
ரா.வீழிநாதன் என்ற பெயர், எனக்குள் எப்போதும் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்தும். அது 'ழ'கரத்தால் அலங்கரிக்கப்பட்ட, அழகான பெயர் என்பதால் மட்டுமல்ல; பல, இந்தித் தொடர்கதைகளை, மொழி பெயர்த்து, 'கல்கி'யில் வெளியிட்டவர் ரா.வீழிநாதன் என்பதால். 'எங்கே பிடித்தார் இந்த வீழிநாதன் என்ற பெயரை' என்று, இத்தனை காலமாக ஒரு யோசனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 'ஸ்ரீ தேஜினி வன மஹாத்மியம்' என்ற நூலை, ஒரு நண்பர் அன்பளிப்பாக தந்தார்.
சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஒரு பக்கம்; தமிழாக்கம் எதிர் பக்கம். புத்தகம் முழுவதும் வீழிநாதன் என்ற கடவுளைப் பற்றிய, புராண வரலாறு. தேஜனீ எனும் வீழிச் செடி, இதை எரிவல்லிக் கொடி என்று அழைப்பர். புதராக ஆங்காங்கே உள்ளது. அந்தக் காட்டில், சிவபெருமான் எழுந்தருளியிருந்தார். சக்தி வாய்ந்த ஆயுதம் வேண்டி மகாவிஷ்ணு, 108 தாமரை மலர்களால், ஈஸ்வரனை அர்ச்சித்து கொண்டிருந்தார். இந்நிலையில், துரதிருஷ்டவசமாக, 108வது தாமரை மலர், காணாமல் போய் விட்டது. அதனால், மகாவிஷ்ணு, தம் கண்ணையே பறித்து, ஒரு மலராக, சிவனுக்கு சமர்ப்பித்தார். சிவபெருமான் அவரது பக்தியை மெச்சி, சக்ராயுதத்தை அளித்தார். விஷ்ணுவின் விழி பெற்றமையால், சிவபெருமான் இத்தலத்தில் வீழிநாதன் ஆனார்.
கும்பகோணத்திலிருந்து, பூந்தோட்டம் போகும் பாதையில், இந்த தேஜினி வனம் உள்ளது. இதற்கு, விஷ்ணு நேத்ரார்ப்பணபுரம் என்ற, புராணப் பெயரும் உண்டு.
— பாக்கியம் ராமசாமி.

