தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்பினார் கெடுவதில்லை!

நம்பினார் கெடுவதில்லை!

நம்பினார் கெடுவதில்லை!


PUBLISHED ON : ஜூன் 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 5 - நம்பியாண்டார் நம்பி குருபூஜை!

நம்பிக்கையே மனிதனின் வெற்றிக்கு ஆதாரம். இறைவன் மீது, யாரொருவர் ஆழமாக நம்பிக்கை வைக்கிறாரோ, அவர், தன் மீதே நம்பிக்கை வைக்கிறார். நம்பிக்கை உள்ளவனுக்கு, தெய்வம் பக்க பலமாக இருந்து, அவனது செயல்கள் வெற்றி பெற உதவும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவருக்கு, வைகாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது.

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ளது திருநாரையூர். இங்குள்ள சவுந்தரேஸ்வரர் கோவில், பொள்ளாப் பிள்ளையார் சன்னிதியில் அனந்தேசர் என்பவர் பூஜை செய்து வந்தார்.

சுவாமிக்குப் படைத்த நைவேத்யத்தை, அவர் பக்தர்களுக்கு கொடுப்பார்; மீதி இருந்தால், வீட்டுக்கு கொண்டு செல்வார். அதை, அவரது ஐந்து வயதான மகன், நம்பியாண்டார் நம்பி விரும்பி சாப்பிடுவான்.

பிரசாதம் காலியாகி விடும் சமயங்களில், 'அப்பா... பிள்ளையாருக்கு படைத்த நைவேத்யத்தில், எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்...' என்று கேட்பான். அனந்தேசர் மகனைச் சமாதானப்படுத்துவதற்காக, 'எல்லாவற்றையும் விநாயகர் சாப்பிட்டு விட்டாரே...' என்பார்; இது, சிறுவனின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ஒருசமயம், அனந்தேசர் வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால், மகன் நம்பியாண்டார் நம்பியை பூஜை செய்ய அனுப்பினார். விநாயகருக்கு நைவேத்யம் படைத்தார் நம்பி. தந்தை சொன்னபடி, விநாயகர் அதை சாப்பிடுவார் என நினைத்து காத்திருந்தார்; ஆனால், விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்; நைவேத்யம் அப்படியே இருந்தது. இதனால், சிறுவன் நம்பி, சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக் கொள்ளும்படி முறையிட்டார். அவருக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை எடுத்துக் கொண்டார் விநாயகர்.

வெளியே பிரசாதத்துக்காக காத்திருந்த பக்தர்களிடம், 'பிள்ளையார் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்...' என்றான்; அவர்கள் நம்பவில்லை. எல்லாவற்றையும் பையனே சாப்பிட்டு விட்டான் என்று முடிவெடுத்து, அவரது தந்தையிடம் முறையிட்டனர்.

பிள்ளையார் தான் சாப்பிட்டார் என பையன் திடமாகச் சொல்லவே, மறுநாளும் அவனையே விநாயகருக்கு நைவேத்யம் படைக்க கூறினர். விநாயகரும் நேரில் வந்து சாப்பிட்டதைக் கண்டு, அதிர்ந்தனர் பக்தர்கள். நம்பிக்கையுள்ள பக்தி, நம்பிக்கு, கை கொடுத்தது.

பொள்ளாப் பிள்ளையாரைப் போற்றி, 'விநாயகர் இரட்டை மணிமாலை' பாடினார் நம்பி. இவருக்கு, சவுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியில் சன்னிதி உள்ளது. இவரது குருபூஜையன்று இரவில் தேவார பதிகங்களை பாராயணம் செய்வர். இதை, 'திருமுறை விழா' என்பர்.

மூவர் பாடிய தேவார பாடல்களை தொகுக்க, ராஜராஜசோழன் முயற்சித்தான். அவனுக்கு, பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை. நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த மன்னன், தனக்கு உதவும்படி கேட்டான். விநாயகரிடம் முறையிட்டார் நம்பி; அப்போது, அசரீரி ஒலித்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது. மன்னன், நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தனர். அவை, 11 திருமுறைகளாக நம்பியால் தொகுக்கப்பட்டது.

பக்தி செலுத்தியதுடன், தமிழுக்கும் தொண்டு செய்த நம்பியாண்டார் நம்பி, நம் நினைவில் என்றும் நிற்பார்.

***

- தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us