PUBLISHED ON : ஜூலை 24, 2022

வாழ்வின் பயணம் இனிது!
மனதின் காட்டிலிருந்து
நினைவுகளின் கைகளால்
எதை பறிக்கப் போகிறோம்
பூக்களையா, முட்களையா?
வாழ்த்திய சொற்களை
நினைத்துக் கொண்டால்
வஞ்சகச் சொற்கள்
மறந்து போகும்!
புன்னகைத்த முகங்களை
நினைத்துக் கொண்டால்
திரும்பிக்கொண்ட முகங்கள்
மறந்து போகும்!
கிடைக்கப் பெற்ற உதவியை
நினைத்துக் கொண்டால்
மறுக்கப்பட்ட உதவிகள்
மறந்து போகும்!
துடிப்போடு எழுந்ததை
நினைத்துக் கொண்டால்
துவண்டு விழுந்தது
மறந்து போகும்!
கூடியிருந்த பொழுதுகளை
நினைத்துக் கொண்டால்
தனித்திருந்த பொழுதுகள்
மறந்து போகும்!
அமுதுண்ட வேளைகளை
நினைத்துக் கொண்டால்
பசித்திருந்த வேளைகள்
மறந்து போகும்!
வெற்றி பெற்ற கணங்களை
நினைத்துக் கொண்டால்
சறுக்கிய கணங்கள்
மறந்து போகும்!
சுமைகள் அல்ல
துாக்கிச் சுமக்கும் காலம் தான்
கனத்து விடுகிறது
பஞ்சுப் பொதியாகினும்
பாறாங்கல்லாகினும்!
வெறுப்பூட்டும் நினைவுகளை
மனதிலிருந்து உதறி விட்டால்
இந்த வாழ்வின் பயணம் தான்
எவ்வளவு இனிது!
ர.கீர்த்தி, சென்னை
