PUBLISHED ON : ஏப் 09, 2017

இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும், வெள்ளை சீனியால் உடலுக்கு உண்டாகும் கேடுகள் குறித்த விழிப்புணர்வும் பெருகி வரும் நிலையில், மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது, கருப்பட்டி பால்கோவா!
வெண்ணிற பருத்தித் துணியால் மூடிய சிறிய மண் கலயத்தில் தரப்படும் பால்கோவா, பார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது.
பசும்பாலை, விறகு அடுப்பில் சுண்டக் காய்ச்சி, பனங்கருப்பட்டி சேர்த்து, சுக்குப்பொடி, நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்தால், கமகமக்கும் கருப்பட்டி பல்கோவா தயார்!
திருப்பூர் மாவட்டம், கன்னிவாடி அருகில் உள்ள கருப்பன்வலசு கிராமத்தில் பிரபலமான இந்த பால்கோவா, தற்போது, சென்னை, வேளச்சேரியில் உள்ள ராம் நகரிலும் கிடைக்கிறது.
கருப்பட்டி பால்கோவாவிற்கு இருக்கும் வரவேற்பை அறிந்து, தன் ஐ.டி., வேலையை துறந்து, இங்கு கடை வைத்துள்ள கலைமகள், இது குறித்து கூறும் போது, 'மாட்டுப் பண்ணையில் இருந்து கறந்த பசும் பாலை வாங்கி, நேரடியாக கைப் பக்குவத்தில் காய்ச்சுகிறோம்; அதனால், இயற்கையான ருசி கிடைக்கிறது. பிறந்தநாள் மற்றும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில், ஐஸ் கிரீம்களுக்கு பதிலாக கருப்பட்டி பால்கோவாவிற்கு நிறைய ஆர்டர் வருகிறது...' என்கிறார்.
பிளாஸ்டிக் கவர்களில், பிசுபிசு வென பால்கோவா வாங்கிப் பழகியவர்களுக்கு, இது, புது அனுபவமாக இருக்கும். ஆர்கானிக் உணவுகள் மீது ஆர்வமும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கொண்ட உணவுப் பிரியர்களுக்கு, இது ஆரோக்கிய விருந்து.
கலைமகளை தொடர்பு கொள்ள: 99 62 25 09 49.
- மு.ஆதவன்
