தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரவும் மோசமான புது கலாசாரம்!

நண்பர் ஒருவர், என்னை சந்திக்க வந்திருந்தார். மிகுந்த மன வருத்தத்தோடு அவர் சொன்ன தகவலை கேட்டு, எனக்கு துாக்கி வாரிப் போட்டது.

பள்ளி பயிலும் அவரது மகளின் மொபைல் போனை, அவருடைய மனைவி, எதேச்சையாக பார்க்க நேர்ந்திருக்கிறது. அவளுடைய தோழியர் இணைந்திருக்கும், 'வாட்ஸ் - ஆப்' குழு ஒன்றில், தன் மகள் உட்பட பல பெண் பிள்ளைகள், நிர்வாணமாகப் படம் பிடித்து, அவர்களுக்குள் யாருடைய உடல் பாகம் அழகு என்று விவாதித்திருப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இதுபற்றி உடனே அவர், தன் கணவரிடம் கூற, அவரும் அதிர்ச்சி அடைந்தாலும், இதை கவனமாக கையாள நினைத்தார். மனைவியிடம் கூறி, மனநல ஆலோசகரிடம் மகளை அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.

மனநல ஆலோசகரிடம், 'பாடி ஷேபிங்' எனும், உடலைப் பற்றிய கேலி தான், இப்படி செய்யத் துாண்டியதாக கூறியுள்ளார், நண்பரின் மகள்.

குடும்பத்தாரோ, மற்றவர்களோ, வேறு எதற்காகவும் தங்களை திட்டுவதைக் கூட அனுமதிக்கின்றனர், வளரிளம் பருவத்தினர். ஆனால், தங்கள் உடல் அவயங்களை முன்னிறுத்தி, குறை கூறி, கேலி பேசுவதை வெறுக்கின்றனர். அதனாலேயே, தங்கள் உடல் அழகை படமெடுத்து, தாங்களே, 'வாட்ஸ் - ஆப்' குழுக்களில் பகிர்ந்து, கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றனராம்.

புதிதாக இதுபோன்ற மோசமான கலாசாரம் பரவுவது, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே வழிவகுக்கும்.

பெற்றோரே... உங்கள் பிள்ளைகளின், 'வாட்ஸ் - ஆப்' குழுக்களில், இப்படியொரு வில்லங்கம் இருப்பது தெரிந்தால், அவர்கள் மீதான உங்கள் கண்காணிப்பை பலப்படுத்துங்கள்!

- வி.சங்கர், சென்னை

இப்படி செய்யுங்கள்!

தோழியுடன் கடைக்கு சென்றேன். மின்சாதன பொருட்கள் விற்கும் கடையில், அதிக, 'வாட்' அளவு கொண்ட எல்.இ.டி., பல்பு ஒன்று வாங்கினாள்.

'எதற்கு இவ்வளவு பவர்புல்லான பல்பு...' என்றேன்.

'எங்கள் வீட்டின் பின்புறம் சாலைக்கு, பல்பு போட்டிருக்கிறோம்; அது, 'பியூஸ்' ஆகி விட்டது...' என்றாள்.

'நீங்கள் ஏன், சாலைக்கு பல்பு போட்டுருக்கீங்க... மின்சாரம் இலவசமாக கிடைக்கிறதா?' என்றேன்.

'அந்த சாலைக்கு தெரு விளக்கு இல்லாததை, சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியபோது, 'வீட்டுக்கு ஒரு விளக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?' என, கேட்டனர்.

'அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருட்டாக இருந்ததால், சமூகவிரோதிகளால் பலமுறை பிரச்னைகள் ஏற்பட்டது. குறிப்பாக, பெண்கள் அந்த வழியாக செல்ல முடியாத நிலை இருந்தது.

'சி.சி.டி.வி., கேமரா பொருத்தலாம் என முயற்சித்தபோது, உறவினர் மகன், 'சி.சி.டி.வி., பொருத்தாதீர். காவலர்கள் அடிக்கடி, 'புட்டேஜ்' கேட்பர்; பெரிய தொல்லையாகி விடும். ஆகவே, மின் விளக்கு ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள்...' என, ஐடியா தந்தான்.

'அதன்படி, மின் கட்டணத்திற்காக கணக்கு பார்க்காமல், பாதுகாப்பே முக்கியம் என கருதி, எல்.இ.டி., பல்பு போட்டிருக்கிறோம். இப்போது, சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதில்லை...' என்றாள்.

வாசகர்களே... நம் பாதுகாப்பு நம்மிடம் தான். இது போன்று, சமூக விரோதிகள் தொல்லையில், சிக்கியிருக்கிறீர்களா... இந்த நடைமுறையை பின்பற்றுங்கள்; சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.

ம.காவியா, கோவை.

கோழிக் கறி வாங்க போகிறீர்களா?

அன்று ஞாயிற்று கிழமை. வழக்கம்போல, வீட்டின் முதல் தளத்தில் நின்று வெளியே பார்த்தபோது, வீட்டின் முன், பாதி தெருவை அடைத்தபடி, கறிக் கோழிகள் கொண்டு செல்லும் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் இது ஏன் இங்கே நிறுத்தப்பட்டுள்ளது என்று கவனித்தேன். சிறிது நேரத்தில், நான்கு தெரு தள்ளி கோழி இறைச்சிக்கடை நடத்தும் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்தார்.

உடனே, லாரியிலிருந்து உதவியாளன் ஒருவன் இறங்கி, வாகனத்தின் பின்பக்க கதவை திறந்து, உள்ளே இருந்த செத்துப் போன கோழிகளை, இருசக்கர வாகனத்தில் வந்த கோழிக்கடைக்காரர் வைத்திருந்த சாக்குப்பையில் போட்டான்.

எனக்கு விஷயம் புரிந்தது. வேகமாக அங்கு சென்று, அந்த சில்லரை வியாபாரியான கோழிக்கடைக்காரரை பிடித்து உலுக்கினேன். என்னைக் கண்டதும், திருடனுக்கு தேள் கொட்டியது போல் விழித்தார்.

ஏரியா கவுன்சிலருக்கு நான் போன் செய்தவுடன், அவர் வந்து விசாரித்தார். செத்துப் போன கோழிகளை புதைக்க ஏற்பாடு செய்ததோடு, லாரி ஓட்டுனர், உதவியாளர் மற்றும் வியாபாரியை எச்சரித்து அனுப்பினார், கவுன்சிலர்.

இதேபோல் போக்குவரத்தின் போது செத்துப் போன கோழிகளை, குறைந்த விலைக்கு வாங்கி, சில்லரை வியாபாரிகள் கடையில் விற்பது பரவலாக நடக்கிறது. எனவே, சிக்கன் வாங்கும்போது, உயிருடன் இருக்கும் கோழியை நம் கண்முன்னே வெட்டித்தரச் சொல்லி வாங்குவது நல்லது.

- என். ஆசைத்தம்பி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us