PUBLISHED ON : ஜூலை 24, 2022

ஜூலை 27 - அப்துல் கலாம் நினைவு தினம்
விருதை ராஜா எழுதிய, 'ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்' நுாலிலிருந்து:
ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை கலாம் வடிவமைத்திருந்தாலும், மக்களுக்கு பயன்படும் பல கருவிகளையும் கண்டுபிடித்துள்ளார். அவை, இதய நோயாளிகளுக்கென எடை குறைந்த, 'ஸ்டென்ட்' கருவி, போலியோ நோயாளிகளுக்கென எடை குறைந்த, ஊன்றுகோல் ஆகியவை. இந்த, 'ஸ்டென்டு'களுக்கு, 'கலாம் ஸ்டென்டு' என்றே பெயர்.
ராஜி என்ற டாக்டருடன் சேர்ந்து, இதய தமனி அடைப்பை நீக்கும் கருவியை கண்டுபிடித்தார் கலாம். மேலும், 40 மி.மீ., காற்று மெத்தையில், 500 கிலோ எடை கொண்ட, தாழ்ந்து பறக்கிற விமானம் ஒன்றை உருவாக்கினார். இதுவே கலாம் கண்டுபிடித்த, நந்தி விமானம். இது, 10 நிமிடம், தரையிலிருந்து, ஒரு சில மீட்டர் உயரம் உயர்ந்து பறந்தது. இந்த நந்தியில் ஏறி பறந்தவர், பேராசிரியர் எம்.ஜி.கே.மேனன்.
டி.ஆர்.டி.ஓ., ஆய்வுக்கூடம் மூலம் கண்டுபிடித்த மென்பொருள், அனாமிகா. இதன் மூலம் உடல் உறுப்புகளில் தோன்றும், 'டியூமர்' போன்ற கட்டிகளை சி.டி., ஸ்கேன் மூலம் அறியலாம்.
ஒருசமயம், கலாமை சந்தித்தார், யூசி என்ற சீனக் கவிஞர்.
அப்போது, திருக்குறளையும், அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும்
அவரிடம் வழங்கி, 'படித்து பிடித்திருந்தால், திருக்குறளை சீன மொழியில் வெளியிடுங்கள்...' என, கேட்டுக் கொண்டார், கலாம்.
திருக்குறளை, ஐந்து ஆண்டுகளாக படித்து வந்த, யூசி, அதன் ஈரடி வழங்கிய ஆழத்தைக் கண்டு, 2011ல், உலகக் கவிஞர்கள் மாநாட்டில், கலாம் முன்னிலையில், திருக்குறளை சீன மொழியில் வெளியிட்டு, சிறப்பித்தார்.
திருக்குறளை சீன மொழிக்கு கொண்டு சென்ற பெருமை, கலாமையே சாரும்.
ம.வீரகோபாலன் எழுதிய, 'வள்ளுவர் வழியில் அப்துல் கலாம்' நுாலிலிருந்து:
ஒருமுறை, ஹோமியோபதி மருந்து ஒன்றைத் தேடினார், அப்துல் கலாம். பல இடங்களிலும் சொல்லி வைத்தும் கிடைக்கவில்லை. சக விஞ்ஞானிகளிடம் கூட மருந்தைப் பற்றி கூறினார்.
பல நாட்களுக்கு பின், ஜனாதிபதிக்காக பல இடங்களில் தேடி, கொண்டு வந்து கொடுத்தார், ஒரு விஞ்ஞானி.
'இந்த மருந்து, உங்களுக்கு தானே...' என்று கேட்டார்.
'இல்லை, இல்லை. கார் டிரைவரின் குழந்தைக்கு...' என்று கூறினார்.
நெகிழ்ந்து போனார், விஞ்ஞானி. பல நாட்களாகக் காத்திருந்து, அதைப் பெற்று, மற்றவர்களுக்கு கொடுக்கும் பண்பு, இவருக்கு நிகர் இவரே என்று, புகழ்ந்து பாராட்டினார்.
ஜனாதிபதி மாளிகையில், 31 ஆண்டுகளாக சமையல்காரராய் இருந்தவர், சலீம் அகமது. பல ஜனாதிபதிகளுக்கு சமைத்துக் கொடுத்தவர். ஆனால், கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, அவருக்கு வேலை மிக மிக குறைவாக இருந்தது.
சமைத்துக் கொடுக்கும் உணவை, எந்த குறையும் கூறாமல், பாராட்டி உண்பார், கலாம்.
ராஷ்டிரபதி பவனுக்கு ஜனாதிபதி வந்தவுடன், காவலாளி, அவரின் காலணிகளை கழற்றி வைப்பது வழக்கம். ஆனால், கலாமோ அதை மறுத்து விட்டார். அவருடைய காலணிகளை அவரே கழற்றி, உரிய இடத்தில் வைப்பார்.
'இப்படி ஒரு ஜனாதிபதியை காண்பது அரிது...' என்கிறார், சலீம் அகமது.
நடுத்தெரு நாராயணன்
