
மறுநாள் நடக்க இருந்த, 'சர்வாதிகாரி' பட ஷூட்டிங்குக்காக, நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை, 'முதலியார் தோப்பு' என்ற இடத்துக்கு அனுப்ப புரொடக்ஷன் மானேஜர் வேணுவிடம், முதல் நாளே கூறியிருந்தார் டி.ஆர்.”ந்தரம். மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் சாரட் வண்டி வராததால் கோபத்திற்கு ஆளானார் அவர்.
ஆனால், புரொடக்ஷன் மானேஜர் வேணு, வண்டிகளை காலை ஏழு மணிக்கே, 'குடுவம்பட்டி' ஓடைக்கு அனுப்பி விட்டார். இது தான் நடந்தது. தயங்கித் தயங்கி, வேணு இந்த விஷயத்தை கூறிய போது, டி.ஆர்.சுந்தரத்துக்கு கோபம் அதிகமாயிற்றே தவிர, குறையவில்லை.
'பிளடிபூல்... நீ என்ன பெரிய சர்வாதிகாரியா? நான் ஒரு இடத்திற்கு வண்டியை அனுப்பச் சொன்னால், நீ இன்னொரு இடத்திற்கு அனுப்பி இருக்கிறாய்...' என்று சில நிமிடங்கள் திட்டி ஓய்ந்தார். மூன்று மைல் தொலைவில் இருந்த சாரட் வண்டிகள் வேகமாக வரவழைக்கப்பட்டு, பின் படப்பிடிப்பு நடந்தது.
இந்த சமயத்தில், டி.ஆர்.சுந்தரத்தின் அருகில் தான் இருந்தார் எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பு நடந்த பின், டைரக்டர் எதை பற்றியோ யோசித்துக் கொண்டு இருந்த போது, எம்.ஜி.ஆர்., அவரது அருகில் போய் நின்றார். அருகில் வசனகர்த்தா ஆசைத்தம்பி.
'என்ன ராமச்சந்திரன்... ஏதாவது வேணுமா?'
'ஒன்றும் வேண்டாம்... ஒரு சிறு விண்ணப்பம்...'
'சொல்லப்பா... என்ன விஷயம்?'
'நம் படத்திற்கு, 'வீரவாள்' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்...'
'ஆமாம்... அதுதானே சரியான மொழிபெயர்ப்பு?'
'ஆனால், அதைவிடப் பொருத்தமாக, 'சர்வாதிகாரி' என்று பெயர் வைத்தால் எப்படி இருக்கும்?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
டி.ஆர்.சுந்தரம் யோசனை செய்தார்... இரு முறை, 'சர்வாதிகாரி' என்று சொல்லிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
பின் ஆசைத்தம்பி, மேதாவி போன்றவர்களின் யோசனையைக் கேட்டார்.
அவர்களும் பெயர் நன்றாக இருப்பதாகச் சொல்ல, படத்தின் பெயர், 'சர்வாதிகாரி' என்று உடனே மாற்றப்பட்டது.
பல தமிழ் படங்களை இயக்கிய அமெரிக்க நாட்டை சேர்ந்த இயக்குனர் எல்லிஸ்.ஆர்., டங்கன், அமெரிக்கா சென்ற போது, மாடர்ன் தியேட்டர்சை பற்றி அங்கே விவரமாக பேசியிருக்கிறார். 'இவ்வளவு வசதிகளுடன் ஒரு ஸ்டுடியோ, தமிழகத்தில் இருக்கிறதா?' என்று, அங்கிருந்த பெரிய தயாரிப்பாளர்கள் வியப்படைந்துள்ளனர். ஆனால், அவர்களால், இங்கே வந்து படமெடுக்க அப்போது நேரம் இல்லை. ஆனால், வில்லியம் பர்க் எனும் டைரக்டர், எல்லிஸ்.ஆர்.டங்கனுடன், தீவிரமாக விசாரணை நடத்தி, இந்தியாவில் குறிப்பாக, மாடர்ன் தியேட்டர்சில் ஒரு படம் எடுக்க முடிவு செய்தார்.
ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர், டி.ஆர்.சுந்தரத்திடம் கூட்டாக சேர்ந்து, இந்தியாவில் படமெடுப்பது அதுவே முதல் முறை, அந்த சாதனையையும் டி.ஆர்.சுந்தரம் தான் நிகழ்த்திக் காட்டினார். புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரங்களான ராடு கேமரான், சீசர் ரோமியோ மற்றும் கதாநாயகி மேரிஒன்டர் அதில் நடிக்க ஏற்பாடாகியது. இந்தியாவின், முக்கிய நடிகர்களாக, எம்.என்.நம்பியார், காமெடியன் கருணாநிதி ஆகியோர் இதில் நடித்தனர். அந்த படத்தின் பெயர், 'ஜங்கிள்!'
படப்பிடிப்பு, மைசூர் காடுகளில் நடத்துவது என்று ஏற்பாடு ஆகியது. கதையில் இருந்த ஒரு திட்டத்தை, அமெரிக்கர்கள் கை விட்டு விட்டனர். அது, ஒரு யானையை பற்றிய செய்தி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், உலகத்தில் நடமாடிய யானைகளை பற்றிய விஷயம் அது. 'மமூத்ஸ்' என அவற்றை குறிப்பிடுவர். அந்த யானைகளின் தந்தங்கள் மிகவும் நீளமானவை. உடல் பூராவும் ஒன்றரை அடி நீளத்திற்கு, ரோமம் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். உயரமோ, வழக்கமான யானைகளை விட, ஓரிரண்டு அடிகள் அதிகம். பார்க்கவே பயங்கரமாக இருக்கும்.
இந்த யானைகளைப் பற்றி, கதையில் இருந்தாலும், படத்தில் இவற்றை வேறுவிதமாக காட்டி விடலாம் என, இயக்குனர் டங்கனும், வில்லியம் பர்க்கும் முடிவு செய்தனர். அதாவது, யானைகள் விஷயம் ஓரளவுக்கு கைவிடப்பட்டது போலத் தான். இந்த விவரங்களை, அந்த வெளிநாட்டு டைரக்டர்கள், லைப்ரரி புத்தகம் ஒன்றில் தேடிப் பிடித்திருந்தனர். அந்த புத்தகத்தில் இருந்த யானையை, டி.ஆர்.சுந்தரம் பார்த்தார். அந்த டைரக்டர்களின் எண்ணம் இவரிடம் சொல்லப்படாததால், இவர் காஸ்ட்யூமரை, கலந்து ஆலோசித்தார். அவரது எண்ணத்தை, செயலாக்குவதையே, தங்களது லட்சியமாக கொண்ட, ஸ்டுடியோ ஊழியர்கள், புத்தகத்தில் உள்ள யானையை போல் செய்யலாம் என்று, டி.ஆர்.சுந்தரத்திடம் உறுதி கூறவே, அவரும் 'முயற்சியுங்கள்' என்று சொல்லி விட்டார்.
நன்கு உயரமாக காணப்பட்ட சில யானைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் தந்தங்களும், நன்றாக வளர்ந்திருந்தன. ஒரு யானைக்கு, 25 ஆயிரம் ரூபாய்க்கு சவுரிமுடி வீதம், 10 யானைகளுக்கு வாங்கி, சவுரி முடி நெசவாளர், 50 பேரை வரவழைத்து, யானை அளவுக்கு அந்த முடியை கொண்டு உடை தயார் செய்ய கூறினார். அவர்களும் யானை அளவுக்கு துணியை வெட்டி, அதில், முடியை நன்றாக இணைத்தனர். அந்த பெரிய முடி உடையை, யானை மீது போர்த்தியவுடன், 'மமூத்ஸ்' ரெடியாகி விட்டது. இதை பார்த்த அமெரிக்க டைரக்டர்கள் அசந்து போய் விட்டனர். இப்படி கூட தமிழகத்தில், தேவையான பொருளை தர, ஒருவர் இருக்கிறாரா என வியந்தனர். எந்தவித சிரமமும் இல்லாமல், அவர்கள் படத்தை ஆறே வாரத்தில் முடித்தனர், என்பது தான் சாதனை.
படத்தை முடித்ததும், அயல்நாட்டில், 'ஜங்கிள்' படத்தை வெளியிடுவது சம்பந்தமாகவும், ஹாலிவுட் நகரத்தை பார்த்துவிட்டு வரவும், அமெரிக்க டைரக்டர்கள் அழைத்ததின் காரணமாக, அமெரிக்கா சென்றார் டி.ஆர்.சுந்தரம். அவர் திரும்பி வரும் வரை, ஸ்டுடியோவில் வேலை ஏதும் நின்று போய் விடக் கூடாதே... அதனால், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, 'வளையாபதி'யை படம் எடுக்க முடிவு செய்து, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை வைத்து வசனம் எழுத ஏற்பாடு செய்தார்.
சவுகார் ஜானகிக்கு, இது, மாடர்ன் தியேட்டர்சில் முதல் படம். கதாநாயகன் முத்துகிருஷ்ணன் என்றொரு நாடக நடிகர். டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்வதாக இருந்தது. இந்த சமயத்தில், அமெரிக்க அழைப்பை தட்ட முடியாமல், அவர் அமெரிக்கா சென்றார். அங்கே போய்விட்டு, மறுநாளே திரும்பி வர முடியுமா? மூன்று மாதங்கள் ஆயிற்று. டி.ஆர்.சுந்தரம் ஊரில் இல்லை. ஆனால், தொழில் ஒழுங்காக நடந்தது. தலைவன் இல்லை என்றாலே... ஏதாவது, ஒரு பிரச்னை, எங்கும் முளைப்பது சகஜந்தானே?
மாடர்ன் தியேட்டர்சிலும், பிரச்னை கிளம்பியது. இதுவரை, தலைவரின் பேச்சுக்கும், பார்வைக்கும் கட்டுப்பட்டு வேலை செய்து கொண்டிருந்த, இதே தொழிலாளர்கள், அரசியல்வாதிகளின் கைப்பாவையாக மாறினர். கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளே நுழைந்து விட்டதாக பேசிக் கொண்டனர். ஓவர் டைம் செய்தால் கூலி, எட்டுமணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய முடியாது. வாராந்திர விடுமுறை என, பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதில், முதலாளியின் ஆட்கள், தொழிலாளர்களின் ஆட்கள் என்று இரு கோஷ்டி பிறந்தது. சலசலப்பு அதிகமானதே இதனால் தான். அப்போது இருந்த, தற்காலிக நிர்வாகத்தினரால், இந்த பிரச்னைகளை சமாளிக்க முடியவில்லை. டி.ஆர்.சுந்தரம் இல்லாமல், இவர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? வேலைகள் எல்லாமே மிகவும் தாமதமாக நடந்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ இயங்கும் வேகம், இப்போது தடைப்பட்டது.
டி.ஆர்.சுந்தரம் திரும்பி வந்தார். ஒரே நாளில், நிலைமையை புரிந்து, தொழிலாளர் தலைவனாக இருந்த, நபரை அழைத்துப் பேசினார். எந்த விதமான உடன்பாடும் ஏற்படவில்லை. அதனால், படப்பிடிப்பு விடாமல் நடக்க, என்ன சவுகர்யங்கள் தேவையோ, அவைகளை மட்டும் செய்து கொடுத்தார். ஆனால், தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் மட்டும் தங்களது விரோத போக்கை கைவிடவில்லை. இதனால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை டி.ஆர்.சுந்தரம் எடுத்தார். வழக்கு, லேபர் கோர்ட்டில் நடந்தது. கோர்ட் தீர்ப்பு வந்தால், பல தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவர். சட்டம் தன் கடமையை செய்து விடுமல்லவா?
அதற்கு பின், ஒரு நாள், படப்பிடிப்பு முடிந்து, இரவு மணி இரண்டாகி விட்டது. நடிக, நடிகையர், டெக்னிஷியன்கள் எல்லாரும் வீடு திரும்ப வேண்டும். இவர்கள் திரும்பும் போது, இவர்களை வழிமறித்து தாக்குவது என்று, வேலையிலிருந்து சட்டப்படி நீக்கப்பட வேண்டிய தொழிலாளர்கள் சிலர், திட்டம் போட்டு வைத்திருந்தனர். இந்த தகவல், விசுவாசமான ஒரு தொழிலாளிக்கு தெரிய வர, அந்த நபர், டி.ஆர்.சுந்தரத்திடம் விஷயத்தை சொல்லி விட்டார்.
இந்த தகவலை தெரிந்து கொண்ட டி.ஆர்.சுந்தரம்,'என்ன நடக்கிறது என்பதை பார்த்து விடுவோம்...' என்று சொல்லி, அப்போது அருகில் இருந்த கேமராமேன், ஜி.ஆர்.நாதனிடம், 'நீ காரை எடுப்பா... நாம் முதலில் போவோம். நமக்கு பின்னால் எல்லா வண்டிகளும் வரட்டும்...' என்றார்.
— தொடரும்.
ரா. வேங்கடசாமி

