
தனுஷுக்கு 8 லட்சம்!
'ஒய் திஸ் கொலைவெறி' பாடலின் ஹிட், தனுஷை அதிக சம்பளம் வாங்கும் பின்னணி பாடகராகவும் உயர்த்தியுள்ளது. சமீபத்தில், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில், ஒரு பாடலை பாட, ஐந்து லட்சம் ரூபாய் சிம்பு வாங்கியுள்ள நிலையில், இரண்டாம் உலகம் படத்தில் ஒரு பாட்டு பாட, எட்டு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார் தனுஷ். இதையடுத்து, விரைவில் இந்த போட்டியில் தனுஷை முந்திச் செல்ல வேண்டும் என்று அடுத்த போட்டியில் குதித்துள்ளார் சிம்பு.
— சினிமா பொன்னையா
சினேகாவை புகழும் பிரசன்னா!
சினேகாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன், மந்தமாக இருந்த பிரசன்னாவின் மார்க்கெட், திருமணத்திற்கு பின் சூடு பிடித்துள்ளது. தமிழில், சென்னையில் ஒரு நாள், கல்யாண சமையல் சாதம் உட்பட மூன்று படங்களில் நடிப்பவர், தெலுங்கில், பாய் என்ற பெயரில் நாகார்ஜூனா நடிக்கும் படத்தில், போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இன்னும் சில படங்களில் நடிக்கவும் பேசி வருகிறார். இதையடுத்து, 'சினேகாவை கைபிடித்த நேரம்தான், கைநிறைய படங்களை கைப்பற்றி, நடித்து வருகிறேன்...' என்கிறார் பிரசன்னா.
— சி. பொ.,
பிரபுதேவாவின் அடுத்த நாயகி!
நயன்தாராவுடனான பிரிவுக்கு பின், எந்த நடிகையையும் தன்னை நெருங்க விடாமல் இருந்து வந்த பிரபுதேவா, இப்போது, ஜாக்குலைன் என்ற பாலிவுட் நடிகையுடன் தென்படுகிறார். தற்போது, பிரபுதேவா இந்தியில் இயக்கிவரும், ராமய்யா வஸ்தாவய்யா என்ற படத்தின் நாயகியான இந்த ஜாக்குலைன், சில நள்ளிரவு பார்ட்டிகளிலும், மேற்படி நடிகருடன் காட்சி கொடுப்பதால், இவர்களை இணைத்து பாலிவுட்டில் கிசுகிசு பரவியுள்ளது.
— சி. பொ.,
விஜய் படத்தில் வாய்ப்பு கேட்ட அஞ்சலி!
விஷால், ஆர்யா என்று, இரண்டாம் தட்டு ஹீரோக்களை எட்டிப் பார்த்து விட்ட அஞ்சலிக்கு, அடுத்து விஜய், அஜீத் என்று டூயட் பாடும் ஆசை மேலோங்கி உள்ளது. அதற்கான நேரம் பார்த்து வந்தவர், விஜய்யிடம், தன் விருப்பத்தை நேரடியாகவே தெரிவித்துள்ளார். அதற்கு விஜய்யும், 'நேரம் வரும்போது சொல்கிறேன்...' என்று அஞ்சலிக்கு ஆறுதலான பதிலை சொல்ல, செம உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை. நடந்தவரை நமது செயல்; நாளை நடப்பது நாயகன் செயல்!
— எலீசா
சமந்தாவை மிரளவைத்த ஆந்திர ஹீரோக்கள்!
தமிழ், தெலுங்கில் வெளியான, நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், தெலுங்கு படங்களில் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் சமந்தா. இதனால், இதுவரை அவரை சீண்டாமலிருந்த அங்குள்ள இளவட்ட ஹீரோக்கள், இப்போது சமந்தா பக்கம் திரும்பியிருப்பதோடு, அவரது கால்ஷீட் வேண்டும் என்பதற்காக, சமந்தாவின் படக் கூலியையும் தாறுமாறாக உயர்த்தி விட்டனர். இதனால், அடுத்து அதிரடி நடிகையாக வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதை எண்ணி, மிரண்டு போயிருக்கிறார் சமந்தா. நாலு பேருக்கு சொல்லி, மனசிலே போட்டு வைக்கிறவன் கதை போல்!
— எலீசா
நயன்தாராவை வீழ்த்திய டாப்ஸி!
விஷ்ணுவர்தன் இயக்கும், வலை படத்திற்கு, நயன்தாராவை அஜீத்துக்கு ஜோடி என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால், இப்போது டாப்ஸிக்கும் அஜீத்துடன் காட்சிகள் கொடுத்து, அவரையும் இன்னொரு நாயகிபோல் உருவாக்கி விட்டனர். இதனால், இப்படம் தமிழில் தனக்கு பெரிய ரீ-என்ட்ரியை கொடுக்கும் என்று கூறி வந்த நயன்தாரா, இப்போது, வலை படத்தில், தான் ஓரங்கட்டப்படுவதாக சோகமாக கூறி வருகிறார். வந்த வெள்ளம், இருந்த வெள்ளத்தைத் தள்ளியது!
— எலீசா
யோகாவுக்கு மாறிய காஜல் அகர்வால்!
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று தீவிரமாக கடைபிடித்து வந்த காஜல் அகர்வால், சமீபகாலமாய், அனுஷ்கா பாணியில் யோகா பயிற்சியும் எடுத்து வருகிறார். இதற்காக, ஒரு இளம் யோகா பயிற்சியாளரை கூடவே அழைத்து வரும் காஜல், அந்த நபருக்கு தேவையான தங்கும் செலவுகளையும், படாதிபதிகளின் தலையிலேயே கட்டுகிறார். நடல புடலங்காய் காய்க்கிறதாம்; நாழிக்கு பத்தெட்டு விற்கிறார்களாம்!
— எலீசா