PUBLISHED ON : அக் 11, 2020

நவராத்திரி காலத்தில், லட்சுமி, சரஸ்வதி, பார்வதியை வழிபடுகிறோம். கல்வியும், வீரமும் இருந்தாலும், செல்வத்திற்கு மதிப்பளிப்பதே, உலக இயல்பு.
அந்த செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை, பாற்கடல் சென்று தான் தரிசிக்க வேண்டுமென்பதில்லை. இவள், சென்னை மயிலாப்பூரில் அவதாரம் செய்திருக்கிறாள் என்பது, விசேஷ தகவல். இங்குள்ள மாதவப் பெருமாள் கோவிலில், இவள் அருள்பாலிக்கிறாள்.
யாகம் ஒன்றை நடத்திய முனிவர்கள், அதன் பலனை சாந்த குணமுள்ள தெய்வத்துக்கு கொடுக்க முடிவெடுத்தனர். எந்த தெய்வம் சாந்த குணமுள்ளது என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, பிருகு முனிவரிடம் விடப்பட்டது.
பிரம்மாவும், சிவனும் அவர் வைத்த தேர்வில் தோற்றனர். பின் வைகுண்டம் சென்றார். திருமால் உறங்குவது போல் நடித்தார். 'நான் வந்திருப்பது தெரிந்தும், தெரியாதவன் போல் உறங்குகிறாயா...' என்று, திருமாலின் மார்பில் உதைத்தார், பிருகு முனிவர்.
அப்போது தான், எழுவது போல் நடித்த பெருமாள், 'நீங்கள் வந்ததை உணராமல் உறங்கியது தவறு தான்...' என்று சாந்தமாகப் பேசினார். ஆனால், பிருகுவின் செயல், திருமாலின் மார்பில் இருந்த மகாலட்சுமிக்கு கோபத்தை வரவழைத்தது.
'நான் உங்கள் மார்பில் இருப்பவள். அந்த மார்பில் உதைத்தால் எனக்கு வலிக்கும் அல்லவா... இதைத் தட்டிக்கேட்காமல், அந்த முனிவனிடம் பணிந்து பேசுகிறீர்களே... இனி, உங்களோடு வாழ மாட்டேன்...' என்ற மகாலட்சுமி, பெருமாளை விட்டுப் பிரிந்தாள்.
இருவரும் பிரிய காரணமான, பிருகு, தவறுக்கு பிராயச்சித்தம் பெற, லட்சுமியே, தன் மகளாக பிறக்க வேண்டி தவமிருந்தார். தாயாரும் பெரிய மனதுடன், ஒரு தீர்த்தத்தில் குழந்தையாக அவதரித்தாள். அவளுக்கு, அமிர்தவல்லி என, பெயரிட்டு வளர்த்தார்.
திருமண வயதை அடைந்ததும், மகளை மணந்து கொள்ளும்படி பெருமாளை வேண்டினார். அவரும், தாயாரை ஏற்று அருள்புரிந்தார். இருவரும், இங்கு கோவில் கொண்டனர்.
மூலவர், கல்யாண மாதவன் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அமிர்தவல்லி என்னும் பெயரில், மகாலட்சுமி இங்கு வீற்றிருக்கிறாள். பிள்ளை வரம் வேண்டுவோர், தாயாருக்கு கல்கண்டு, குங்குமப்பூ மற்றும் பால் சேர்ந்த கலவையை நைவேத்யம் செய்கின்றனர்.
உற்சவர் பெருமாள், தாமரை மலர் போன்று, அழகான முகத்துடன் காட்சியளிப்பதால், அரவிந்த மாதவன் எனப்படுகிறார். அரவிந்தம் என்றால், தாமரை.
பூவராகப் பெருமாள், ஆண்டாள், ராமர் மற்றும் பால ஆஞ்சநேயர் சன்னிதிகளும் உள்ளன.
கர்நாடக மாநிலம், திருநாராயணபுரத்தில் உள்ள, சம்பத் குமாரர் சிலை, இந்தக் கோவிலிலும் உள்ளது. இவரிடம் வேண்டிக் கொள்ள செல்வம் பெருகும். சம்பத் என்றால், செல்வம். இவருக்கு, செல்வப்பிள்ளை என்றும் பெயருண்டு.
மயிலாப்பூர், திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தம் அருகில், கோவில் உள்ளது. நவராத்திரி காலத்தில், மகாலட்சுமி அவதரித்த இத்தலத்துக்கு சென்று, செல்வச்செழிப்பை வேண்டுங்கள்.
தி. செல்லப்பா
