PUBLISHED ON : ஜூன் 05, 2011

ஆள் பாதி, ஆடை பாதி!
நல்ல, உயர்ந்த பதவியில் இருக்கும், வசதி படைத்த என் நண்பர் ஒருவரின் மூத்த மகளுக்கு, இரண்டு, மூன்று வரன்கள் வந்து பார்த்து விட்டு செல்வதும், தட்டிப் போவதுமாகவே இருந்தது. காரணத்தை அறிய, தரகரை கட்டாயப்படுத்தி விசாரித்ததில், வெளியான தகவல், அதிர்ச்சியை தந்தது.
நண்பரின் மனைவி அலங்கார பிரியை. திருமண வயதில், நான்கு பிள்ளைகள் இருந்தும், எப்போதும் உடலழகை வெளிக்காட்டும், கவர்ச்சியான ஜாக்கெட், கண்ணாடி மாதிரி புடவைகள் உடுத்துபவர்.
பிள்ளை வீட்டார், 'அம்மாவே இப்படி என்றால், பெண் எப்படியோ...' என மிரண்டு, தட்டிக் கழித்துள்ளனர். இதனால், நண்பரின் மனைவி, இப்போது கண்ணியமாக உடை உடுத்த ஆரம்பித்துள்ளார்.
பெண்களே... வயதுக்கு தகுந்தாற் போல், ஆடை அணிவது தான் எப்போதும் மதிப்பு; அதிக கவர்ச்சி காட்டுவது, எப்போதுமே ஆபத்துதான். பார்ப்பவர் கண்களில் விபரீதத்தையே உருவாக்கும். நடிகை மாதிரி, குடும்ப பெண்கள் தோற்றமளிப்பது நல்லதல்ல!
— எ.முருகேசன், கிருஷ்ணகிரி.
ஏன் இப்படி?
இன்றைய தொலைக்காட்சி அலைவரிசையில், ஜோடி நடனம் என்பது பிரபலமாக இருக்கிறது. அரை குறை ஆடை அணிந்த பெண்கள், ஆண்களை கட்டிப் பிடித்து, நடனம் ஆடுவதை, அரை குறை ஆடை அணிந்த நடுவர்கள் பரீட்சிக்கின்றனர்.
ஆடவனும், யுவதியும், திருமணம் ஆகாதவர்கள் அல்லது வேறு யாரையோ திருமணம் புரிந்தவர்கள். கன்னா, பின்னா என்று காதல் ரசம் சொட்ட ஆடுகின்றனர். இதில், ஆடையே அவிழ்ந்து விழுந்தாலும், ஆடுவதை நிறுத்தக் கூடாது என்ற விதிமுறை வேறு!
இவர்கள் என்ன சொல்ல விழைகின்றனர்? எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாம், யாரை வேண்டுமானாலும் கட்டிப் பிடித்து ஆடலாம் என்றா? கலாசாரம் சீரழிகிறது என, ஆலாய் பறக்கும் நடுநிலையாளர்கள் என்ன செய்கின்றனர்; எங்கே போயினர்?
அயல்நாட்டுக்காரர்கள் நம்மை மதிப்பது, இந்த கலாசார விஷயத்தில் மட்டும் தான். அதையும் சீர் கெடுத்து விட்டால், நம்மிடம் என்ன உள்ளது?
இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கென, செய்தி அலைவரிசை, இசை அலைவரிசை போல, 'ஏ' அலைவரிசை ஒன்று ஆரம்பித்தால், விருப்பப்பட்டவர்கள் அதை பார்த்துக் கொள்ளலாம்.
தாய்மார்கள், தங்கள் பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு தொப்புள் தெரிய ஆடை அணிவித்து மகிழ்கின்றனர். இந்நிலை வளர்ந்து, எல்லாரும் அவ்வாறு உடை அணிவதில் தவறில்லை என்ற நிலை வந்து விட்டால், அது, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலாகி விடும்.
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை... ஆண்கள் ஏன் முழுமையாக ஆடை அணிந்து கொள்கின்றனர்... பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த ஆடை குறைப்பு?
ஆண்கள், தங்கள் மதிப்பை என்றும் காப்பாற்றிக் கொள்கின்றனர்; பெண்கள் அவர்களுடைய மதிப்பு, எதில் இருக்கிறது என்று தெரியாமல், காற்றில் பறக்க விடுகின்றனர்.
— பெயர் வெளியிட விரும்பாத வாசகி, சென்னை.
இளமையை கண்டுபிடித்து தர முடியுமா?
சமீபத்தில் ஒருநாள், மாலை பள்ளி முடிந்து, பஸ் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். வழியில், போதையில் மூன்று இளைஞர்கள் அலம்பல் செய்து கொண்டிருந்தனர். அந்நேரத்தில், கூன் விழுந்த முதுகை உடைய, முதியவர் ஒருவர் அவர்களைக் கடந்து சென்றார்.
உடனே, மூவரில் ஒருவன் ஓடிப் போய், அவரை வழிமறித்து, 'என்ன தாத்தா... குனிஞ்சு ஏதோ தேடிக்கிட்டே போறே... அது என்ன பொருள்ன்னு சொல்லு; நான் கண்டுபிடிச்சு தர்றேன்...' என, கிண்டலாகக் கேட்க, மற்ற இருவரும் அதைப் பார்த்து சிரித்தனர்.
அம்முதியவரோ, சிறிதும் கோபமின்றி, புன்முறுவலுடன், 'அப்படியா தம்பி... காணாமல் போன என் இளமையைத்தான், இப்ப நான் தேடிக்கிட்டு இருக்கேன்...' என்றதும், அந்த இளைஞர்கள் மறுபேச்சின்றி, அவ்விடத்தை விட்டு, அகன்றனர்.
உருவத்தை வைத்து, பிறரை நாம் ஏளனம் செய்வது, தவறு என்பதை இந்நிகழ்ச்சி மூலம் நான் உணர்ந்தேன்.
— சாதனா ரஞ்சன், தொண்டராம்பட்டு.
