
எந்த காரணத்தினாலோ பாலு முதலியார் தன் சகோதரனுடன் ஐக்கியமாகி விட்டார். 'சிவலிங்க சாட்சி' படத்தில், தந்திரக் காட்சிகள் நிறைந்து இருந்தன. அதற்கு பொறுப்பானவர் பேய்ஸ் எனும் ஜெர்மன் கேமராமேன். அதற்கு பின், மாடர்ன் தியேட்டர்ஸ் டிஸ்டிரிபியூஷன் காரியாலயப் பொறுப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார் பாலு முதலியார்.
கூட்டுத் தயாரிப்பான, 'விக்ரம ஊர்வசி' படம் முடிந்தவுடன், டி.ஆர்.சுந்தரம் பெரிதாக ஒரு திட்டம் போட்டார். அவருக்கு ஆங்கிலக் கதைகளின் மீது அலாதி மோகம் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. அதன் விளைவு தான், 'உத்தமபுத்திரன்' படம் எடுக்க காரணமானது. அலெக்சாண்டர் டூமாஸ் எனும் ஆங்கில எழுத்தாளரின் கதைதான், 'மேன் இன் தி அயர்ன் மாஸ்க்' என்பதாகும். படிப்பதற்கு மிகுந்த சுவையுள்ள நாவல்.
இந்த கதையை திரைப்படமாக்க முடிவெடுத்த டி.ஆர்.சுந்தரம், வசனத்தை டி.வி.சாரி எனும் பெரிய எழுத்தாளரை விட்டு எழுத வைத்தார்.
'ஒரு உறையில் இரண்டு வாள்' இருக்க முடியாது போன்ற கூர்மையான வசனங்களுக்கு அவர்தான் சொந்தக்காரர்.
கதாநாயகனாக, பி.யூ.சின்னப்பா, கதாநாயகி எம்.வி.ராஜம்மா, வில்லன் டி.எஸ்.பாலையா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் போன்றவர்கள் நடித்தனர். இதில், இரட்டை வேடத்தை மிகத் திறமையாக ஒளிப்பதிவு செய்தவர், போடோ கூச்வாக்கர் எனும் ஜெர்மன் கேமராமேன். முதன் முதலாக இரட்டை வேடத்தைத் திரையில் அறிமுகப்படுத்திய பெருமை, டி.ஆர்.சுந்தரத்தையே சாரும். நடித்த பெருமை, பி.யூ.சின்னப்பாவிற்கு.
தமிழில் இப்படிப்பட்ட ஒரு படம் வந்ததில்லை எனும் அளவுக்கு, அப்படம் பாராட்டப்பட்டது; நன்றாகவும் ஓடியது. 1941ல் வெளிவந்த இந்த படத்திற்குப் பின், அதே வருடத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் பி.யூ.சின்னப்பா நடித்த இரு படங்களைத் தயாரித்தது. 'தர்மவீரன், தயாளன்' எனும் அந்த படங்களுக்கு பிறகு, யூ.ஆர்.ஜீவரத்தினம் நடித்த, 'பக்த கவுரி' படம் வெளிவந்து மிகவும் நன்றாக ஓடியது. '1001 இரவு' எனும் அராபியக் கதைத் தொகுப்பில் இருந்து ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு, 'மாயாஜோதி' எனப் பெயரிட்டார். 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' எனும் கதைதான் அது. இதில், டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். 1942ல் வெளியான படம் அது. அதைத் தொடர்ந்து வந்தது தான், 'சதி சுகன்யா' இதில், டி.ஆர்.ராஜகுமாரி நடித்தார்.
மாடர்ன் தியேட்டர்சின், 'ஏ' ப்ளோர்ஸ் ஆசிரம செட் மிகவும் அலங்காரமாகப் போடப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது மின்சார கசிவால், செட் முழுமையாக எரிந்து போயிற்று. மனம் தளர்ந்து விடாமல் டி.ஆர்.சுந்தரம் புதிதாக இன்னொரு, 'செட்'டை நிர்மாணித்து படத்தை எடுத்து முடித்தார். படம் வெளிவந்து, நன்றாக ஓடியது.
தீப்பிடித்த விஷயத்தைச் சொல்லும்போது இன்னொரு படத்தைப் பற்றியும் அவசியம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
அந்த சம்பவம் நடந்தது, 1948ம் ஆண்டில் 'போஜன்' என்றொரு படம். பி.எஸ்.கோவிந்தன், எஸ்.வரலட்சுமி நடித்தது. இது ஒரு கூட்டுத் தயாரிப்பு. அந்தப் படம் முடிந்துவிட்ட நிலையில், ரிலீஸ் தேதியும் குறித்தாகி விட்டது. படம் தயாரிக்க மட்டும் நான்கு மாதங்கள் ஆயின. எடிட்டிங், ரீ-ரிகார்டிங் எல்லாமே முடிந்து விட்டது. அந்த சமயத்தில்தான், மின்சாரக் கோளாறினால் படம் பூராவும் எரிந்து விட்டது. சாம்பலாகிப் போனது குறித்து கொஞ்சம் வருத்தப்பட்டார் டி.ஆர்.சுந்தரம். பிறகு, விரைவில் சுதாரித்து, ஒரே மாதத்தில் அதே நடிகர், நடிகையரை வைத்து, மறுபடியும் படத்தை எடுத்து முடித்து, குறித்த நாளில் ரிலீசும் செய்தார். படம் நன்றாகப் போனது.
மாடர்ன் தியேட்டர்சில் வருடா வருடம் மிகவும் சிறப்பாக நடத்தப்படும் ஒரு திருவிழாவைப் பற்றி இங்கே அவசியம் சொல்ல வேண்டும். திருவிழா என்பதை விட, தொழிலாளர் விழா என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதுதான் அங்கே நடக்கும், 'ஆயுத பூஜை' விழா. ஆயுத பூஜை விழா வருகிறது என்றாலே, ஸ்டுடியோ, இந்த விழாக்களுக்காக விழாக்கோலம் பூண்டு விடும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என்று இந்த மூன்று நாட்களும் அங்கே சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்போது நடக்கும் படப்பிடிப்பின் கதாநாயகன், நாயகி, வில்லன், காமெடியன் மற்றும் டெக்னீஷியன்ஸ் இதர தொழிலாளர்கள் என்று, எல்லாருமே ஒன்று கூடுவர். இவர்கள் அல்லாது கம்பெனிக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும், 'ஆயுத பூஜை' அழைப்பிதழைப் பெற்று, ஸ்டுடியோவுக்கு வருவர்.
என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கும் என்பது, பத்து நாட்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விடும். மாறுவேடப்போட்டி, டிராமா, ரன்னிங் ரேஸ், சடுகுடு, வாலிபால், பேட்மிண்டன், டென்னிஸ், கேரம்போர்டு, பிங்பாங்க், டக் அப்வார், சிலம்பு விளையாட்டு, இப்படி பலவிதமான விளையாட்டுகள் அந்த மூன்று நாட்களும் நடைபெறும். இதில், குறிப்பிட்ட சிலவற்றை தவிர, மற்றதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பரிசுகளைப் பெறலாம். வரும் எல்லாருக்கும், மூன்று வேளையும் உணவு பரிமாறப்படும். தொழிலாளர்களுடன் முதலாளியும் நீண்ட மேஜையில் அமர்ந்து சாப்பிடுவதுதான் இதன் முக்கிய அம்சம். போட்டியில் ஜெயிப்பவர்கள், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் பெரும் பரிசுகளைப் பெறுவர்.
இந்த கோலாகலத்திற்காக, மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏங்கிக் கொண்டு இருப்பர். இதை போல், மூன்று நாள் திருவிழா, வேறு ஸ்டுடியோக்களிலும் நடந்ததாகத் தெரியவில்லை.
பல படங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்த பின், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, 'மனோன்மணிய'த்தை படமாக்க விரும்பினார் டி.ஆர்.சுந்தரம்.
அப்போதைய நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடித்தது. பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி, ஆர்.பாலசுப்ரமணியன், டி.ஆர்.மகாலிங்கம், கே.கே.பெருமாள், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்தனர். கதைக்கு பெயர் கொடுக்க வேண்டுமென்றால், அதில் குறிப்பிட்டுள்ள பல காட்சிகளை நிதர்சனமாக மக்களின் கண்களில் காட்ட வேண்டும். சேர, அரசனுக்கும், பாண்டிய மன்னனுக்கும் நடந்த போரில், குறைந்தது, 1500 வீரர்களாவது தேவை. அதாவது, ஒரு நாட்டிற்கு, 750 பேராக, 1500 துணை நடிகர்கள் தேவை. நாள் சம்பளம் மூன்று அணா. அவர்களுக்கு மதியம் சாப்பாடும் தர வேண்டும். நகரிலிருந்து இவ்வளவு பேரையும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல வாகன வசதி இருக்கவில்லை. எல்லாரும் நடந்துதான் வர வேண்டும்.
ஏற்காடு அடிவாரத்தில் போர்க்களம். அங்குதான் தொடர்ந்து படப்பிடிப்பு. இவர்களைத் தவிர, ஸ்டன்ட் நடிகர்கள், ஹீரோ, ஹீரோயின், வில்லன், படப்பிடிப்புக்குத் தேவையான டெக்னீஷியன்கள் எல்லாருமாகச் சேர்ந்து, 2,000 பேர்களுக்கு மேல் ஓர் இடத்தில் கூட்டப்படுவர். இவர்களுக்குத் தேவையான சாம்பார் சாதம், தயிர் சாதம், பெரிய பெரிய அண்டாக்களில் நிரப்பப்பட்டு, மாட்டு வண்டிகளில் கொண்டு வரப்படும். இவர்களுக்குப் பரிமாற நூறு பேர் இருப்பர். தண்ணீர் கொடுக்க ஐம்பது பேர் என்று, ஒரு திருவிழாக் கூட்டமே அங்கே இருக்கும். டைரக்டர், டி.ஆர்.சுந்தரம் உட்பட எல்லாருக்குமே இந்தக் கலவை சாதம் தான். வித்தியாசமே கிடையாது. ஆறு கேமராக்கள் வேலை செய்ய, படப்பிடிப்பு பத்து நாட்கள் நடந்தன. இதர செலவுகளைப் பற்றி இங்கே குறிப்பிடவில்லை. அதனால், 'மனோன்மணி' பட விளம்பரத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான படம் என்று விளம்பரம் செய்யப்பட்டது. உண்மையும் அதுதானே!
அதற்கு பின் எத்தனையோ பிரமாண்டமான படங்கள் வந்து இருக்கலாம். ஆனால், மனோன்மணிக்கு முன்பு அவ்வளவு பொருட்செலவில் எந்த படமும் தயாரிக்கப்படவே இல்லை! 'மனோன்மணி'யின் மாபெரும் வெற்றிக்குப் பின், டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்து படங்களைத் தயாரித்தார். காமெடியனாகவே நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனை முதலில் ஹீரோவாக்கி புரட்சிகரமாக ஒரு படத்தைத் தயாரித்தார். எலக்ஷன், 'தில்லுமுல்லு'கள் அப்போதே அப்படத்தில் காட்டப்பட்டன. படத்தின் பெயர்: 'திவான் பகதூர்!'
அடுத்து வந்தது, 'பக்த ஹனுமான்!' வி.ஏ.செல்லப்பா நடிக்க, சி.வி.ராமன் டைரக்ட் செய்தார்.
தமிழே தெரியாத எம்.எல்.டாண்டன் டைரக்ட் செய்த படம் தான், 'ராஜராஜேஸ்வரி!' வசன கர்த்தாவின் உதவியால் இது சாத்தியமானது. கதாநாயகி கே.எல்.வி.வசந்தா.
— தொடரும்.
ரா.வேங்கடசாமி