தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலக்கும், 'கிரீன் ஆர்மி!'

கலக்கும், 'கிரீன் ஆர்மி!'

கலக்கும், 'கிரீன் ஆர்மி!'


PUBLISHED ON : அக் 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிராமங்களில் திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களில் சிலர், குடும்ப வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் பாலியல் கொடுமைக்கு உள்ளாகின்றனர். அவர்களை அதில் இருந்து மீட்டு எடுக்க, பெண்களால் நடத்தப்படுவது தான், 'கிரீன் ஆர்மி' - பசுமை ராணுவம் எனும், கிராம பெண்கள் படை.

கடந்த 2014ல், வாரணாசி பல்கலைக்கழக மாணவ - மாணவியர், உ.பி.,யில் உள்ள வாரணாசி, மிர்சாபூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்றனர்.

அப்போது அவர்கள் சந்தித்த பல குடும்பத் தலைவிகளின் கதைகள், கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

குறிப்பாக...

* பெரும்பாலான புகார்கள், கணவர்கள், மது குடித்துவிட்டு, மனைவியை அடிப்பது அன்றாட நிகழ்வு. கர்ப்பமாக இருந்தபோதும், கண்மண் தெரியாமல் அடிப்பர். இதை குடும்பத்தாரும், அக்கம் பக்கத்தாரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, எதுவும் செய்ய முடிவதில்லை

* அப்பாவி கணவர் இருக்கும் வீட்டில், மாமியாரின் கொடுமையும், மாமானாரின் பாலியல் சீண்டலும் இருப்பதாக, கண்ணீர் விட்டவர்களும் உண்டு

'கணவர்களுக்கு ஏற்படும் விரக்தியின் வடிகாலாக, நாங்கள் தான் இருக்கிறோம். ஏன், எதற்கு என்றே தெரியாமல் பட்டினி போடுவர். கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து அடிப்பர். மழையிலும், குளிரிலும் வீட்டை விட்டு துரத்துவர்.

'போலீசிற்கு போனால் கோர்ட், வழக்கு, வாய்தா என, எங்கள் உணர்வுகளை உளப்பூர்வமாக புரிந்து கொள்ள முடியாதவர்களுடன் நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். மேலும், அதற்கெல்லாம் பணம் வேண்டும். அது எங்களிடம் சுத்தமாக கிடையாது

'எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் வாழ்கிறோம். சில நேரம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பி, மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்டோம். ஆனால், அதில் கூட எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை; சாக விடாமல் காப்பாற்றி விட்டனர்.

'ஒருவேளை... நாங்கள் தான் கொளுத்துவோம் என்று முடிவு செய்திருப்பர் போலும்...' என, தீ தழும்புகளையும், அடிபட்ட காயங்களையும் காண்பித்து, ரத்த கண்ணீர் வடித்தனர்.

இதுபோன்ற கொடுமைக்கு ஆளான, பாதிக்கப் பட்டவர்களை எல்லாம் ஒன்று சேர்த்தனர், பல்கலைக் கழக மாணவியர். முதலில், 25 பேர் சேர்ந்தனர்.

மாணவியர் கூறியது: அங்குள்ள பெண்களுக்கு, இரண்டரை மாதம், தன்னம்பிக்கை மற்றும் தற்காப்பு என, எல்லா விஷயங்களிலும் பயிற்சி அளித்து, 'கிரீன் ஆர்மி' என்று தலைப்பு கொடுத்தோம். மற்றவர்களிடம் இருந்து தனி அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காக, பச்சை உடை வழங்கி, கையில் ஒரு லத்தியையும் கொடுத்தோம்.

இவ்வளவு ஏற்பாடுகளும் செய்தபின், ஒரு பெண் பாதிக்கப்பட்ட போது, வீட்டுக்கு வெளியே வந்து, தன், 'கிரீன் ஆர்மி'யை திரட்டி, வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் உள்ளோர் மிரண்டு போயினர்.

'எல்லாம் எங்களுக்கு தெரியும் இன்னொரு முறை மனைவியின் மீது கை வைத்தால், நாங்கள் பேச மாட்டோம் இந்த தடிதான் பேசும்...' என்று, மிரட்டி விட்டு வந்தனர்.

சில வீடுகளில், தடி பேசவும் செய்தது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாமனாரை தெருவிற்கு இழுத்து வந்து வெளுத்ததில், பல மாமனார்கள், மருமகள்கள் இருக்கும் திசை பக்கம் கூட இப்போது திரும்புவதில்லை.

கிரீன் ஆர்மியின் செயல்பாடுகளால் கவரப்பட்டு, அடுத்தடுத்த கிராமங்களில் பல குழுக்கள் துவக்கப்பட்டுள்ளன. இப்போது இந்த ஆர்மியில், 1,800 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கிரீன் ஆர்மியின் செயல்பாடுகள் உள்ள கிராமங்களில் பெரும்பாலும், ஆண்கள் குடிப்பதை நிறுத்தி விட்டனர். பெண்களை அடிப்பதை அறவே விட்டு விட்டனர். குடிகார கணவர்களை திருத்துவது மட்டுமே, இப்போது கிரீன் ஆர்மியின் வேலை இல்லை. பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும் கண்காணிக்கின்றனர். இதனால், பள்ளிகள் இப்போது ஒழுங்காக இயங்குகிறது; குழந்தைகள் நன்கு படிக்கின்றனர்.

இக்குழுவினர், நேரிடையாக அதிகாரிகளை அணுகுவதால், குடி தண்ணீர் சீராக வருகிறது. தெரு விளக்குகள் நன்கு எரிகிறது. செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கி, நிதி ஆதாரத்தை பெறுகின்றனர். அடுத்தடுத்து வளர்ச்சிப் பாதையில் செல்ல, முனைந்து செயல்படுகின்றனர்.

எதைச் செய்தாலும் முதலில் அஹிம்சை வழியில் சொல்வதாலும், செல்வதாலும் உள்ளூர் போலீசின் ஆதரவும் இவர்களுக்கு உண்டு. அடையாள அட்டை கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளனர், என்று கூறினர், மாணவியர்.

'நாங்கள் போட்டிருக்கும் முக்காடு, மார்பிலிருந்து நெற்றிக்கு வரவே பல நுாற்றாண்டுகள் பிடித்தது. மாற்றங்கள் என்பது படிப்படியாகத்தான் வரும்...' என்று கூறும், 'கிரீன் ஆர்மி' குழுவினர் போன்று நம்மூரிலும் உருவானால், பல பிரச்னைகள் தீரும்.

எம். கலைச்செல்வி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us