sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வேண்டாதவனாகி விட்டேன்!

/

வேண்டாதவனாகி விட்டேன்!

வேண்டாதவனாகி விட்டேன்!

வேண்டாதவனாகி விட்டேன்!


PUBLISHED ON : மார் 24, 2019

Google News

PUBLISHED ON : மார் 24, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாலை நேரம், அழகான பூங்கா, இதமான காற்று. பூங்காவில் இருந்த பெஞ்சில், நாராயணனும், ராகவனும் உட்கார்ந்திருந்தனர்.

''ராகவா... இன்று, உன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை... உடம்பு சரியில்லையா அல்லது வீட்டில் ஏதேனும் பிரச்னையா?'' என்றார், நாராயணன்.

''உடம்பிற்கென்ன கேடு... தினம் தினம் அவமானம், ஒரேயடியாக செத்து போகலாம்... இன்னும் யாருக்காக வாழணும்?'' என்றார், ராகவன்.

''உனக்கென்ன பைத்தியமா... அன்பான மனைவி, பாசத்துடன் பழகும், மகன் - மருமகள். அப்படியிருக்க ஏன் இப்படி விரக்தியாய் பேசுகிறாய்... அப்படியென்ன பிரச்னை!''

''நேற்று, எனக்கு கீழே வேலை செய்த முருகேசனை பார்த்தேன்... 'சல்யூட்' அடித்து, என் முன் நின்றவன், 'ஹலோ சார், எப்படியிருக்கீங்க...' என கேட்டு, கையை ஆட்டிவிட்டு, நிற்காமல் போய் விட்டான். பார்த்தாயா, நான் எவ்வளவு கேவலமாக, மதிப்பில்லாமல் போய் விட்டேன்.''

''ராகவா... இன்னும் பழைய அதிகார அகம்பாவத்தில் இருக்கிறாய். இப்போது, நீ ராகவன். அவன், முருகேசன். உனக்கு மரியாதை தந்து, கை கட்டி பேச வேண்டிய அவசியம் அவனுக்கில்லை. இப்போது, புதிதாக வந்துள்ள அதிகாரியின் முன் கை கட்டி நிற்பான். அது, பதவிக்கு தரும் மரியாதை. அதை புரிந்து கொள்.''

''அதற்காக, இப்படியா அவமரியாதையாக நடந்து கொள்வது?''

''இன்னும் பழைய எண்ணத்திலிருக்கிறாய். அது இன்னும் குறையவில்லை. அதிலிருந்து மீண்டு வா... நினைவில் வைத்துக் கொள், இப்போது, நீயொரு சாதாரண மனிதன்.''

''ஓ.கே., ஆனால், வீட்டில் என் நிலமை இதைவிட மோசமாகி விட்டது. கேவலமாக நடத்தப்படுகிறேன்.''

''என்ன சொல்கிறாய்... உன்னை, வீட்டில் கேவலமாக நடத்துகின்றனரா... பொய் சொல்லாதே.''

''முன்பு, காலை, 5:00 மணிக்கு காபி தந்த, என் மனைவி, 6:00 மணிக்கு மேல் தான் தருகிறாள். பேப்பர் வந்தவுடன், பையன் எடுத்து போய் விடுகிறான். 8:00 மணிக்கு மேல் தான் பேப்பர் படிக்க முடிகிறது.

''கேட்டால், 'உங்களுக்கென்ன அவசர வேலை... நிதானமாக எழுந்து, 8:00 மணிக்கு டிபன் சாப்பிட்டு, தெருக் கோடியிலிருக்கும் கோவிலுக்கு போய், அங்கே தரும் சூடான சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை சாப்பிட்டு, வீட்டிற்கு வந்து பேப்பர் படியுங்கள்...' என, திமிராக பேசுகிறாள்.''

''உன் மனைவி சொல்வதில் உண்மை இருக்கிறது,'' என்றார், நாராயணன்.

''என்ன உண்மையை கண்டாய்... நீ, எவ்வித பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறாய்... அதனால் தான் இப்படி பேசுகிறாய்,'' என்றார், ராகவன்.

''பிரச்னை இல்லாதவங்க யாருமில்லை... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னை... அவை நம்முடன் பிறந்த வியாதி... பிரச்னைக்கு காரணம், நம் எண்ணங்கள்.''

''புரியாமல் பேசாதே... பதவியில் இருந்த போது, நாய் குட்டி போல் பின்னால் சுற்றி வந்தவர்களும், என் தேவைகளை அறிந்து, நான் கேட்காமலே அதை செய்து வந்த என் குடும்பத்தினருக்கும், இப்போது, நான் வேண்டாதவனாகி விட்டேன். என்ன காரணம்... அவர்கள் மதித்தது என்னை அல்ல, என் பணம், பதவியை மட்டுமே...

''இவர்களுடன் இன்னுமிருந்து, இழி சொற்களை கேட்டு, இடி சோறு தின்ன எனக்கென்ன தலையெழுத்து... என்னிடம் பணம் இருக்கிறது, ஓய்வூதியம் வருகிறது, முதியோர் காப்பகத்தில் தங்க முடிவு செய்து விட்டேன். அங்கு, ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதி. இது தான் அவர்களுக்கு சரியான பாடம், சரியான முடிவு. நான் சொல்வது சரிதானே,'' என்றார்.

''ராகவா... நான் சொல்வதை ஒரு நிமிடம் கேட்கிறாயா?''

''நீ என்ன சொல்லப் போகிறாய்... சொல்!''

''முதலில், முருகேசன்... நீ, பதவியில் இருந்தபோது, அலுவலக நேரம் முடிந்ததும், என்றாவது ஒருநாள் அவனுடன் அன்புடன் பேசி பழகி, காபி சாப்பிட்டிருக்கிறாயா... காரணம், அதிகாரி என்ற அகம்பாவம். நீ உயர்ந்தவன், அவன் தாழ்ந்தவன் என்ற மமதை. அந்த எண்ணம் இன்றும், உன் அடி மனதிலிருக்கிறது.''

''சரி, நாராயணா... வீட்டில் என்னை மதிப்பதில்லை... கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்பதையும் சரியென வாதிட போகிறாயா... நீ என்ன வாதாடினாலும், நானெடுத்த முடிவிலிருந்து பின் வாங்கப் போவதில்லை... நான் வீட்டிற்கு பெரியவன்... எனக்கு, முதல் மரியாதை தர வேண்டாமா?''

''ராகவா... என்ன சொல்கிறாய்... சீக்கிரமாக காபி, பேப்பர் கிடைப்பதில்லை என்றால், யாரும் உன்னை மதிப்பதில்லை என்று அர்த்தமாகி விடுமா... அதனால், காப்பகத்தில் ஜாலியாக இருக்கப் போகிறேன் என்கிறாய், அப்படித்தானே? இது, உன் சுயநலத்தை காட்டுகிறது...

''வேலையில் இருந்தபோது, உன் மனைவி, சீக்கிரம் எழுந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். காபி சீக்கிரம் கிடைத்தது. சீக்கிரமாக பேப்பர் படித்து, குளித்து, டிபன் சாப்பிட்டு ஆபீஸ் கிளம்பி விடுவாய்...

''மற்றவர்கள் என்ன செய்கின்றனர், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா உன்னிடம்... இல்லையே... குடும்பத்துடன் எங்காவது சுற்றுலா போயிருக்கிறாயா... இல்லையே, எப்போதும் ஆபீஸ் ஆபீஸ் என, இயந்திரமாக இருந்திருக்கிறாய்!'' என்றார், நாராயணன்.

''அதுதானே உண்மை... வேலை பளு... எல்லாருக்கும் தெரியும். ஊர் சுற்ற நேரமேது?'' என்றார், ராகவன்.

''கரெக்ட்... இப்போது, நீ வேலையில் இல்லை. சீக்கிரம் எழுந்து என்ன செய்யப் போகிறாய்... மகன் - மருமகள், வேலைக்கு போகும் அவசரம்... பேரன், பள்ளிக்கு போகணும்... ஆனால், உனக்கு அவசர வேலை ஒன்றுமில்லையே... வேலையில் இருந்தபோது, உனக்காக விட்டுக் கொடுத்தனர். இப்போது, நீ அவர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டால், உனக்கு எதுவும் பிரச்னையாக மனதில் தோன்றாது...

''ஒருமுறை, நீ உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, உன் மனைவி, இரவு - பகலாக கவலையுடன் பக்கத்திலிருந்து பணிவிடை செய்ததை மறந்து விட்டாயா... மகனும் - மருமகளும் பதறியபடி இருந்தது, உனக்கு தெரியாதா?''

''நாராயணா... என் மனைவி, எனக்காக கவலைபட்டிருக்க மாட்டாள். 'டிவி' தொடர்களைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலையாக இருக்கலாம்,'' என்றார்.

''ச்சீ... என்ன கீழ்த்தரமான எண்ணம்... உன் கண்ணோட்டத்தை மாற்று... என்னையே எடுத்துக் கொள், நான் காலையில் எழுந்து, பால், காய்கறி வாங்கி வருவது... பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது... அவர்களுடன் விளையாடுவது போன்றவைகளை செய்து, சுகத்தை அனுபவிக்கிறேன்... நிதானமாக குளித்து, பூஜை செய்து, நிம்மதியாக வாழ்கிறேன்... மனம், ஒரு குரங்கு. மனதை கட்டுப்படுத்தினால் எல்லாம் புரியும்...

''சாரி ராகவா... உனக்கு அறிவுரை கூறும் அளவிற்கு, பெரிய மனிதனல்ல... ஏதோ மனதில் பட்டதை சொன்னேன்... நாம் வாழ்வது பெரிதல்ல, நம்மால் நாலு பேர் மகிழ்ந்து வாழணும்; அது தான் வாழ்க்கை... நீ இப்போது வேலையில் இல்லை, சும்மா இருக்கிறாய்... மனம், பலவித வேண்டாதவைகளை சிந்திக்கிறது...

''வீட்டில் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசு... சுற்றுலா அழைத்துச் செல், அது உனக்கும் மகிழ்ச்சி; மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும்... பேரன் - பேத்திகளுடன் தினமும் வெளியில் சென்று வா... மன மாறுதலை அறிவாய்... யாருக்காக கஷ்டப்பட்டு உழைத்தாய்... மனைவி, மகனுக்காக அல்லவா...

''இப்போது, நீ வேலையில் இல்லாததால், அவர்களுக்காக எதுவும் செய்யக் கூடாதா... நீ வெளியே போய் விட்டால், உன்னை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பரா அல்லது நீ நினைக்காமல் இருப்பாயா... வீட்டில் இவ்வளவு காலம் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்து பழகியவர்கள் மீதே வெறுப்பு... போகும் இல்லத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பாய்... முன் பின் தெரியாதவர்களுடன் எப்படி பழகுவாய்...

''நீ போகும் இடத்திலும், விரும்பியபடி குறித்த நேரத்தில் எதுவும் கிடைக்காவிட்டால், அங்கிருந்து கோபித்து எங்கே போவாய்... நீ இன்னும் பழமையில் மூழ்கியிருக்கிறாய். இது, கணினி யுகம். அதற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும், புரிந்துகொள்...

''சாரி ராகவா... நான் பேரனை கோவிலுக்கு கூட்டி போகணும், எனக்காக காத்திருப்பான்... வருகிறேன்!'' எனக் கூறி, கிளம்பினார், நாராயணன்.

அவர் போவதையே பார்த்தபடி இருந்த, ராகவன் மனதில், முதன் முதலாக தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றி எண்ணத் துவங்கினார்.

கே.என்.சுப்பிரமணியன்






      Dinamalar
      Follow us