்பிள்ளையாக போனாலும், அவனை இழித்து, பழித்து, தூற்ற, ஒட்டு மொத்த சமுதாயமும் காத்திருக்கிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக, வீட்டு மாப்பிள்ளையாக வரும் ஆண்கள் கூட, திருமணமான ஒரு மாதத்தில் முறுக்கிக் கொள்கின்றனர். ஒளிந்திருக்கும் சுய கவுரவமும், தன்மானமும் தலைதூக்குகிறது. முட்டல் மோதல் தொடர்ந்து, விவாகரத்தில் போய் முடிகிறது.
இது உன் அன்பு மகளுக்கு...
நீ, நல்ல காரணங்களுக்காகவே வீட்டோடு மாப்பிள்ளை கேட்கிறாய் என, வைத்துக் கொள்வோம். வரன் பார்க்கும் போதே, நீ வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என கேட்டால், வருபவன் உன் வருமானத்தை மட்டுமே சார்ந்திருப்பவனாக, சுயமாய் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாக, ஒரு உதவாக்கரை மாப்பிள்ளையாய் வந்து விட்டால் என்ன செய்வாய்? எவ்வித நிபந்தனையும் இல்லாது, ஒரு தகுதியானவனை திருமணம் செய்து, உன் அன்பால், புரிந்துணர்வால், அவனை உன் பெற்றோர் பக்கம் இழுக்க முடியும். வருகிறவன், 'மருமகனாக' இல்லாமல், 'மறுமகனாக' மாறுவது உன் கையிலும், இறைவன் கையிலும் இருக்கிறது.
உன் பிடிவாதம், உன் பெற்றோரின் உடல் நோவை அதிகப்படுத்துகிறது. கற்பனை உலகத்திலிருந்து யதார்த்த உலகத்திற்கு வா. ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ வாழ்க்கைத் துணை இல்லாமல் வாழ்வது, சிரமமான காரியம். திருமணத்தில் அதிக எதிர்பார்ப்புகளை விதைக்காதே; ஏமாற்றங்களை தான் அறுவடை செய்வாய்.
வாலிபமும், வனப்பும் இருக்கும்போதே, திருமணம் செய்து கொள். முப்பது வயதை தாண்டினால், உடலும், மனமும் மரத்துப் போகும்.
திருமணம் என்பது, சந்தை அபாயங்களுக்கு உட்பட்ட முதலீடு. பெருத்த லாபமும் கிடைக்கலாம்; நஷ்டமும் அடையலாம். லாப, நஷ்டத்துக்காக பயந்து, முதலீட்டை கையிலேயே வைத்திருந்தால், அது களவு போகலாம்; ரூபாய் நோட்டு மதிப்பிழப்பில் செல்லாதது ஆகலாம்.
உன் நன்மைக்காக, உன் பெற்றோரின் நன்மைக்காக, எவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல், திருமணம் செய்து கொள். சகல நன்மைகளையும் சுமந்து, உன் தேவன் வருவான். வாழ்த்துகள் மகளே!
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்!

