
பிரபல ஓவியர் கோபுலு நடத்தி வந்த, விளம்பர நிறுவனத்துக்கு, ஒரு நாள் சென்றிருந்தேன். அதை நிர்வகித்து வந்த விமலா என்ற திறமை வாய்ந்த தலைமை நிர்வாகியிடம், ஒரு கான்டிராக்டர், 'செக்' வாங்க வந்திருந்தார். இளைஞனான அவர், மிகுந்த பணிவும், மரியாதையும் காட்டியவாறு, 'கை கட்டி, வாய் புதைத்து' என்பார்களே... அந்த மாதிரி நின்று கொண்டிருந்தார். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான, 'செக்'கை வாங்க வந்திருந்தார். 'செக்' தயார்; அந்த, 'செக்'கை ஒரு கவரில் போட்டு, அவரிடம் தந்தார் தலைமை நிர்வாகி. 'செக்கை' வெறுமனே தருவது, அவ்வளவு நாசூக்கான செயல் அல்ல என்று, அவ்வாறு ஓர் உறையில் போட்டு தந்தார்.
வாங்கிய கான்டிராக்டர், அந்த, 'செக்'கை உறையிலிருந்து எடுத்துக் கொண்டார். பின், காலியான உறையை, மிக பணிவாக நிர்வாகியிடம் தந்து, 'என்னால் கம்பெனிக்கு வீண் செலவு எதற்கு? இந்தக் கவர் இங்கிருந்தால், வேறு கடிதம் வைக்கப் பயன்படுமே...' என்று, அந்த ஐம்பது பைசா பெறக் கூடிய கவரை, வெகு மரியாதையாக நிர்வாகியிடம் தந்தார்.
நிர்வாகி, 'எங்கள் கம்பெனி மீது, உங்களுக்கு எவ்வளவு அக்கறை?' என்று, இளக்காரப் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார். அந்தக் கான்டிராக்டருக்கு, கம்பெனி மீது எவ்வளவு அக்கறை! ஒரு ஐம்பது பைசா கூட, தனக்காக கம்பெனிக்கு வீண் செலவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில், அவ்வளவு அக்கறை...பொழச்சுக்குவான்! பொழச்சுக்குவான்!
— பாக்கியம் ராமசாமி.

