
''என்னப்பா முருகா... காணாம போன, உன் அண்ணன் நாகராஜனைப் பத்தி ஏதாவது தகவல் உண்டா,'' என்றபடி துருப்பிடித்துக் கிடந்த, இரும்பு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார் மாரப்ப நாயக்கர்.
''இல்ல நாயக்கரே... ஒரு வருஷத்துக்கு முன், ஒரு கடுதாசி வந்ததோட சரி... பம்பாய் பக்கம், ஏதோ ஒரு டூரிஸ்ட் கம்பெனியில் வேல பாக்கறதா எழுதியிருந்தாரு. அப்புறம் ஆளையும் காணோம், கடுதாசியையும் காணோம்.''
ரிப்பேருக்கு வந்து நின்ற வண்டியின் நட்டுகளை கழற்றி, மண்ணெண்ணெயில் ஊறப்போட்டபடியே சொன்னான் முருகன்.
''நீயாவது, ஒரு தடவை போய் பாக்கலாமேப்பா, கால் ஊனமான அவன் எங்கயிருந்து எப்படி கஷ்டப்படுறானோ தெரியலையே... வயித்துக்கு சோறு இல்லாம, காஞ்சி, ஓஞ்சி போய், எங்காவது கிடக்கப் போறான்ப்பா... கண்டுபுடிக்கிற வழியப்பாரு.''
''அப்படி ஒண்ணும் இல்ல நாயக்கரே... ஏதோ டிராவல்ஸ் மாதிரி ஒரு கடைல வேலை செய்யுறதா தான் எழுதியிருந்தாரு. சோத்துக்கு கையேந்துற நிலைமையில, இருப்பார்ன்னு நினைச்சு, நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்.''
''கண்ணால பாக்கறதும் பொய், காதால கேட்கறதும் பொய், தீர விசாரிக்கறதே மெய்ன்னு சொல்வாங்க, நீ தான் நேரில் போய் பார்த்து நிலைமையை தெரிஞ்சிகிட்டு வாயேன்... அண்ணன் என்கிற அக்கறை உனக்கு இல்லையா முருகா?''
சற்று கோபமாக மாரப்ப நாயக்கர் கேட்டார்.
பெருங்காளூருக்கு வந்து, முருகன் மெக்கானிக் கடை என்று கேட்டால் யாரும் அடையாளம் காட்டி விடுவர். 'முருகன் ஒர்க்ஷாப்' அவ்வளவு பிரபலம். கிட்டதட்ட 5 கி.மீ., சுத்து வட்டாரத்தில் இருந்து, இரு சக்கர வாகனங்களை பழுது பார்க்க, முருகன் கடையைத் தான் தேடி வருவர்.
வண்டியை கழற்றி, புகுந்து மேய்ந்து விடுவதில் கில்லாடி. டாக்டர் கை நாடியைப் பார்த்து, பிரச்னையை சொல்லுற மாதிரி, வண்டியை அசைத்துப் பார்த்தே, வண்டியில் என்ன கோளாறு என்று சொல்லி விடுவான் முருகன்.
இத்தனைக்கும், முருகன், ஐ.டி.ஐ.,யோ, பாலிடெக்னிக் சென்றோ படித்ததில்லை. புதுக்கோட்டையில் இருக்கிற, ஒரு ஒர்க்ஷாப்பில் அழுக்கு சட்டையை மாட்டிக் கொண்டு, ஆறு வருடம் ஓடாய் தேய்ந்து பழகிக் கொண்டான்.
ஏதாவது, ஒரு வேலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் முருகனுக்கு இருந்தது. அதனால் தான், ஆறு வருஷத்துக்குள், இரு சக்கர வாகனத்தின் பாகங்களை எப்படி சரி செய்வது என்பது, அவனுக்கு அத்துப்படி ஆகியிருந்தது.
பெருங்காளூர் சுற்று வட்டாரத்தில், சொல்லிக் கொள்ளும்படியாக, எந்த மெக்கானிக் கடையும் இல்லை என்று, சின்னதாக தகர கொட்டகை போட்டு கடை ஆரம்பித்தான். அவனுடைய திட்டமும், யோசனையும் சரியாகவே இருந்தது.
நாகராஜன், முருகனின் சொந்த அண்ணன். போலியோ சொட்டு மருந்து தீவிரமடையாத நேரம் அது. இரண்டு வயது வரை, ஓடியாடிக் கொண்டிருந்த நாகராஜன், அப்புறம் வீட்டிலேயே சுருண்டு படுத்துக் கொள்ளத் துவங்கினான். இரண்டு கால்களும் வலுவிழந்து போன போது, பதறிப் போனார்கள் அப்பாவும், அம்மாவும். எங்கெங்கோ பெரிய மருத்துவமனைக்களுக்கெல்லாம் கொண்டு போய் காட்டினர். எதுவுமே பலன் அளிக்காமல் போய்விட்டது.
'நல்ல கை, கால்களோடு இருப்பவர்களையே, இந்த உலகத்தில் பாடாய்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில், இப்படி கால்கள் இல்லாமல், இவன் எவ்வளவு கஷ்டப்பட போகிறானோ...' என்று, தினம் தினம் கவலையில் கண்ணீர் விட்டு, அழுது கொண்டிருந்தனர் இருவரும்.
'இப்படி ஆளும், பேருமா உட்கார்ந்து அழுதுகிட்டே இருந்து என்ன செய்யப்போறிங்க... போய் ஆகற வேலையப் பாருங்க... பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்துல சேர்த்து நல்லா படிக்க வைங்க. படிக்க வைச்சா போதும், பத்து தலைமுறை சாப்பிடுற அளவுக்கு அவன் சம்பாதிச்சிடுவான்...'
- ஊர்ப் பெரியவர், மாரப்ப நாயக்கர் தான், அப்போதும் அறிவுரை சொன்னார்.
உடம்பில் குறையை வைத்த ஆண்டவன், நாகராஜனுக்கு படிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பனிரெண்டாம் வகுப்பு வரை, பள்ளிக்கூடத்தில் இவன் தான் முதல் ரேங்க். ஆங்கிலம், கணக்கு என்று அடுத்தவர்களை படுத்தி எடுக்கிற பாடங்களில் எல்லாம் அசராமல் சதம் அடிப்பான். ஆனால், இவன் தம்பி முருகன், ஆறாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு, ஓர்க்ஷாப் பக்கம் ஓடி விட்டான்.
பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்குப் படியேறிய போதுதான், அந்த பயங்கரம் நடந்தது. நாகராஜனின் அப்பா - அம்மா இருவரையும், மர்ம காய்ச்சல் வாரிக் கொண்டு போக, நாகராஜன் மறுபடியும் நிராதரவாக நின்றான்.
தம்பி ஒர்க்ஷாப்பிலிருந்து கொண்டு வருகிற காசில் தான், காலம் நகர்ந்து கொண்டிருந்தது.
'இப்படி ரெண்டு பேரும் ஒண்டிக் கட்டையா கிடந்து, காலம் தள்ளுறது நல்லதில்ல முருகா... நீங்க ஒரு குடும்பம் ஆகணும். வீட்ல விளக்கேத்தி வைக்க, ஏழையோ, பாழையோ நல்ல குணமுள்ள பெண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ, அண்ணனுக்கும் பணிவிடை செய்யற மாதிரி பொறுப்பா இருக்கற பொண்ணா இருக்கணும்...'
- அக்கறையுடன் அறிவுறுத்தினார் மாரப்ப நாயக்கர்.
'ஒரு வழியாய் முருகனுக்கு திருமணம் முடிச்சாச்சு....' என்று எல்லாரும் சந்தோஷப்பட்ட நேரத்தில் தான், அடுத்த சூறாவளி சுழற்றத் துவங்கியது.
'இங்க பாருங்க... உங்க அண்ணனுக்கெல்லாம், என்னால சோறாக்கி போட முடியாது...' என்று, வந்த இரண்டே நாளில் இடியாய் இடித்தாள் மாலதி.
'அவரை, ஏதாவது ஒரு கடையில போய் வேலை பார்க்கச் சொல்லுங்க... கூடை முடையறது, பாய் பின்னுறது மாதிரி ஏதாவது செய்யச் சொல்லுங்க, வெட்டியா திண்ணைல உட்கார்ந்துகிட்டிருந்தா, சோறு எப்படி வரும்?'
'அவர் என்ன வெட்டியாவா உட்கார்ந்து கெடக்கறாரு? நம்ம ஒர்க்ஷாப்ல உட்கார்ந்து கணக்கு வழக்கு பாத்துக்கிட்டுத்தானே இருக்காரு...' மனைவியிடம் பவ்யம் காட்டிப் பேசினான் முருகன்.
'என்னத்த பெரிய கணக்கு வழக்கு... அந்தக் காயலான் கடைக்கு. அதான் நான் ஒருத்தி இருக்கேனே... கணக்கு பார்க்க நான் வர்றேன். உங்க அண்ணனை, உண்ட கட்டி வாங்க வேற எங்கயாவது போகச் சொல்லுங்க...'
கணவன், மனைவிக்குள் இந்த சண்டை நடந்த அன்றே, கடிதம் எழுதி வைத்து விட்டு, காணாமல் போய்விட்டான் நாகராஜன்.
முதலில் கண்ணீர் விட்டு கதறியவர் மாரப்ப நாயக்கர்.
'இப்படி செய்திட்டியே முருகா... கூடப் பொறந்தவனை, இப்படி குப்புறத் தள்ளிட்டியே... பாவமில்லையா?'
'இல்ல நாயக்கரே, ஏதோ ஒரு வேலை பாருன்னுதான் சொன்னோம். வேற எதுவும் சொல்லல, இதுக்கு போய் கோவிச்சுகிட்டு போய்ட்டார்...'
'கோவிச்சுகிட்டு எங்க போறது? எங்காவது போய் பிச்சைதான் எடுக்கணும். எங்க போய்ட போறாரு, ஏதாவது ஒரு கோவில்ல தான் கெடப்பாரு. அங்க மூணு வேளைக்கும், மூச்சு முட்ட சாப்பாடு கிடைக்கும்; நீங்க ஒண்ணும் கவலைப்பட்டு கரைய வேணாம்...'
- கல் மனம் கரையாமல் பேசினாள் மாலதி.
ஒரு வருடம் கழித்து, நாகராஜிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.
தான் நலமாக இருப்பதாகவும், மும்பையில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும் , தன்னை தேட வேண்டாம் என்றும் எழுதியிருந்த அந்தக் கடிதம் வந்த பின், கொஞ்ச நஞ்சம் இருந்த அண்ணன் பற்றிய கவலைகளும், அடியோடு அழிந்து போய்விட்டிருந்தது முருகனுக்கு.
தினமும் நாயக்கர் தான், இவன் ஒர்க் ஷாப்புக்கு வந்து, நாகராஜனைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருப்பார்.
''சொல்லு முருகா, நாகராஜனைப் பத்தி, ஏதாவது தகவல் உண்டா... நான் கேட்டுகிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு உன் வேலையில மும்முரமாக இருக்க?''
''இல்ல நாயக்கரே... நான் அண்ணனைப் பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கேன். நம்ம ஒத்தக்கடை வாத்தியாரு, அடுத்த வாரம் மும்பைக்கு போறாராம், கூட என்னையும் கூப்பிட்டிருக்காரு... போறப்ப, அண்ணன் என்ன செய்திட்டுருக்கார்ன்னு, ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேன். எனக்காக இல்லைன்னாலும், உங்களுக்காக பாத்துட்டு வந்துடுறேன். சந்தோஷமா நாயக்கரே!''
''போய்யா...போ... போய் பாத்துட்டு வாய்யா, உனக்கு புண்ணியமா போகும். கஷ்டப்பட்டுகிட்டு கிடந்தான்னா, கையோட அழைச்சிட்டு வந்துடு முருகா. இங்க ஏதோ ஒரு கைத்தொழிலை கத்துக் கொடுத்து, ஆளாக்கி விட்ருவோம்... நாம ஒரு தொழில் வெச்சு கொடுத்தா நல்லா வருவான்யா,'' மன்றாடினார் மாரப்ப நாயக்கர்.
முருகன் மும்பைக்குச் சென்ற போது, நாகராஜனை தேடுவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. ஏர்போட்டிற்கு அருகிலேயே, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் நாகராஜன்.
நாகராஜன் சொன்ன முகவரியைக் கேட்ட போது, ஒரு பெரிய மாளிகை போன்ற கட்டடத்தை காட்டினர்.
''நீங்க தேடி வந்த கம்பெனி இது தான்.''
'இந்தக் கம்பெனியிலா அண்ணன் வேலை செய்யுறாரு... ஒரு வேளை கூட்டி கழுவுற மாதிரி, கிடந்து கஷ்டப்படுறாரு போலிருக்கு!'
முருகன் மனசுக்குள், இதுவரை இல்லாத ஒரு பச்சாதாப உணர்ச்சி... 'ஐயோ பாவம்' என்ற பரிதாபம், 'அப்படி ரொம்பக் கஷ்டப்பட்டால், பேசாமல் நம்ம ஊருக்கே கூட்டிட்டுப் போயிடலாம்' என்று மனதுக்குள் திட்டமிட்டு கொண்டான் முருகன்.
''நான் பெருங்காளூர் நாகராஜனைப் பார்க்கணும். தமிழகத்திலிருந்து வந்திருக்கேன்.''
''ஓ மதராசியா... இப்படி பேரெல்லாம் சொல்லக்கூடாது. அவர் எங்க டீம் லீடர், டீம் லீடரைப் பார்க்கணும்ன்னு சொல்லுங்க,'' என்றாள் அங்கிருந்த தமிழ் தெரிந்த பெண் ஒருத்தி.
அந்தக் கம்பெனியின் மூன்றாவது மாடியில், 'ஏசி' பொருத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
கண்ணாடி அறைக்கு வெளியே காத்திருந்தான் முருகன்.
''மேடம், மிஸ்டர் நாகராஜன், இங்க என்ன வேலை செய்யறாரு?'' என்று அந்த பெண்ணிடம் கேட்டாள்.
''சார் தான் எங்க லீடர். டீம் லீடர்னா சூப்பர்வைசர் மாதிரின்னு வைச்சுங்கோங்களேன். எங்களை மாதிரி பத்துப் பேரை கட்டி மேய்ச்சு, கன்ட்ரோல் செய்ற வேலை.''
''அவர் கம்மியா தான் படிச்சிருந்தார்.''
''படிப்பு கம்மி, உடல் ஊனம்ன்னாலும் இங்கிலீஷ்ல, அவர் டாப். நுனி நாக்குல இங்கிலீஷ் பேசுவார். இது ஒரு மல்டி நேஷனல் கம்பெனி, வெளிநாட்டுக்காரங்க வந்து போற இடம். அவங்ககிட்ட ஆர்டர் வாங்கணும். நாகராஜன் சார், அந்த வேலைல ரொம்ப சரியா இருப்பார். அவரோட இங்கிலீஷ்னால, இந்த செக்ஷனையே தூக்கி நிறுத்தியிருக்கிறார்...
''சம்பளம் எவ்வளவு இருக்கும்ன்னு நெனைக்கிறீங்க... மாசம் இரண்டு லட்சம் ரூபாய். இது தவிர கம்பெனியே, இவருக்கு எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்திருக்கு. சார், வந்த அஞ்சு வருஷத்துல வேலை பார்த்துகிட்டே டிகிரியும் படிச்சு முடிச்சிட்டார்ன்னா பார்த்துக்கோங்களேன்,'' மூச்சுவிடாமல், முழுக்கதையும் சொல்லிக் கொண்டிருந்தாள் அப்பெண்.
அதற்குள், இவனைப் பார்த்துவிட்டு, குஷன் வைத்த சக்கர நாற்காலியை ஓட்டியபடியே வந்தான் நாகராஜன்.
''வாடா தம்பி... எப்படிடா இருக்க?'' சக்கர நாற்காலியில் இருந்தபடி தம்பியை கட்டிக்கொண்டான் நாகராஜன்.
''என்னடா இப்படி சொல்லாம கொள்ளாம வந்து நிக்கற... எப்படி முகவரியக் கண்டு பிடிச்ச?''
''நம்ம ஒத்தக்கடை வாத்தியாரு கூட வந்தேன். எப்படி இருக்கண்ணே?''
''நான் நல்லா இருக்கேண்டா, வசதியா ஒரு தனி ப்ளாட்; ஒரு கார் கொடுத்திருக்காங்க... என்னோட ஸ்போக்கன் இங்கிலீஷ் ஸ்கில்லை வெச்சுதாண்டா, இந்த வேலைக்கு வந்தேன். அது இருக்கட்டும்டா... வீட்ல மாலதி எப்படி இருக்காங்க, குழந்தைங்க எல்லாம் எப்படி இருக்காங்க.''
''எல்லாம் நல்ல இருக்காங்க அண்ணா.''
''காபி சாப்பிடுறா... ஆறிடப் போகுது.''
மும்பைக்கு வந்தது முதல், இதுவரை நடந்தது எல்லாவற்றையும், அன்று முழுவதும் கதை, கதையாய் சொல்லிக் கொண்டிருந்தான் நாகராஜன்.
அன்று மாலை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து, தம்பியை ரயில் ஏற்றி விட்டான் நாகராஜன்.
''இந்தாடா... குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடு, மும்பையில இதுதான் ரொம்ப பேமஸ்.''
ஒரு பாக்கெட் நிறைய பிஸ்கட்டுகளையும், சாக்லெட்டுகளையும் முருகனிடம் நீட்டினான்.
''இந்தா... செலவுக்கு வச்சுக்கோ...குழந்தைகளுக்கு கொஞ்சம் டிரெஸ் எடுத்துக்கொண்டுப் போ.''
கொஞ்சம் பணத்தை எடுத்து, தம்பியின் பாக்கெட்டில் திணித்தான்.
''நீ ஏண்டா அழற... எதையும் நினைத்து மனசை போட்டு குழப்பிக்காதடா, நான் எதையும் மனசுல வச்சுக்கல, '' திரும்பவும், தம்பியைக் கட்டிக் கொண்டு, தட்டிக் கொடுத்தான் நாகராஜன்.
அண்ணனை ஊனம் என்று சொல்லி, எவ்வளவு அவமானப்படுத்தியிருக்கிறோம்... நீ எதுக்குமே லாயக்கு இல்லையென்று சொல்லி திட்டியிருக்கிறோம். இன்றைக்கு எல்லாத் தடைகளையும் தாண்டி ஜெயித்திருக்கிற அண்ணனை நினைத்த போது, மனசுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அதே போல எதையுமே, மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்காத அண்ணனின் குணம், இன்னும் பெருமையாக இருந்தது.
'அண்ணனை நம்முடன் வைத்திருந்து, நல்ல வாய்ப்பு கொடுத்திருந்தால், என் ஒர்க்ஷாப்பை இந்நேரம் தூக்கி நிறுத்தியிருப்பார். தப்பு செய்துட்டோம். அண்ணனுக்கு முன்னால், உண்மையில் நாம் தான் மனதால் ஊனப்பட்டு கிடந்திருக்கிறோம்' என்று நினைத்த போது அவமானமாக இருந்தது.
ரயில், அண்ணனிடமிருந்து விலகி, புள்ளியாய் மறைந்த போதும், அன்பால் விசுவரூபம் எடுத்து, மறையாமல் நின்றான் நாகராஜன்.
***
ஆதலையூர் சூரியகுமார்