
நெற்றியில் விபூதியை இட்டுக் கொள்ளும் போது, வறட்டு விபூதியாக இட்டுக் கொள்வதா, குழைத்து இட்டுக் கொள்வதா என்று ஒரு சந்தேகம். சாரி, மூன்று, நான்கு சந்தேகங்கள்.
சந்தேகம் 1: 'வறட்டு'வுக்கு வல்லின, 'ற'வா, இடையின, 'ர'வா?
சந்தேகம் 2: இட்டுக் கொள்வதில், கொள்வதற்கு எந்த, 'ள்'? தேள்க்கு வர்ற,'ள்'ளா? 'அல்வா'வுக்கு வர்ற, 'ல்'லா?
சந்தேகம் 3: குழைத்தது சரியா? குளைத்து சரியா? ('டிவி'யில் செய்தி வாசிப்பவர்களில் பெரும்பாலோர், குளைத்து என்று தானே சொல்கின்றனர். நான், 'டிவி' வழியாக தமிழ் அறிந்தவன்.)
கடைசியாக ஒரு சந்தேகம்: சாயிபாபா பிரசாதமாக தரப்படும்,'உதி'யும், விபூதியும் ஒன்றா? உதின்னா சாம்பல் என்று அர்த்தம் என்பது சரியா...
பின்குறிப்பு: தண்ணீர் தயார் நிலையில் உள்ளது. 'குழைத்தா, குளைத்தா' முடிவு தெரிந்ததும், விபூதியை குளைத்தோ, குழைத்தோ இட்டுக் கொண்டு விடுவேன்.
நாட்டில் எத்தனையோ வழக்குகள் (வளக்குகள்) தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் இதுவுமொன்று.
— பாக்கியம் ராமசாமி.

