PUBLISHED ON : அக் 11, 2020

இப்படியும் ஓர் ஏமாற்று!
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, ஒரு ஆட்டோக்காரர், என் பக்கத்தில் வந்து வண்டியை நிறுத்தினார்.
கையில், இரண்டு, 200 ரூபாயும், ஒரு, 100 ரூபாயும் வைத்துக் கொண்டு, 'சார்... 500 ரூபாயா இருக்குமா... திருமணத்துக்கு, மொய் எழுதணும் சார்... ஒரே நோட்டா இருந்தா நல்லாருக்கும். அதுக்கு தான்...' என்றார்.
'பர்சை' எடுத்து, ஒட்டிக்கொண்டிருந்த புது நோட்டுகளிலிருந்து, 500 ரூபாயை எடுத்து, அவரிடம் கொடுத்து, சில்லறையை வாங்கிக் கொண்டேன்.
'என்ன சார் இது... 500 ரூபாய்ன்னு, 50 ரூபாயை தந்திருக்கீங்க...' என்றார், ஆட்டோக்காரர்.
கஷ்டப்பட்டு ஒட்டியிருந்த புது நோட்டுகளை பிரித்து எடுத்து கொடுத்ததையெல்லாம் ஒரு வினாடியில் மறந்து, 50 ரூபாயை வாங்கிக் கொண்டு, இன்னொரு, 500 ரூபாய் நோட்டை அவரிடம் கொடுத்தேன். ஆட்டோவை ஓட்டி, சிட்டாக கிளம்பினார்.
நான் எப்போதும், 'பர்சு'க்குள், ரூபாயை அதன் மதிப்புக்கு ஏற்றவாறு, வரிசையாக வைத்திருப்பேன். 500 ரூபாய்க்கு பக்கத்தில், 50 ரூபாயை வைக்கும் வாய்ப்பே இல்லை. இருந்தாலும், அவரிடம் ஏமாந்து போனேன்.
வாசகர்களே, இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளிடம், உஷாராக இருங்கள்!
-— பொ. தரணிபதி, சென்னை.
புது வி(தை)த, 'புராஜெக்ட்!'
நண்பரின் இல்லம் சென்றிருந்தேன். பதப்படுத்திய விதைகளை, காகித உரையிலிட்டு, பெயர் எழுதிக் கொண்டிருந்தார்.
'விற்பனைக்காக விதைகளை தயார் செய்கிறீர்களா...' என்றேன்.
'இல்லை...' என்றவர் தொடர்ந்தார்...
'எட்டாம் வகுப்பு படிக்கும் மகளின் வகுப்பாசிரியை, சமூக அக்கறையோடு, அவரது வழிகாட்டுதலின்படி, சமையலுக்கும், சாப்பிடவும் வாங்கிய காய்கறி, பழ விதைகளை சேகரித்து, விதை நேர்த்தி செய்து காண்பிக்க கூறியுள்ளார்.
'தேர்வுக்கு முன், விதை பந்தாக மாற்றி, விடுமுறைக்கு வெளியூர் செல்லும்போது, சாலையோரங்களிலும், மண்வளம் மிக்க இயற்கை சூழலிலும், வீசியெறிந்தோ அல்லது விதையாக நட்டோ, தங்கள் மொபைல் போனில் படம் பிடித்து, ஆசிரியைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.
'அப்படி செய்பவர்களை, ஊக்கப்படுத்தும் விதமாக, சான்றிதழ், பரிசு மற்றும் மதிப்பெண் வழங்கி கவுரப்படுத்துவார். அவர் கொடுக்கும் உற்சாகத்தில், என் மகள், மா, நாவல், வேம்பு, புங்கன், எலுமிச்சை, கிச்சலி, சப்போட்டா, சீதாப் பழம் என, கிடைக்கும் விதைகளை பக்குவப்படுத்தினாள்.
'எங்கள் வீட்டு மண் தொட்டிகளில் ஊன்றி, நீர் விட்டு கண்காணிப்பாள். விதைகள் முளை விட்டு, குறிப்பிட்ட உயரம் வளர்ந்ததும், அக்கம் பக்க வீடுகளுக்கோ, எங்கள் இல்லம் வரும் நண்பர்களிடமோ, 'வளர்க்க இயலுமா...' என கேட்டு, கொடுத்தும் வருகிறாள்...' என்றார்.
விடுமுறையில், 'புராஜெக்ட்' என்ற பெயரில், தேவையற்றதை மாணவர்களை செய்யக்கூறி, மறைமுகமாக பெற்றோரை வறுத்தெடுக்கும் இன்றைய சூழலில், வகுப்பாசிரியரின் வித்தியாசமான முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
— தி. பூபாலன், காவேரிப்பாக்கம், வேலுார்.
'மொபைல் டியூஷன்!'
'மொபைல் கோர்ட், மொபைல் கிளினிக், மொபைல் லைப்ரரி' போல, சமீபகாலமாக, எங்கள் பகுதியில், 'மொபைல் டியூஷன்' பிரபலமாகி வருகிறது.
அதாவது, ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், 'புரொஜெக்டர்' உள்ளிட்ட உபகரணங்களோடு, வேனில் வருவர்.
காலையில், குறிப்பிட்ட ஒரு பகுதியிலும், மாலையில், குறிப்பிட்ட ஒரு பகுதியிலும், வேனை நிறுத்தி, மாணவர்கள் விரும்பும் பாடத்தில், அவர்களுக்கு சிரமமான பகுதியை, எளிமையாக கற்பித்து, புரிய வைப்பர். அன்றைய பாடம் முடிந்ததும், அதற்கான கட்டணமாக, குறைந்த தொகையை பெற்றுக் கொள்வர்.
வீடு தேடி வந்து கற்பிப்பதால், மாணவர்களின் சிரமம் குறைவதோடு, பாட சம்பந்தமான சந்தேகங்களை, பயமின்றி கேட்டு தெளிவடையவும் வாய்ப்பளிக்கிறது.
இதன் மூலம், தெரிந்த பாடங்களுக்கும் சேர்த்தே, மாதா மாதம் செலவிடும், 'டியூஷன்' கட்டணம் மீதமாவதோடு, பள்ளி முடிந்து, 'டியூஷனு'க்கென்று வெகு தொலைவு அலையும் நேரமும் தவிர்க்கப்படுகிறது.
வித்தியாசமாக யோசித்து, 'மொபைல் டியூஷன்' நடத்தி வரும், எங்கள் பகுதி இளைஞர்களை போல, ஒவ்வொரு பகுதியிலும் துவங்கி, சுய வேலை வாய்ப்பை பெறலாமே!
- எச். சண்முகசுந்தரம், சேலம்.
