PUBLISHED ON : அக் 25, 2015

இன்று, பெரும்பாலானோர் கடைப்பிடிக்கும் விரதம், சங்கட ஹர சதுர்த்தி! இதை மக்கள் மத்தியில் பரவச் செய்து, இதன் பலனையும் உணர்த்தியவரின் வரலாறு இது:
நந்துரம் எனும் ஊருக்கு அருகில் உள்ள காட்டில், விப்ரதன் எனும் வேடன் வாழ்ந்து வந்தான். அவன், அக்காட்டின் வழியாக செல்வோரை கத்தியைக் காட்டி மிரட்டி, பொருட்களை அபகரித்து வந்தான்.
ஒருநாள், அவ்வழியே முத்கல முனிவர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, முனிவரின் முன் சென்ற விப்ரதன், கத்தியை ஓங்கினான். ஆனால், முனிவரோ, கண் இமைக்காமல் விப்ரதனையே கூர்ந்து நோக்கினார்.
அயர்ந்து போன விப்ரதன், 'என்ன இது! விலங்குகள் என்றால் எதிர்த்தாக்குதல் நடத்தும்; மனிதர்களோ என்னைப் பார்த்ததும் பயந்து ஓடி விடுவர். இவர் எதுவும் செய்யாமல் நிற்கிறாரே...' என எண்ணி, முனிவரை உற்றுப் பார்த்தான்.
அடுத்த நொடி, அவன் கையில் இருந்த கத்தி, தானாகவே கீழே விழ, மனம் சாந்த நிலையை அடைந்தது.
இந்த மாற்றத்தை உணர்ந்த விப்ரதன், 'என் குரூரத்தை அழித்த குருமூர்த்தியே...' என்று கூறி, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கியவன், 'பார்வையாலேயே என்னைத் திருத்திய மாமுனியே... எனக்கு நல்வழி காட்டுங்கள்...' என வேண்டினான்.
அவன் காதுகளில், 'ஓம் கணேசாய நம' என்ற கணேச மந்திரத்தை மும்முறை ஓதினார் முத்கல முனிவர். கூடவே, அங்கு பட்டுப் போய் கிடந்த குச்சியை எடுத்து, பள்ளம் தோண்டி நட்டவர், 'விப்ரதா... நான் கூறிய மந்திரத்தை சொல்லி, இந்த பட்டுப்போன குச்சிக்கு நீர் வார்த்து வா; இது துளிர்க்கும் காலத்தில் உனக்கு சகல சித்திகளும் கை கூடும்...' என்று கூறி, சென்று விட்டார்.
முனிவர் கூறியபடியே செய்து வந்தான் விப்ரதன். பட்டுப்போன குச்சி துளிர்த்தது; அதன் அருகிலேயே அமர்ந்து, மந்திரத்தை உருவேற்றிக் கொண்டிருந்தான். சருகுகளும், புழுதி துகள்களும் விப்ரதன் உடம்பின் மேல் படிந்து, அவனை மூடின.
சில காலம் சென்றன; மீண்டும் அவ்வழியே வந்த முத்கல முனிவர், விப்ரதனின் நிலை கண்டு அதிசயித்தவர், அவன் மேல், கமண்டல நீரை தெளித்தார். எழுந்த விப்ரதனைப் பார்த்ததும், ஆச்சரியமடைந்தார் முனிவர். காரணம், சடை முடியுடன், புருவ மத்தியில் இருந்து சிறிய தும்பிக்கையுடன் விநாயக வடிவில் இருந்தான் விப்ரதன்.
முத்கல முனிவரை பணிந்தவனை,'விப்ரதா... இன்று முதல் நீ புருசுண்டி முனிவர் என்று பெயர் பெறுவாய்; விநாயக பக்தர்களிலேயே உனக்கு தான் முதலிடம்...' என்று வாழ்த்தினார்.
அந்த புருசுண்டி முனிவர் தான், நாரதரிடம் இருந்து விவரம் அறிந்து, சங்கட ஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடித்து, நரகத்தில் இருந்த முன்னோர்களுக்கு விடுதலை அளித்தார். கஷ்டங்களையெல்லாம் அபகரிப்பதால், இவ்விரதத்தை, சங்கஷ்ட ஹர சதுர்த்தி என்றும் அழைப்பர்.
சங்கட ஹர சதுர்த்தியன்று மாலை, சந்திர உதயத்தின் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும். தேய்பிறை சதுர்த்தியன்று, சங்கட ஹர சதுர்த்தி (கிருஷ்ண பட்ச) கடைப்பிடித்தால், நம் வாழ்வில் நிம்மதியையும், அமைதியையும் கொண்டு வரும்.
சங்கட ஹர சதுர்த்தி நாயகர் அருளட்டும்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந் தங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே!
விளக்கம்: மற்ற தேவர்களை விட, ஆதியும், அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான், மிகுந்த பெருமை உடையவர். அவர், தன் எளிமையான கருணையால், உடம்பினுள் உயிராக கலந்தும் விளங்குவார். அந்த மகாதேவனை, தேவர்களாலும் அளவிட்டு அறிய முடியாது; அவர்கள் செய்யும் தவத்தின் மூலமே சிவத்தை அறிய முடியும்.
கருத்து: தவம் செய்வோம்; சிவத்தை அறிவோம்.