தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கசப்பான இனிப்பு!

கசப்பான இனிப்பு!

கசப்பான இனிப்பு!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆடி மாதம், அம்பாளுக்குரிய மாதம்; பொறுமையின் இலக்கணமான பூமாதேவி, ஆண்டாள் எனும் பெயரில் அவதரித்த மாதம்; சூரியன் தெற்கு நோக்கி பயணம் துவக்கும், தட்சிணாயண கால துவக்க மாதம்; விவசாய மாதம்.

இப்படி பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், இது, கசப்பிலும் இனிப்பைத் தரும் மாதம் என்பது, புதிய விஷயம்.

ஆஷாடா என்ற தேவலோகப் பெண், சிவபெருமானின் தீவிர பக்தை. அவரது கடைக்கண் பார்வை, தன் மீது ஒரு தடவையாவது பட்டு விடாதா என்று ஏக்கம் கொண்டிருந்தாள். தவம் செய்தாள், விரதமிருந்தாள். எதற்கும் பலனில்லை.

அவளது பக்தி கண்டு மகிழ்ந்தார், சிவபெருமான். இருந்தாலும், சோதனையை விடவில்லை. காட்சி தர மறுத்தார். வேறு வழியின்றி, ஒரு பாம்பாக உருவெடுத்து கைலாயத்தில் புகுந்தாள், ஆஷாடா. பின், பார்வதி போல் வடிவெடுத்து, சிவன் அருகே சென்றாள்.

என் மனைவி, பூலோகம் அல்லவா போயிருக்கிறாள்... இந்தப் பெண், என் மீதுள்ள பக்தியால் இப்படி மாறு வேடத்தில் வருகிறாள் என்றால், அவளது பக்திக்கு எல்லையேது. இந்த பக்தி முறை, தவறானது தான். ஆனால், அந்த தவறுதலுக்குள், எவ்வளவு அன்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார், சிவன்.

'பெண்ணே, நீ தவறு செய்து விட்டாய். உன்னை அழிக்கப் போகிறேன்...' என, சூலத்தை ஏந்தி, அவளைத் தடுத்தார்; அவள் சிரித்தாள்.

'ஐயனே... இனி, நான் வாழ்ந்து என்னாகப் போகிறது. நான் இறந்ததும், என் ஆத்மா உங்களைத் தானே அடையும். நான் நிரந்தரமாக உங்களுடன் வாசம் செய்யப் போகிறேன் என்பதை நினைத்தால், மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. எமன் கையில் சிக்காமல், உங்கள் கையால் அழிவது ஆனந்தம் தானே...' என்றாள், சற்றும் கலங்காமல்.

அவளை ஆசிர்வதித்தார், சிவன்.

'பெண்ணே, பக்தி குறித்த உன் மன உறுதி வாழ்த்துக்குரியது. உன் இப்பிறப்பு முடிந்து விட்டது. அடுத்து, நீ பூலோகம் செல். அங்கே கசப்புத்தன்மை கொண்ட மரமாக மாறு. மக்கள், உன்னை வணக்கத்துக்கு உரியவராக ஏற்று, வேம்பு என அழைப்பர்; வேம்புலி அம்மன் என்றும் கொண்டாடுவர்.

'தட்சிணாயண கால துவக்கம், இனி, ஆஷாடம் என, உன் பெயரால் அழைக்கப்படும். நீ சக்தியாக உருக்கொண்டு வந்ததால், ஆடியில் சக்திக்கு நடக்க வேண்டிய அத்தனை பூஜைகளும் உனக்கே நடக்கும்...' என வரமளித்தார்.

காலப்போக்கில், எல்லா கோவில்களிலும் வேப்ப மரம் முக்கியத்துவம் பெற்றது. ஆடி மாதத்தில், மக்கள், கூழ், துள்ளுமாவு (அரிசி, வெல்லம் சேர்த்தது) என, எல்லாவற்றிலும் வேப்பிலை துாவி, ஆஷாடதேவிக்கு மரியாதை செய்தனர்.

தீராத நோயால் சிரமப்பட்டு, வாழ்வே கசந்து போனவர்களுக்கு, வேப்பிலை சிறந்த மருந்தும் ஆகி, இனிமையைக் கொண்டு வந்தது. இன்று பிறந்துள்ள ஆடி மாதத்தின் பெருமையை உணர்ந்து, அதை வரவேற்போம்!

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us