PUBLISHED ON : மார் 24, 2019

ஆந்திர பத்திரிகையாளர் ஒருவர், பொற்கோவில் வரலாறு குறித்து கேள்வி எழுப்ப, 'சீக்கியர்களின் புனிதமான இடம்...' என, அனைவரும் கூறினர்.
அதற்கு அவர், 'புனிதமான இடம் தான்... ஆனால், அங்கு, 492 பேர் கொல்லப்பட்டு, ரத்தம் சிந்திய இடம்...' என, வரலாறை கூற ஆரம்பித்தார்:
இப்போது, காஷ்மீரில், தனி நாடு கேட்டு போராடும், பயங்கரவாதிகளை போல், 1984க்கு முன், பஞ்சாபிலும், தனி நாடு கேட்டு, 'காலிஸ்தான் விடுதலை படை' செயல்பட்டது.
பஞ்சாபில், போலீஸ், ராணுவ வீரர்களை சுட்டு கொல்வது, அமைதியை சீர்குலைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டது. இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக, ஜூன் 3, 1984ல், நுாற்றுக்கணக்கான காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள், பொற்கோவிலுக்குள் நுழைந்தனர்.
அங்கு பக்தர்களை சுட்டுக் கொன்றனர். பொற்கோவிலை சுற்றி பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார், ராணுவ வீரர்களை நோக்கியும் சரமாரியாக சுட்டு தள்ளினர். ராணுவ வீரர்கள் தரப்பிலும் பலர் இறந்தனர். ஜூன், 6 வரை, பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்தது.
அப்போதைய பிரதமர், இந்திரா உத்தரவால், பொற்கோவிலுக்குள் புகுந்த இந்திய ராணுவம், 'புளு ஸ்டார் ஆப்பரேஷன்' என்ற தாக்குதல் மூலம், பயங்கரவாதிகளின் தலைவன், பிந்தரன்வாலே உள்ளிட்ட அவனது ஆட்களை கொன்றது.
புனிதமான பொற்கோவில், ரத்த கறையானது. பொற்கோவிலும் பலத்த சேதமடைந்தது. பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கியதால், காலப் போக்கில், பஞ்சாபில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது; தனி நாடு கோரிக்கையும் கைவிடப்பட்டது.
இருப்பினும், தங்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட, அப்போதைய பிரதமர், இந்திராவை கொல்ல, காலிஸ்தான் பயங்கரவாதிகள், சதி திட்டம் தீட்டினர். அதன் விளைவாக, பிரதமரின் வீட்டில் பணிபுரிந்த, சீக்கிய இனத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர், சத்வத்சிங் என்பவனால், இந்திரா சுட்டு கொல்லப்பட்டார், எனக் கூறி முடிக்கவும், பொற்கோவிலை அடையவும் சரியாக இருந்தது.
அங்கு, நுழைவதற்கு முன், சீக்கிய இன சின்னம் பொறிக்கப்பட்ட காவி துணியை, தலையில் கட்டி செல்லும்படி ஊழியர்கள் கூறினர். அற்புதமாக நீர் நிறைந்த குளத்தின் நடுவே, பொற்கோவிலை கண்டதும், பரவசம் அடைந்தோம். நீண்ட வரிசையில் காத்திருந்து, பொற்கோவிலிலுக்குள் சென்றோம்.
எங்களுடன் வந்த வழிகாட்டி, 'ஹர்மந்திர் சாஹிப் என்றால், கடவுள் கோவில் என்று பொருள். கி.பி., 1577ல், சீக்கியர்களின் நான்காவது குருவான, குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். பின், அதை சுற்றி வளர்ந்த நகரத்திற்கு, அமிர்தசரஸ் என்ற பெயர் வந்தது...
'சீக்கியர்களின் புனித நுாலான, 'குரு கிரந்த் சாகிப்' இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டது தான், பொற்கோவில்...' என்றார்.
உள்ளே சென்று பார்த்து, பொற்கோவிலை சுற்றி, மொபைலில் படம் எடுத்து கொண்டோம். பொற்கோவிலுக்குள், பக்தர்களுக்கு மதிய உணவு தரப்படுகிறது. வரிசையாக சென்ற பக்தர்களிடம், தட்டு, கிண்ணம், ஸ்பூன் தரப்பட்டன. அனைவரும், தரையில் அமர கூறினர். கீரை குழம்பு, இனிப்பு கஞ்சி வழங்கினர்.
பைகளுடன் சுற்றி வந்த கோவில் ஊழியர்கள், கையேந்தும் பக்தர்களுக்கு, சப்பாத்தியை அள்ளி வீசினர். மதிய உணவை முடித்து, மினி பஸ்சில், வாகா எல்லையை நோக்கி பயணித்தோம்...
மாலை, 4:15 மணிக்கு, வாகா எல்லையை அடைந்தோம். அன்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்ட மக்கள் கூட்டம், இரு மாநில எல்லைகளிலும் அதிகமாக காணப்பட்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பை கண்டு ரசித்தோம்.
குறிப்பாக, நாட்டு பற்றை உணர்த்தும் வகையில், ராணுவ வீரர் ஒருவர், மாணவ - மாணவியரிடம், 'பாரத் மாதாவுக்கு ஜே...' என, உரக்க கூறுமாறு பணித்தார். அதற்கேற்ப, அனைவரும் கரகோஷம் எழுப்ப, வாகா அணிவகுப்பு அன்று நிறைவு பெற்றது.
பின், ஓட்டல் அறைக்கு பஸ்சில் புறப்பட்ட போது, எங்களுடன் வந்த, பி.ஐ.பி., 'கான்சல்டன்ட்' ஒருவரின் பிறந்த நாள் என தெரிந்தது. சக பத்திரிகையாளர்களும், அவரிடம், 'பார்ட்டி இல்லையா...' என்றனர். 'பஸ்சுக்குள் பார்ட்டியா... பெண் நிருபர்கள் இருக்கின்றனர்; அறைக்கு சென்று, மது தருகிறேன்...' என்றார்.
பத்திரிகையாளர்களில் சிலர், 'இரவு நேரமாகி விடும். இடையில் எங்காவது சரக்கு வாங்குவோம்...' என்றனர். அதற்கேற்ப, வழியில், ரயில்வே கேட் மூடி இருந்ததால், பஸ் நின்றது. அதை சாக்காக வைத்து, 'லோக்கல் ரம்' பாட்டில்களை வாங்கி வந்தனர், நண்பர்கள்.
கை வசம் இருந்த, தண்ணீர் பாட்டில்களை வைத்து, கொறிக்க ஏதுமின்றி, 'ரம்' சாப்பிட்டோம். பின், ஓட்டலை அடைந்தவுடன், 'டின்னர்' தயாராக இருந்தது. ஆளாளுக்கு, மட்டன், சிக்கன் என, பிரித்து மேய, இரவு பொழுது கழிந்தது.
மறுநாள், சொந்த மாநிலங்களுக்கு புறப்பட, அனைத்து பத்திரிகையாளர்களும் தயாரானோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஒரே இடத்தில் குவிந்திருந்த அனைவரும், பிரியா விடையுடன், திரும்பினோம்.
— முற்றும்
வாகா!
இந்திய - பாகிஸ்தான் இடையேயான சாலைப்புற எல்லை பகுதி. பஞ்சாபின், அமிர்தசரஸ் நகரத்தையும், பாகிஸ்தான் பஞ்சாபின், லாகூர் நகரத்தையும், சாலை வழியே இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. அமிர்தசரசிலிருந்து, 32 கி.மீ., மற்றும் லாகூரிலிருந்து, 22 கி.மீ., துாரம் பயணம் செய்தால், வாகா எல்லையை அடையலாம்.
பிரிவினையின் போது, இரு நாடுகளையும் பிரிக்க போடப்பட்ட சர்ச்சைக்குரிய, 'ராட் கிளிப்' கோடு செல்லும் வகையில் அமைந்த சிற்றுார், வாகா என்ற கிராமம்.
கடந்த, 1947ல், கிழக்கு பகுதியிலுள்ள, வாகா கிராமம், இந்தியாவிலும், மேற்கு வாகா கிராமம், பாகிஸ்தானிலும் உள்ளன. இந்தியாவின் பகுதி, 'அட்டாரி' என, அழைக்கப்படுகிறது.
தினமும் மாலை, 5:00 மணிக்கு, வாகா எல்லையில் நடக்கும், இரு நாட்டின் கொடி இறக்கும் நிகழ்ச்சி, உலகளவில் புகழ்பெற்றது. இரு நாட்டு சுற்றுலா பயணியரும் குவிகின்றனர்.
நவ., 2, 2014ல், பாகிஸ்தானின் பகுதியில் உள்ள, வாகா எல்லையில், பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 60க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர் உயிரிழந்துள்ளனர்; 110 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் செயல்படும், 'ஜுன்டால்லா' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு, தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
இந்த சம்பவத்தால், வாகா எல்லையில், கடும் சோதனைக்கு பின்பே, இரு நாடுகளும், சுற்றுலா பயணியரை அனுமதிக்கின்றன.
எம்.ஆறுமுகம்

