PUBLISHED ON : ஜூலை 24, 2022

தோள் மேல் அழுத்தமாக ஒரு கை படுவதை உணர்ந்த வினோத் திரும்பி பார்க்க, ராகேஷ் நின்றிருந்தான். திகைப்பு, மகிழ்ச்சி என்று இரண்டு உணர்வுகளும் அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தன.
''கங்கிராட்ஸ்டா வினோத். அடுத்த, 'புரமோஷன் லிஸ்ட்' தயாராமே. நீதான், 'டாப்'ல இருக்கியாம்; அலெக்ஸ் சொன்னான். அவன் சொன்னா, அதிகாரபூர்வ தகவலா தான் இருக்கும். வாழ்த்துகள்டா,'' என்றான்.
இன்னும் திகைத்தபடியே இருந்த வினோத், ''இல்ல ராகேஷ், எனக்கு விருப்பமில்லே,'' என்றான்.
''என்ன?''
''அலெக்ஸ், எனக்கும் சொன்னான். ஆனால், நான் ஒப்புக் கொள்கிறதா இல்ல.''
''ஏய்... உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு, யோசிக்காம ஏதோ பேசறேன்னு நினைக்கிறேன்,'' என்றான், ராகேஷ்.
அவன் முகத்தைப் பார்க்காமலே, ''இல்ல ராகேஷ்... நல்லா யோசிச்சுட்டுதான் பேசறேன். இங்கே சென்னையிலேயே பதவி உயர்வு கொடுத்தால் கொடுக்கட்டும். பூனா, சண்டிகர்னெல்லாம் என்னால அலைய முடியாது. எனக்கு குடும்பம் இருக்கு,'' என்றான், வினோத்.
''நீ பேசறதெல்லாம் எனக்கு, 'ஷாக்கிங்'கா இருக்கு. நாம ஒரே, 'பேட்ச்!' மூணு வருஷம் முன், இந்த கம்பெனில சேரும்போது என்ன நெனச்சோம், ஒவ்வொரு நாலு வருஷத்துக்கும், ஒவ்வொரு, 'புரமோஷன்' வாங்கணும்ன்னு தானே... முதல்ல உனக்கு தான் வாச்சிருக்கு. நடைமுறையில அதையா வேண்டாம்ன்னு சொல்றே? ஓ.கே., பிறகு பேசலாம்,'' என, இன்னும் நம்பாத முகபாவத்துடனே திரும்பினான், ராகேஷ்.
ரம்யாவும், லிலியும், சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
''என்னம்மா நீ, 'பிஷப், ஹார்ஸ்' ரெண்டையும் வெட்டிட்டே... சொல்லியிருக்கலாம்ல?'' என்று சிணுங்கினாள், லிலி.
''கண்ணா... செஸ் விளையாடறதுக்கு முன்பே உனக்கு சொல்லிக் கொடுத்தேனே, அப்பவே எல்லாம் தெளிவா சொன்னேன். எதிராளி, 'மூவ்' ஒவ்வொண்ணையும் கூர்ந்து கவனிக்கணும்; கொஞ்சம் கொஞ்சமா விளையாட்டு புரிஞ்சுடும். நிறைய இழக்க இழக்க, இன்னும் நல்லா புரியும். எப்பவும், 'ஸ்பூன் பீடிங்' மாதிரி சொல்லிக் கொடுத்துகிட்டே இருந்தால், நீயா கத்துக்கவே முடியாது. சரியா?'' என்றாள்.
''ஓ.கே., ம்மா... இரு, இனிமே கவனமா விளையாடறேன் பாரு.''
''இது நல்ல ஆரம்பம். சரி, இப்போ ராணியைக் கொண்டு வரேன்; எச்சரிக்கையாய் இரு. அப்பா வந்துட்டார், காபி கொடுத்துட்டு வரேன்.''
களைப்புடன் முகம் கழுவி உட்கார்ந்தான், வினோத்.
''ஹலோ வினோத்... காபிக்கு முன், கட்லெட் தரட்டுமா? சும்மா முயற்சி பண்ணேன். அமேசிங்கா வந்துது,'' என்று, சிரித்தாள், ரம்யா.
லேசாகத் தலை துாக்கி அவளைப் பார்த்தான்.
'என்ன அழகாக இருக்கிறாள்? இப்படி பேரழகியான ஒருத்தியை விட்டுட்டு, சண்டிகர் போக முடியுமா? லிலிக்கு, ஒன்பது வயது தான். அப்படியே குட்டி தேவதை. பூக்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இளவரசியைத் தேர்ந்தெடுத்த மாதிரி அவ்வளவு எழில். உயிருடன் வந்த பட்டாம்பூச்சி போல.
'இந்த தேவதைகள் எனக்கானவர்கள். என் வாழ்வை வசீகரமாக்க வந்தவர்கள். இவர்களை இந்த மாய உலகத்தில் விட்டுவிட்டு, நான் மட்டும் பணம், பதவி என்று எப்படி ஓட முடியும்...' என, நினைத்துக் கொண்டான்.
''வினோத்... என்ன யோசனை, தலைவலியா... ஆபிஸ்ல வந்ததா? வாங்களேன்,'' என்று, கை பிடித்து அழைத்தாள், ரம்யா.
''என்ன?''
''இந்த வீடியோ பாருங்க. மில்க்கி வே காலக்சி, அதன் பக்கத்துல இருக்கிற ஆண்ட்ரோமெடா காலக்சி. எவ்வளவு அற்புதம். மனிதன் என்னவெல்லாம் கண்டுபிடிக்கிறான்னு பார்த்தா, அப்படியே பரவசமா இருக்கு. வாங்க வினோ,'' என்றாள்.
ஆர்வமாக வந்து, ''ம்மா... நம்ம மில்க்கி வே காலக்சி, என்ன டைப் மா?'' என்றாள், லிலி.
''அது, ஸ்பைரல் வடிவம்டா. முதல்ல இப்படி இல்லையாம். மற்ற காலக்சிகளை உள்ளே இழுத்துதான், இந்த பால்வெளி அண்டம் இப்படி ஆகியிருக்காம்.''
''சூப்பர்மா... உனக்கு முன்னாடியே தெரியுமா?''
''என் சப்ஜெக்ட்டே வானவியல் தான், லிலி. 19 வயசுல கல்யாணம் ஆகலேன்னா, நிச்சயமா நான், 'ஸ்பேஸ் சயின்ஸ்' படிச்சிருப்பேன்.''
கொட்டாவி விட்டபடியே, ''பசிக்குது ரம்யா... இன்னிக்கு என்ன டின்னர், சப்பாத்தியா? சீக்கிரமா சாப்பிட்டுட்டு படுக்கறேன்.''
''ஓ.கே., இதோ வரேன்,'' என்று எழுந்தாள், ரம்யா.
அலுவலகம், இன்று அழுத்தமான அமைதியில் இருப்பதாகத் தோன்றியது. நிறைய பேர் இன்று விடுமுறை எடுத்திருந்தனர். புத்த பூர்ணிமாவோ அல்லது ஹோலியோ போல, ஏதோ ஒரு வட மாநில பண்டிகை.
''ஹாய் வினோத்... கொஞ்சம் உட்காரலாமா?''
திரும்பிய போது பிரசாத் நின்றிருந்தான்.
''சார்... நீங்களா?'' என்று எழுந்தான், வினோத்.
சிரித்து, தோளில் கை வைத்து, வினோத்தை உட்கார வைத்தான், பிரசாத். நாற்காலியை இழுத்து பக்கத்தில் போட்டுக் கொண்டான்.
''சார், மோர் எல்லாம் வேண்டாம், வினோத். ஜஸ்ட் கால் மீ பிரசாத்... என்ன, ஒரு ஆறு வருஷம் சீனியர் அவ்வளவுதானே? எப்படி போகுது வாழ்க்கை. சென்னை, எனக்கு ரொம்ப பிடித்த இடம்.''
''அருமையான இடம் சார்... இல்ல இல்ல, அருமையான இடம் பிரசாத்,'' என்று தடுமாறினான்.
நம்ப முடியவில்லை. அவனுடைய பாஸ் நாகராஜ் என்றால், நாகராஜுக்கும் பாஸ் இவன். ஐ.ஐ.டி., மாணவன். உஜ்ஜயினியில் பிறந்து, சென்னையில் பொறியியல் படித்து, ஸ்டான்போர்டில் மேல்படிப்பு முடித்தவன். அடுத்த ஆண்டு, வி.பி., ஆகி விடுவான்.
சென்னைக்கு பதவி உயர்வில் வந்து, ஒரு வாரம் தான் ஆகிறது. 45 வயதிற்குள் பாதி வானம் ஏறி விட்ட சாதனையாளன். ஆனால், என்ன எளிமை. இப்படி, ஜூனியரிடம் வந்து உட்கார்ந்து பேசுகிறான்?
''ஆமாம் வினோத். சென்னை, ஒரு அழகான, ஆழமான நகரம். மக்கள் புத்திசாலிகள். அன்பு, அறிவு என்று அழகான கலவை. பிரமாதமான தென்னிந்திய உணவு, அட்டகாசமான பீச், அழகான மகாபலிபுரம், மீசை வைத்த பார்த்தசாரதி பெருமாள் கோவில், பாரதியார் வாழ்ந்த திருவல்லிக்கேணி. ஜஸ்ட் ஒண்டர்புல். கரெக்ட்?''
''ஆமாம் பிரசாத் சார்.''
''யாருக்குமே இதை விட்டுப் போக கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால தான், நீங்க, 'புரமோஷன்' வேணாம்ன்னு சொல்றீங்களோ... கேள்விப்பட்டேன்,'' என்று புன்னகைத்தான், பிரசாத்.
''இல்ல சார், கொஞ்சம் ஆமாம்... வீட்டை விட்டுப் போகணும்; சின்னப் பொண்ணு இருக்கா. வெளி சாப்பாடு எனக்கு ஒத்துக்குமான்னு...'' என்று தடுமாறியவன், குரலை செருமியபடி, ''நீங்க எப்படி சார் குடும்பத்தை விட்டு வந்தீங்க... எப்படியும் இங்கே மூணு வருஷம் இருக்கணுமே... உங்கள் குடும்பத்தினர் உஜ்ஜயினிலதானே இருக்காங்க?''
''ஆமாம், இதோ...'' என்று, மொபைல்போனில் புகைப்படம் காட்டினான், பிரசாத்.
வினோத் பார்த்தான். அதிர்ச்சியாக இருந்தது.
''இது, என் அம்மா, பக்கத்தில் மனைவி, இது என் சிஸ்டர், கடைசில, என் மகள்.
கீழே உட்கார்ந்திருக்கிறது நான். பாருங்களேன் எல்லாரும் அழகிகள். நான் தான் திருஷ்டி பொம்மை,'' வாய்விட்டு சிரித்தான், பிரசாத்.
உண்மைதான். எல்லா பெண்களும், சிலைகள் போல இருந்தனர். வட மாநில நிறம், அடர் கூந்தல், சிரித்த முகம், அளவான, 'மேக் - அப்' செயற்கை அலங்காரம் இல்லாமலே பளீரென ஒளிரும் அழகிகள். இவர்களையா விட்டுட்டு வந்திருக்கிறான்?
''அம்மாவுக்கு நான் ஒரே பையன். அப்பா சின்ன வயதிலேயே போய் விட்டார். தங்கை, டாக்டர்; அம்மா, மியூசிக் கல்லுாரி முதல்வர்; மனைவி, கட்டுமான கம்பெனி ஆலோசகர்; மகள், ஏரோநாட்டிகல் சேர்ந்திருக்கிறாள்.''
என்ன சொல்கிறான்... ஒரே மகனா? அப்படியானால், இந்த தங்க மங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவனுக்கில்லையா... இப்படி தன் பதவி, உயர்வு மற்றும் விருப்பம் என்று ஓடி வந்து விட்டானா... என்ன இது?
''பிரசாத் சார் என்ன சொல்கிறீர்கள்... இத்தனை பெண்கள் இருக்கின்றனரே... இவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இல்லையா?'' சடாரென கேட்டு விட்டான்.
ஒரு கணம் திகைத்து, சிரித்தான், பிரசாத்.
''ஏதாவது தப்பா கேட்டுட்டேனா... அவங்களை தனியா விட்டுட்டு, நீங்க இங்கே சுதந்திரமா இருக்க முடியுமா?''
''வினோத், சுதந்திரம் என்பது ஆண்களுக்கானதா என்ன? பெண்கள் சுதந்திரமா இருக்கும்போது, ஆண்களுக்கும் அது தானா கிடைக்கும். உண்மையான பாதுகாப்பு எது... படிப்பும், நல்ல நடத்தையும், சுயசார்பும் தான். இது எல்லாம் உள்ள எந்த மனிதருக்கும், மகிழ்ச்சியும், வலிமையும், தைரியமும் இருக்கும்.
''என் வீட்டுப் பெண்கள் படித்தவர்கள், படிப்பை வீணாக்காதவர்கள், அதை சமூகத்துக்காக பயன்படுத்துபவர்கள். தன்னையும் வளர்த்துக் கொண்டு, மற்றவருக்கும் உதவிகரமாக இருப்பவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முத்து, வைரம், மாணிக்கம்.''
''அப்போ, ஆணுக்கு பெண்ணைக் காப்பாற்றுகிற கடமை இல்லையா?''
''அது மிருகங்களுக்கு இருக்கலாம், வினோத். பெண்ணைக் கவர, இனவிருத்தி செய்ய, அவைகளுக்கு அந்த தேவை இருக்கு. ஆனால், மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். அதனாலேயே வக்கிரமாகவும் சிந்திக்க ஆரம்பித்தவன், கால்குலேஷன் செய்பவன். 'நான் உன்னைப் பாதுகாக்கிறேன், கண் போல மூடி வைக்கிறேன்...' என்று சொல்லி, பெண்களை வீட்டில் அடைத்து வைப்பவன்.
''படிப்பில், அவள் தன்னை மிஞ்சி விடுவாளோ... அறிவில், செயலில் தாண்டிப் போய் விடுவாளோ என்று அச்சப்படுபவன். அப்படிப்பட்டவன் தான் பெண்ணை அடிமையாக்கி வைப்பான். ஆனால், வீரமான ஆண், அப்படிச் செய்ய மாட்டான். தன் வீட்டுப் பெண்களை வளர வைப்பான், மேலே பறக்க வைப்பான். போய் வா, யார் உன்னை என்ன செய்கிறான் பார்க்கிறேன் என்று ஊக்கப்படுத்துவான்.
''தன் மேல் நம்பிக்கை இல்லாத ஆள்தான், உன்னை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துவான். அயாம் சாரி, ரொம்ப பேசிட்டேன்ல. யூ கேரி ஆன், வினோத்...'' சிரித்தபடியே விடைபெற்றான், பிரசாத்.
வினோத்திற்குள் புதிய சிந்தனைகள் வளர ஆரம்பித்தன. வானத்தில், பறவைகள் உற்சாகமாக சிறகடிப்பதை முதன் முதலாக, ஆர்வத்துடன் பார்த்தான்.
வி. உஷா
