
குட்டு வாங்கிக் கொண்டே இருக்காதீர்கள் பெண்களே...
பத்து வருடங்களுக்கு முன், என் கணவர், அரசு துறையில், 'கிளார்க்'காக இருந்தார். எனவே, என்னுடைய கல்யாணத்திற்கு வரதட்சணையாக, 15 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொடுத்தார் என் தந்தை. சில ஆண்டுகளில், என் கணவர், உயர் பதவிக்கு வந்து விட்டதால், சம்பளம், கிம்பளம் அதிகரிக்கவே, குடி, சூதாட்டம் என, வரவுக்கு மேல் செலவு செய்ய ஆரம்பித்து விட்டார். தட்டிக் கேட்டால், தினமும் அடி, உதைதான். பொறுமையாக இருந்தாலும் அடி, உதை கூடியதே தவிர, குறையவில்லை. மேலும், கடன் அதிகரித்ததால், 'உன் அப்பன் கிட்ட பணம் கேட்டு வா,' எனத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
ஒரு முடிவுக்கு வந்த நான், 'என் கல்யாணத்திற்கு, எங்கப்பா செய்த நகை, பணம் எல்லாவற்றையும் வட்டியுடன் தந்தால், என் தாய் வீட்டிற்கே சென்று விடுகிறேன். நீங்கள் நிம்மதியாக உங்கள் இஷ்டத்துக்கு இருக்கலாம்...' என்றேன். அவ்வளவு காலம் அடங்கியிருந்த நான், 'பாயும் புலி'யாக எதிர்க்க ஆரம்பித்தவுடன் வீம்புக்கு, 'இதோ ஏற்பாடு செய்கிறேன்...' என்று கத்தினார். சிறிது நாட்களில் தன் தவறை உணர்ந்து, அடி, உதையை குறைத்து, அன்பு செலுத்த ஆரம்பித்து விட்டார்.
பெண்களே... குட்ட குட்ட குனிந்தால், குட்டிக் கொண்டே இருப்பர் இந்த ஆண்கள். எனவே, சரியான நேரத்தில், நிமிர ஆரம்பித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள், இந்த ஆண்களை... பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுகிறார்களா இல்லையா என்பதை!
— கே.விமலா, புதுச்சேரி.
வரட்டு கவுரவம் கொள்ளாதீர்!
திருமணமான புதிதில், சிறு சிறு சச்சரவுகளுக்கு எல்லாம், தாய்வீடு சென்று விடுவாள் என் மனைவி. ஒருமுறை, என் மனைவி செய்த தவறை அதிகமாக கண்டித்ததால், ரொம்ப கோபம் வந்து, தாய் வீடு சென்று விட்டாள். எனவே, நானே அவள் வீட்டிற்கு சென்று, 'என் மீது தான் தவறு; மனைவி மீது தவறில்லை...' என்று, அவள் அண்ணன்மாரிடம் சொல்லி, 'டீசன்ட்'டாக மன்னிப்பு கேட்டு, மனைவியை அழைத்துப் போவதாக கூறினேன்.
இதை அறிந்த என் மனைவி, 'என் மீது, இவ்வளவு பாசம் வைத்திருக்கும் உங்களை, இப்படி மன்னிப்பு கேட்க வைத்து விட்டேனே...' என்று உருகி மனம் வருந்தினாள். அத்துடன், 'இனி, என் வாழ்நாளில் என்ன சண்டை, சச்சரவு வந்தாலும், கோபித்துக் கொண்டு தாய் வீடு செல்ல மாட்டேன்...' என்று சொன்னதோடு, பல வருடங்களாக நிரூபித்தும் காட்டி விட்டாள்.
அன்று மட்டும் நான் கவுரவம் பார்த்து வலிய சென்று என் மனைவியை அழைக்காமல் இருந்திருந்தால், மண்ணுக்குள் இருக்கும் வைரம் போல, என் மனைவியின் நல்ல குணங்கள் தெரியாமலே போயிருக்கும்; சிறு புகைச்சல் பெரிதாகி விவாகரத்து வரை சென்றிருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்... கணவன் - மனைவி இடையே வரட்டு கவுரவம் பார்க்காதீர்; அது உங்கள் வாழ்வையே பாழாக்கி விடும்!
— பி.எஸ்.மணிவண்ணன், சென்னை.
ஏன் டிரைவரை வைத்துக் கொள்வதில்லை?
என் முதலாளியின் வெளியூர் பயணங்களின் போது, துணையாய் நான் செல்வேன். அவர் டிரைவர் வைத்துக் கொள்ள மாட்டார். மாலை, 7:00 மணியிலிருந்து, விடிகாலை, 5:00 மணிவரை எந்த தலைபோகும் காரணமானாலும் வண்டி ஓட்ட மாட்டார். எந்த வேகத்தில் சென்றாலும், வண்டி தன் முழு கட்டுப்பாட்டில் இருப்பது போல பார்த்துக் கொள்வார். அவருடன் பயணம் செய்வோர், 'சீட்பெல்ட்' போட்டுக் கொள்வது மிகக் கட்டாயம்.
ஒரு தடவை, நான் அவரிடம், 'நீங்க ஏன் டிரைவர் வைத்துக் கொள்வதில்லை முதலாளி...' என்றேன்.
அதற்கு அவர், 'இப்போதெல்லாம் தேவை இருக்கிறதோ இல்லையோ, பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவே, நிறைய பேர், ஓட்டத் தெரியாமலேயே, வண்டி வாங்கி விடுகின்றனர். பின், டிரைவர் வைத்து ஓட்டி, குடும்ப ரகசியங்களை, டிரைவர் காதில் கொட்டி விடுகின்றனர்.
'ஒரு கட்டத்தில், டிரைவருக்கு அடிமையாகி விடுகின்றனர். அதன்பின் பல பிளாக்மெயில்கள், அரங்கேறுகின்றன. என்னை பொறுத்தவரை, கார் வைத்திருப்போர் தான், கார் ஓட்ட வேண்டும். அதனால், காருக்கும், கார் உரிமையாளருக்கும் ஒரு மானசீக நெருக்கம் ஏற்படும்.
'கார் உரிமையாளர், காரை ஓட்டி, கார் ஓட்டும் சந்தோஷத்தை சிந்தாமல், சிதறாமல் அனுபவிக்க வேண்டும். உரிமையாளர், காரின் குறிப்பறிந்து, அதன் தேவைகளை, அவ்வப்போது நிறைவேற்ற வேண்டும். மொத்தத்தில், என் பயண தேசத்தின், அந்தப்புர மகாராணி தான் என் கார்...' என்றார்.
அதன் பின், நான் முதலாளியை காருடன் பார்க்கும்போதெல்லாம், கார் என்னை பார்த்து கண் சிமிட்டும்; அன்பாய் வாலாட்டும். என் மீது பாய்ந்து, என் முகத்தை நக்கிக் கொடுக்கும்.
— ஆர்.ஆர்.தயாளன், சிங்கம்புணரி.
நோ டென்ஷன்!
சமீபத்தில், எங்களது ஊரில் உள்ள கோவிலில், காலையில் வழிபாட்டிற்காகச் சென்றிருந்தேன். வழிபாடு முடித்து வெளியே திரும்பிய நேரத்தில், நடைசாத்தும் நேரம் ஆரம்பமானது. அந்நேரத்தில், ஒரு வயதான அம்மா கோவிலின் உள்ளே சென்று, அர்ச்சனை சீட்டைக் கொடுத்து, அவர்களது குடும்பத்தினருக்கு அர்ச்சனை செய்யச் சொல்லி அர்ச்சகரிடம் கொடுத்தார். உடனே, அந்த அர்ச்சகருக்கு வந்ததே கோபம்... 'ஏம்மா... இப்படி நேரங்கெட்ட நேரம் வந்து, எங்க உயிரை வாங்குறீங்க? அதெல்லாம் இப்போது முடியாது; கிளம்புங்கள்...' என்று கோபமாக கூறி விட்டார்.
அந்த சமயம், வேறொருவர் கையில் நிறையப் பொருட்களுடன் வந்தார். அவருக்கு மட்டும் தனியாக கவனிக்கப்பட்டது, வேறு விஷயம். ஆனால், அந்த அம்மாவுக்கு என்ன பிரச்னையோ? அவர் அப்படி பேசியதும் ஏற்கனவே புண்பட்ட மனம், மேலும் கஷ்டப்பட்டு, கண்ணீர் விட்டபடி அழுது கொண்டே சென்றார். பார்க்கும் போது மனம் மிகவும் கனத்தது.
நடைசாத்தும் நேரம் ஆரம்பமானது, அர்ச்சனை சீட்டு கொடுக்கும் கோவில் அதிகாரிக்கு தெரியாதா? முதலிலேயே கோவில் அதிகாரிகள் சீட்டைக் கொடுக்காமல் இருந்திருக்கலாமே!
கோவிலில் பணியாற்றும் ஊழியர்களே... கோவிலுக்கு வருபவர்கள் ஏதேனும் தவறு செய்தால் கூட, அதை அமைதியாக சொல்லி, திருத்த முயலுங்கள், ஏனென்றால், வருபவர்கள் எல்லாரும், தம்முடைய பிரச்னை தீரத்தான் கோவிலுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கும் பிரச்னை வந்தால் எங்கே போவது... சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பரா?
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

