PUBLISHED ON : அக் 22, 2017

உத்தமர்கள், பிறருக்கு உபதேசம் செய்ய மாட்டார்கள்; மாறாக, வாழ்ந்து காட்டுவர்.
புஷ்பதந்தர் எனும் முனிவர், கானகத்தில் கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்து எழுந்தவருக்கு கடும் பசி! அதனால், அருகில் உள்ள சிற்றுாருக்கு சென்றார். அவருக்கு பின், சற்று தள்ளி நடந்து வந்த நுண்ணுணர்வாளன் என்பவன், 'இம்முனிவருக்கு உணவிட்டால், நமக்கு நன்மை உண்டாகும்...' என, எண்ணினான். உடனே, முனிவரை வணங்கி, 'அடியேன் இல்லத்தில் உணவுண்டு, ஆசி வழங்க வேண்டும்...' என்று வேண்டினான்.
அவன் வேண்டுகோளுக்கு இணங்கி, அவன் அளித்த உணவையுண்டு, பசியாறி, மறுபடியும் காட்டிற்கு சென்றார்.
மாதங்கள் பல கடந்தன; திருடர்களுக்கு கையாளாக மாறினான், நுண்ணுணர்வாளன். எங்கெங்கு செல்வம் இருக்கிறதென்று இவன் சொல்ல, களவாடி வருவர், கள்வர்.
ஒருமுறை, நுண்ணுணர்வாளன் உளவால், அரண்மனையில் ஏராளமான செல்வத்தை திருடி, புஷ்பதந்த முனிவர் தவம் செய்யும் காட்டிற்குள் வந்தனர், கள்வர்.
தாங்கள் திருடி வந்த ஆபரணங்களைப் பங்கு போட்டபோது, நுண்ணுணர்வாளனுக்கும் ஒரு பங்கு கொடுத்தனர்.
அச்சமயம், அரண்மனைக் காவலர்கள் வருவது தெரிந்ததும், கைகளில் இருந்ததை கீழே போட்டு, தப்பி ஓடியது, கள்வர் கூட்டம். ஓட முடியாத நுண்ணுணர்வாளன், தன் கையிலிருந்த ஆபரணங்களை, அங்கே தவத்தில் ஆழ்ந்திருந்த புஷ்பதந்தரின் மடியில் போட்டு, ஒன்றும் தெரியாதவன் போல் நின்றான்.
அங்கு வந்த காவலர்கள், மடியில் ஆபரணங்களுடன் இருந்த புஷ்பதந்தரையும், அருகே நின்றிருந்த நுண்ணுணர்வாளனையும் கைது செய்து, அரசர் முன் இழுத்து வந்தனர்.
அரசர் நுண்ணுணர் வாளனை விசாரித்த போது, 'மன்னா... முனிவரை வணங்கி, ஆசி பெறுவதற்காகவே காட்டிற்குச் சென்றிருந்தேன். மற்றபடி, என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது...' என்றான்.
அவன் பொய்யுரைப்பதைக் கேட்டும், அவனைக் காட்டிக் கொடுக்காமல், 'இவன், நமக்கு உணவிட்டவன் அல்லவா...' என எண்ணி, 'மன்னா... அவனுக்கும், இதற்கும் தொடர்பில்லை; நகைகளைக் களவாடியவன் நான் தான்...' என்றார் புஷ்பதந்தர், அமைதியாக!
உடனே சீற்றம் கொண்ட மன்னர், 'திருடியதுமில்லாமல், அதை, தைரியமாக என்னிடமே சொல்லும் இம்முனிவனை தூக்கில் இடுங்கள்...' என்றார். முனிவர் முகத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. அதனால், இதில் ஏதோ தவறு இருக்கிறது என நினைத்து, 'முனிவர் பெருமானே... தாங்கள் உண்மையைக் கூறி, என்னையும், என் நாட்டையும் காப்பாற்ற வேண்டும்...' என்றார், அரசர்.
நடந்ததை விவரித்து, 'என் பசியைத் தணித்த இவனைக் காப்பாற்றவே, பழியை ஏற்றுக் கொண்டேன்; இவன் செய்த குற்றத்தை பொறுத்துக் கொள் மன்னா...' என்றார், முனிவர்.
முனிவரின் திருவடிகளை வணங்கி, திருந்தி நல்லவனானான், நுண்ணுணர்வாளன்.
ஒருவேளை உணவு போட்டதற்காக, உயிரையே கொடுக்கத் தீர்மானித்தார், முனிவர். நம்மைப் பெற்று, வளர்த்து, அனுதினமும் அன்னமிட்டு, அன்போடு வளர்க்கும் பெற்றோரிடம், நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பாருங்கள்!
பி.என்.பரசுராமன்
தெரிந்ததும் தெரியாததும்!
துளசியை, கையில் எடுத்துச் செல்வதன் பலன் என்ன?
'என் பக்தன், துளசியை கையில் எடுத்து, எங்கு சென்றாலும், பசு, தன் கன்றை தொடர்ந்து செல்வது போல, அவனை, பின் தொடர்ந்து செல்வேன்...' என்று கூறியுள்ளார், விஷ்ணு பகவான். அதனால், ஒருவனின் கையில், துளசி இருந்தால், விஷ்ணு பகவானின் துணை உண்டு

