PUBLISHED ON : ஆக 02, 2020

ஸ்ரீவில்லிப்புத்துாரைச் சேர்ந்தவர்; துாய்மையான உள்ளம் கொண்டவர்; முழுமையான பக்தியுடன் ஆண்டாள் கோவிலில், தம்மால் இயன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தவர். இந்த வில்லிப்புத்துார் பக்தரை, வில்லியார் என்றே பார்க்கலாம்.
பழைய ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதை போல, வில்லியாருக்கு கடும் நோய் உண்டானது. பார்த்தவர் அனைவரும் மனம்வெறுத்து ஒதுங்கி அகன்றனர்.
'நம்மால் ஏன் மற்றவர் மனம் புண்பட வேண்டும்...' என, எண்ணி, தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார், வில்லியார். ஊருக்கு வெளியே ஓரிடத்தில், ஓலை குடிசை கட்டி, அதில் தங்கினார்.
தாய்ப்பாசம் சும்மா விடுமா... வில்லியாரின் தாயார், தினமும் அங்கு சென்று, தன் மகனுக்கு உணவளித்து வந்தார்.
ஒருநாள் பெரும் மழை பிடித்துக் கொண்டது. தாயாரால் குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியவில்லை. வில்லியாரோ, நோயின் கொடுமையாலும், பசியாலும் வருந்தினார்.
ஆண்டாளை எண்ணி, 'அம்மா... என் துயரத்தைப் போக்கியருள்...' என, வேண்டினார்.
தன் பக்தரின் துயர் தீர்க்க எண்ணினார், ஆண்டாள். அரவணைப் பிரசாதத்தையும், நீரையும் எடுத்து, வில்லியாரின் தாயார் வடிவில் வந்தார். அதை வாங்கி உண்டார், வில்லியார். அதே விநாடி, அவரைப் பிடித்திருந்த பசிப்பிணி மட்டுமல்ல, உடற் பிணியும் சேர்ந்தே போயிற்று.
நோய் நீங்கிய, வில்லியார் மகிழ்ந்து, 'அம்மா... இந்த பிரசாதங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன...' என, கேட்டார்.
தாயார் வடிவில் வந்திருந்த ஆண்டாள், 'ஆண்டாள் தான் கொடுத்தருளினாள்...' என்று சொல்லி, மறைந்தார்.
மழை நின்றிருந்தது. அந்த வேளையில், வில்லியாரின் தாயார் வந்தார். தாயாரைப் பார்த்ததும் தான், தாய் வடிவில் வந்து அருள் புரிந்தது, ஆண்டாள் என்று அவருக்குப் புரிந்தது.
மெய்மறந்த நிலையில் ஆண்டாளை துதித்துப் பாடினார். அப்போது, வில்லியார் பாடிய அப்பாடல்கள், 'ஆண்டாள் சந்திர கலா மாலை' எனப்படுகிறது.
நோயால் தன்னைத் தானே ஊரை விட்டே தனிமை படுத்திக்கொண்ட வில்லியாருக்கு, அருள்புரிந்தார், ஆண்டாள். நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்!
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
விஷ்ணுவை வணங்கி, வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே, விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன், அங்கே உட்காரக் கூடாது
* சுவாமி படங்களில், உலர்ந்த பூக்களை அப்படியே விட்டு வைக்கக் கூடாது.