sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

முதலாளி! (28)

/

முதலாளி! (28)

முதலாளி! (28)

முதலாளி! (28)


PUBLISHED ON : ஜூன் 30, 2013

Google News

PUBLISHED ON : ஜூன் 30, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.ஆர்.சுந்தரத்தின் திடீர் மறைவிற்கு பின், ஸ்டுடியோ தொழிலாளர்கள் ஒன்று கூடி, அடுத்து என்ன செய்வது என்று விவாதித்தனர்.

டி.ஆர்.சுந்தரம் உயிரோடு இருந்த போது, ஸ்டுடியோ எப்படி நடந்தது. இப்போது, எப்படி நடக்கிறது என்பதை ஒப்பிட்டு, பலர் பேசினர்.

இந்த நிலை நீடிக்கக்கூடாது என்பதில், உறுதியாக இருந்த அவர்கள், ஒருமனதாக தீர்மானித்து, ஒரு கோரிக்கையை மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகக் கூட்டத்தில் சமர்ப்பித்தனர். அது, முதலாளி உயிரோடு இருந்த போது, அவருடன் அடிக்கடி ஸ்டுடியோவிற்கு வந்து, பல டிபார்ட்மென்டுகளில் தன் கவனத்தை செலுத்தி வந்த, முதலாளியின் மூத்த மகன் ராமசுந்தரம், ஸ்டுடியோவின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பது தான் அந்தக் கோரிக்கை.

தொழிலாளர்களின் ஒருமித்த கோரிக்கையை, டைரக்டர்களால் நிராகரிக்க முடியவில்லை. எல்லாரும், ஒருமனதாக முடிவு செய்து, ராமசுந்தரத்தை மானேஜிங் டைரக்டராக நியமித்தனர். அப்பா லண்டனில் படித்து விட்டு, தனக்கு சம்பந்தமே இல்லாத படத் தொழிலில் இறங்கினார். அதே போல், மகனும் கோவையில் இன்ஜினியருக்கு படித்து விட்டு, படத்துறைக்கு வந்தார். டி.ஆர்.சுந்தரம், போட்ட திட்டப்படி நடந்திருந்தால், ராமசுந்தரம் பெரிய தொழிலதிபர் ஆகியிருப்பார். அதற்கும், ஒரு பின்னணி இருக்கிறது.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை பொறுத்த வரை, பல பெரிய ஊர்களில் வினியோக அலுவலகங்கள் இருந்தன. அவற்றில் மிக முக்கியமானவை, சென்னை அலுவலகங்கள். ஏனெனில், இங்கு பொறுப்பில் இருப்போருக்கு பட வினியோகத்தை பார்ப்பது மட்டும் வேலை அல்ல!

சேலத்தில் இருந்து வரும் அவசர வேலை களையும் கவனிக்க வேண்டும். நடிக, நடிகையரை படத்திற்கு ஒப்பந்தம் செய்வது, அவர்கள் தேதி கொடுத்து விட்டால், அவர்களுக்கு தேவையான ரயில் பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுத்து, உரிய நாட்களில் சேலத்திற்கு அனுப்புவது என்று பல வேலைகள். இவை அனைத்தும் ஒழுங்காக நடக்க வேண்டும் என்பதை, சென்னை அலுவலகத்தில் இருப்போர் அறிவர்.

இவர்களது, 'கன்ட்ரோல்' பூராவும் சேலம் தலைமை அலுவலகத்தில் இருந்தது. அங்கிருந்து, என்ன தகவல், வேலை வந்தாலும் உடனுக்குடன் நடத்திக் கொடுக்க வேண்டியது இவர்கள் பணி. ஆனால், இங்கே உள்ளோர் ஒழுங்காக நடந்து கொள்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, எவ்விதமான சோதனையும் இல்லை. அதனால், படங்களை ஓட்டுவதில் இருந்து நடிகர்களை ஒப்பந்தம் செய்வது உட்பட, பல விஷயங்களில் தில்லு முல்லு நடக்க ஆரம்பித்தது.

சேலத்திலிருந்து ஒரு திறமை வாய்ந்த படப் பிரதிநிதியை, சென்னை அலுவலகத்தை கவனித்து கொள்ள டி.ஆர்.சுந்தரம் அனுப்பினார். ஒழுங்காக வேலை செய்ய வேண்டும், கணக்கு வழக்குகளை சரியாக வைக்க வேண்டும் என்பது தான், முதலாளியின் நோக்கம். அனுப்பிய நபரோ, சில ஆண்டுகள் ஒழுங்காக வேலை பார்த்தவர், தனக்கென ஒரு படக் கம்பெனியை நிறுவிக் கொண்டார். அதன் மூலம், பெரிய படங்களின் வினியோகத்தை சேலத்திற்கு வாங்கி பணம் குவித்தார். டி.ஆர்.சுந்தரம், அவரை வேலையை விட்டு அனுப்புவதற்குள் அவரே ராஜினாமாவும் செய்து விட்டார்.

அடுத்தபடியாக, அந்தப் பொறுப்புக்கு வந்தவர் முதலாளியின் இன்னொரு நண்பர். அவர் ஒரு, பிரபல பிலிம் சுருள் வினியோகிக்கும் கம்பெனியில் வேலை பார்த்தவர். சில நாட்களில், அவரால் இரண்டு வேலைகளையும் செய்ய முடியவில்லை என்று, அவராகவே முதலாளியிடம் சொல்லி, ஒதுங்கிக் கொண்டார்.

அதன் பின் தான் முதலாளி, முக்தா சகோதரர்களை சென்னை அலுவலகத்திற்கு அனுப்பினார். அவர்களும், முதலாளியின் எதிர்பார்ப்புக்குத் தகுந்தாற் போல் நடந்து கொண்டனர்.

ராமசுந்தரம், கோவையில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு வந்தவுடன், அவரை பிலிம் தொழிலில் விடாமல், ஒரு தொழிற்சாலை அதிபராக்க முடிவு செய்தார் டி.ஆர். சுந்தரம். அதற்காக, மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ அமைந்திருந்த பகுதியில், மூன்று ஏக்கர் நிலத்தை வாங்கினார். அவர் எண்ணத்தில் இருந்தது, அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை. இதற்காக, ஜப்பானில் இருந்து எந்திரங்கள் வாங்க ஆர்டர் கொடுத்து இருந்தார். அந்தப் பொறுப்பை, அந்த பிலிம் சுருள் கம்பெனி அதிகாரியிடம் ஒப்படைத்தார். இடையில் என்ன நடந்ததோ, அவர்களது நட்பில் தொய்வு ஏற்பட்டு, எந்திரங்கள் வரும் நேரத்தில், முதலாளி இறந்து விட்டதால், அந்த தொழிற்சாலைக் கனவு, கனவாகவே போய்விட்டது. ஆக, ராமசுந்தரம் நிர்வகிக்க வேண்டிய தொழிற்சாலை ஆரம்பிக்கப் படாமலேயே போக, பட உலகிற்கு அவர் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

சினிமாத் தொழிலில், அனுபவம் இல்லாத ராமசுந்தரம், மாடர்ன் தியேட்டர்சின் மானேஜிங் டைரக்டரானார். ஆனால், அவர் புத்தி கூர்மையுடையவராக இருந்ததால், தொழில் நுணுக்கங்களை வெகு விரைவில் கற்றுக் கொண்டார். இரண்டு படங்களின் தோல்விக்கு பின், ஒரு நல்ல படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம், எல்லார் மனதிலும் இருந்தது.

கொஞ்சும் குமரி படத்தை அடுத்து, டி.ஆர்.சுந்தரம் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருந்தார். அது, ஒரு இந்திப் படத்தின் தழுவல். அவரது மரணத்திற்கு பின், அவர் மகன் ராமசுந்தரம் அப்படத்தை எடுக்க விரும்பி, அப்படத்திற்கான உரிமையை வாங்க மும்பை சென்றார். மும்பை சென்று விசாரித்த போது, அப்பட உரிமையாளர், அதில் நடித்த கதாநாயகனே என்ற உண்மை தெரிந்தது. அவர் தான், பிரபல நடிகர் ஷேக் முக்தார்! படத்தின் பெயர், உஸ்தாத்தோன் - கி- உஸ்தாத்.

இரண்டொரு தினங்களில், அந்த தயாரிப்பாளர் நடிகரும், ராமசுந்தரமும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அந்த நடிகர், ஏற்கனவே மாடர்ன் தியேட்டர்சைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருந்த காரணத்தினால், படம் சம்பந்தப்பட்ட, 'பைல்' இரண்டு பிரின்ட், மற்ற ரிக்கார்டுகள் யாவற்றையும் கொடுத்து, இன்னொரு படமான, தோ உஸ்தாத் என்ற படத்திற்கும் உரிமையை வழங்கினார்.

இந்திப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தாயிற்று. அதைத் தமிழில் எடுக்க, வசனங்களை மொழி பெயர்த்து எழுத வேண்டும். அதற்கு வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஏற்பாடு செய்யப்பட்டார். இந்தி வசனங்களை விட, தமிழ் வசனங்கள் நன்றாக அமைந்தன. படம் முடியும் வரை, தன்னுடன் வசனகர்த்தாவை வைத்துக் கொண்ட ராமசுந்தரம் தொழிலை பழகிக் கொள்ள, எடிட்டர் பாலுவையும் அருகில் வைத்துக் கொண்டார். இப்படத்திற்கு கண்ணதாசன் பாடல்கள் எழுத, வேதா இசை அமைத்தார்.

ஜெமினி கணேசன், மனோகர், அசோகன், தங்கவேலு, சாவித்திரி, மணிமாலா, மனோரமா என்று ஒரு பெரிய கும்பலே இப்படத்திற்கு ஒப்பந்தமாயினர். பெரியவர் இருந்த போது, எப்படி நடந்ததோ அதே போல் படப்பிடிப்பு திட்டமிட்டு, விரைவாக நடந்தது. படம் வெளியாகி நன்றாக போயிற்று. அந்தப் படம் தான், வல்லவனுக்கு வல்லவன்.

இப்படத்தின் பெரும் வெற்றியைக் கண்ட, ஆந்திரத் தயாரிப்பாளர் ஒருவர், இதையே தெலுங்கில் எடுத்துக் தரச் சொல்ல, ராமசுந்தரத்தை அணுகினார். ராமசுந்தரமும் முதல் தெலுங்கு படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

அடுத்த தயாரிப்பு, இரு வல்லவர்கள். இப்படத்திற்காகத்தான் முதன் முதலாக, ஜெய்சங்கர் சேலம் வந்தார். மனோகரும் அவரும் இரு வல்லவர்களாக நடித்தனர். குடும்பம் மற்றும் ஸ்டன்ட் கலந்து எடுக்கப்பட்ட கதை இது. இந்தக் கதையும், ஷேக் முக்தார் கொடுத்த படத்தின் கதை தான் .

இப்படமும் நன்றாக போயிற்று. ஓரளவு, பட உலகில் கால்பதித்து விட்ட ராமசுந்தரம், ஒரு ஆங்கிலக் கதையை படமாக்கினார். அந்தப் படத்தின் பெயர்; பேனிக் இன் பாங்காக். தமிழில் அதற்கு, வல்லவன் ஒருவன் என்று பெயர் வைத்து இருந்தனர். 'தமிழக ஜேம்ஸ்பாண்ட்' என்று, ஜெய்சங்கர் இப் படத்தில் தான் பெயர் பெற்றார்.

தொடரும்.

ரா. வேங்கடசாமி






      Dinamalar
      Follow us