
இந்த லோகத்தில் சிலரை ஏமாற்றி விடலாம். ஆனால், ஏமாற்றப்பட்டவர்கள், பரலோகத்தில் வந்து காத்திருந்து, ஏமாந்த பொருளைப் பெற்று விடுவர். நாவிதன், சலவைத் தொழிலாளி, செருப்பு தைப்பவன் மற்றும் வைத்தியன் ஆகியோரை ஏமாற்றக் கூடாது என்பது சாஸ்திரம்.
ஒரு செருப்பு தைப்பவனிடம், செருப்பு வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் ஒருவர். செருப்பு தைப்பவன் காலமாகி, பரலோகத்தில் உட்கார்ந்திருந்தான்; ஏமாற்றியவரும் காலமாகி பரலோகம் வந்தார். அவரைப் பார்த்ததும், 'என்னிடம் வாங்கிய செருப்புக்குப் பணம் கொடுத்தால் தான் வழி விடுவேன்...' என்று சொல்லி, வழியை மறைத்தான் செருப்பு தைப்பவன்.
பரலோகத்தில் பணம் ஏது? ஏமாற்றியவர் வழி தெரியாமல் திண்டாடினார். அப்போது, அங்கு வந்தார் ஒரு பிராமணர். விஷயத்தைத் தெரிந்து, தன் உடலிலிருந்து செருப்பு அளவு சதையை வெட்டி, அவரிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட செருப்பு தைப்பவன், ஏமாற்றியவருக்கு வழி விட்டான்.
தன் சதையை வெட்டிக் கொடுத்த பிராமணருக்கு உடனே சதை வளர்ந்து விட்டது. இது எப்படி என்றால்... இவர், குளத்தங்கரையில் இருந்த அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றியிருந்தார். அந்த புண்ணியத்தின் பலனாக, சதை அறுந்த இடத்தில் சதை வளர்ந்து விட்டது. இந்த பிராமணனும் புண்ணிய லோகம் சென்றார்.
அரச மரத்துக்கு ஒரு சொம்பு தண்ணீர் விட்டதே, அவ்வளவு புண்ணியம் என்றால், ஒரு அரச செடி வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்தால், எவ்வளவு புண்ணியம் என்பதை யோசிக்க வேண்டும்.
வாழ்நாளில் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். அதில், சில நல்ல காரியங்களையும் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாமே... பிறரை ஏமாற்றாமல் பிழைக்க வேண்டும், பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, பிறரைப் பார்த்து பொறாமைப் படக் கூடாது. கல்வி விஷயத்தில் மட்டும், அவன் படித்த அளவு நாம் படிக்கவில்லையே... என்று பொறாமைப்படு என சொல்லியிருக்கிறது.
தம்மின் மெலியாரை நோக்கி தமதுடமை
அம்மா... பெரிதென்று அகமகிழ்க, தம்மின்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக - கற்றதெல்லாம்
எற்றே இவர்க்கு நாம் என்று!
— இப்படி ஒரு பாடல் உள்ளது. அதனால், பிறரைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம். கல்வியில் மட்டும் போட்டி போடலாம். முடியுமா?
***
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!
— இதன் பொருள் என்ன?
பிரம்மன் எனும் குயவன் செய்த, மனிதன் என்ற மண்பாண்டம் உடைந்து விட்டது என்பது அதன் பொருள். அது காயம்; நிலையாமையைக் குறிப்பது. 'காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, ஆயனார் குயவன் செய்த மண்பாண்டம் ஓடடா!' என்ற பாடல் இயற்றப்பட்டதும் இதை உணர்த்தத்தான்.
***
வைரம் ராஜகோபால்

