தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள்! (5)

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள்! (5)

சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள்! (5)


PUBLISHED ON : ஜூன் 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காதலிக்க நேரமில்லை படத்தில், அப்பா பாலையாவுக்கு, மகன் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, பிரமாதமாக பேசப்பட்டது. அதன் பின், இந்த பாணியை வைத்து நிறைய படங்கள் வந்தன. சந்திரமுகி படத்தில், வடிவேலுவுக்கு, இதே பாணியில் தான் கதை சொல்வார், ரஜினி.

இப்படி ஒரு விஷயம், கோபுவின் சிந்தனையில் எப்படி வந்தது...

தாதா மிராசி என்ற இயக்குனர் ஒருவர் இருந்தார். அவரை, சிவாஜிக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் இயக்கத்தில், சிவாஜி சொந்தமாக தயாரித்த படம், புதிய பறவை.

'அவர், ஒரு மர்ம கதை வைத்திருக்கிறார்; கேட்டுப் பாருங்கள்...' என்று, சிவாஜி கூறியதால், நானும் - ஸ்ரீதரும், அவரிடம், கதை கேட்க உட்கார்ந்தோம்.

ரொம்ப நேரம் எதுவுமே பேசாமல் இருந்தவர், திடீரென வாயால், மூக்கால் சத்தம் எழுப்பினார். கண்களை உருட்டி, உடம்பை பலவாறு அசைத்து, அவருக்கே கேட்காத, சன்னமான நடுங்கும் குரலில், ஒரு கதை சொன்னார். சத்தியமாக, எனக்கும், ஸ்ரீதருக்கும் எதுவுமே புரியவில்லை.

'நீங்க சொல்ற கதையில, நாங்க ரொம்ப பயந்துட்டோம். எங்க பயத்துல கதை நினைவில் இல்லை. தயவுசெய்து, எழுதி கொடுத்திடுங்க...' என்று சொல்லி, அவரிடம் இருந்து தப்பி வந்தோம்.

அவர் கதை சொல்லும் பாணி தான் அப்படியே தவிர, ஒரு அருமையான இயக்குனர், தாதா மிராசி.

காதலிக்க நேரமில்லை படத்தில், சினிமா பைத்தியமான, நாகேஷிடம், பாலையா கதை கேட்கும்போது, தாதா மிராசி, எங்களுக்கு கதை சொன்ன சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. ஸ்ரீதரிடம் சொன்னேன். 'டபுள்' ஓ.கே., சொல்லி விட்டார்.

ஆக, எங்களுக்கு நேர்ந்த அந்த சொந்த அனுபவம் தான், பாலையா மூலமாக, ரசிகர்களுக்கும் நேர்ந்தது.

இந்த படம் தந்த பிரமிப்பான வெற்றியோடு, அடுத்த படத்திற்காக உட்கார்ந்தோம். அடுத்த படமும் நிச்சயமும் காமெடியாக தான் இருக்கும் என்று எண்ணிய போது, 'இசையை மையாக வைத்து, ஒரு படம் எடுக்கிறோம்...' என்றார், ஸ்ரீதர்.

ஒரு பெரிய வீணை வித்வான், தன் மகனையும் வித்வானாக்க முயற்சி செய்வார். ஆனால், மகனோ குடிக்கு அடிமையாகி விடுவார்.

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதால், இசை அமைப்பாளர்

எம்.எஸ்.விஸ்வநாதன் தானே படத்தை தயாரிக்க முன் வந்தார். கலைக்கோவில் என்ற அந்த படத்தில், 'தங்க ரதம் வந்தது வீதியிலே' என்ற பிரபலமான பாடல், இடம் பெற்றது தான்.

பாலமுரளி கிருஷ்ணாவை வைத்து பாட வைத்தோம். நாகேஷை, சபா செகரட்டரி ஆக்கி, நான் வசனம் எழுதினேன்.

சபாவுக்கு, ஒரு நடனக்காரியை ஒப்பந்தம் செய்ய போவார், நாகேஷ். அவரின் மேனேஜரிடம், 'மேடத்தோட நடன நிகழ்ச்சி வேண்டும்' என்பார்.

'சரி, பண்ணிடலாம்... 10 ஆயிரம் செலவாகுமே...' என்பார், மேனேஜர்.

'நான் சபா வளர்ச்சிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு பண்றேன். ஆனா, நீங்க கேட்கிறதை பார்த்தால், சபாவையே அழிச்சுடுவீங்க போலிருக்கே...' என்பார், நாகேஷ்.

இந்த நகைச்சுவை வசனம் எல்லாருக்கும் பிடித்துப் போனது.

சந்தோஷத்துடன், 'எப்படிடா இப்படியெல்லாம் உனக்கு எழுத வருது...' என்றார், நாகேஷ்.

எல்லாம் சரியாக இருந்தாலும், ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை. தோல்வி படமாக அமைந்தது.

படம் வந்ததில், இரண்டு பேருக்கு தான் லாபம். ஒருவர், பாலமுரளி கிருஷ்ணா.

எந்த நாட்டில் அவர், கச்சேரி செய்தாலும், 'தங்க ரதம்' பாடல் நேயர் விருப்பமானது. அதே போல, வீணை சிட்டிபாபுவுக்கு, அடுத்த வந்த நாட்களில் அமோக வரவேற்பு.

எல்லா சபாக்களிலும் பெரிய அளவில் வலம் வந்தார்.

'ஜெயிச்சா கூட, 'ரிலாக் சா' கொஞ்ச நாள் இருக்கலாம். ஆனால், தோற்றால் ஒரு நாள் கூட சும்மா இருக்கக் கூடாது; சோர்ந்தும் போய் விடக் கூடாது. ஏன்னா, நம்மைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் அந்த தோல்வி பாதிக்கும்...' என்பார், ஸ்ரீதர்.

அதனால், உடனே அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார்.

'பிலிம் சேம்பரில், டேவிட் அண்ட் லிசான்னு ஒரு படம் பார்த்தேன், கோபு. அந்த படம் என்னை ரொம்ப பாதித்து விட்டது. அதில் இருந்து நான், ஒரு கதை பண்ணியிருக்கேன்.

'மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை. இடைவேளை வரை துறுதுறு பெண்ணாக வருவார். அதன் பிறகு, வேறுவிதமாக மாறுவார். படமே அந்த பெண்ணை சுற்றி தான் இருக்கும்...' என்று, வெண்ணிற ஆடை படத்தின் ஒரு வரி கதையையும் சொன்னார்.

இந்த படத்திற்கு ஒரு புதுமுகம் தேடிய போது, நடிகர் கோபால கிருஷ்ணன் மூலமாக அறிமுகமானவர் தான், ஜெயலலிதா. ஜெயலலிதாவை நடிக்க சொல்லி பார்த்து, ஓ.கே., சொன்னார், ஸ்ரீதர். பிறகு, படத்தின் கதையை ஜெயலலிதாவிடமும், அவரது தாய் சந்தியாவிடமும் சொன்னார்.

கதையை கேட்டு, வீட்டிற்கு சென்ற, சந்தியா, என்னிடம் போனில், 'மகள், படத்தில் நடிக்க மாட்டார்...' என்று சொல்லி விட்டார். சரி, விஷயத்தை ஸ்ரீதரிடம் சொல்வோம் என்று எழுந்த போது, அடுத்து ஒரு போன் வந்தது, ஜெயலலிதாவிடம் இருந்து...

கலைக்கோவில் தந்த பாடம்!

உண்மையில் நன்றாக ஓடியிருக்க வேண்டிய படம் கலைக்கோவில். தில்லானா மோகானம்பாள் வைத்திக்கு நிகராக, நாகேஷை துாக்கி நிறுத்தியிருக்க வேண்டிய படம். பார்த்து பார்த்து செதுக்கிய படம். ஆனாலும், ஓடவில்லை. பின்னாளில் இதே கதையை, கொஞ்சம் பட்டி, டிங்கர் எல்லாம் பார்த்து, வேறொரு பெயரில், பெரிய பேனரில் வந்த போது, நன்றாக ஓடியது. படத்தின் பெயர் சிந்து பைரவி.

— தொடரும்

-எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us