
''வாங்கண்ணே... என்ன காலங்காத்தாலே அண்ணனும், தம்பியுமா சேர்ந்து வந்திருக்கீங்க,'' வாய் கொள்ளாத சிரிப்போடு, சகோதரர்களை வரவேற்றாள் சரசு.
''எல்லாம், ஒரு முக்கியமான விஷயமாகத்தான் வந்திருக்கோம். நேற்று சாயந்திரம், கொரியரிலே நம்ம சண்முகம் தம்பி பொண்ணு, மதுவந்தியோட கல்யாணப் பத்திரிகை வந்திருக்கு. இன்னும் பத்து நாள்லே கல்யாணம். இங்கேயிருந்து, அவங்க ஊர், 20 கி.மீ., கூட இல்லை. பொண்ணுக்கு முக்கியமான உறவு இல்லையா நாம். நேரிலே கூப்பிடணும்ன்னு தோணலை பாரு. மூன்றாம் மனுஷாளுக்கு அனுப்புற மாதிரி, பத்திரிகை அனுப்பியிருக்காங்க,'' பெருமூச்சுடன் கூறினார் மூத்தவரான பரமசிவம்.
''எனக்கும் தான், நேத்து வந்ததண்ணே. மனசு ரொம்பவே நொந்து போச்சு. பொண்ணுக்கு அத்தை, நானும், நாகலட்சுமியும். நாங்க சபையிலே இருக்கணும்ன்னு தோணலை பாரு, அவனுக்கு.''
''சண்முகத்தை குறை சொல்லாதே சரசு. அவன் என்ன செய்வான்; பாவம். தெரியாமலா சொன்னாங்க பெரியவங்க, 'நமக்கு உசந்த அந்தஸ்துலே இருக்கிறவங்களோட சம்பந்தம் செய்யக் கூடாது'ன்னு. அதை அலட்சியப்படுத்தினோம். இப்போ... அவஸ்தைபடுகிறோம்,'' என்று, நொந்தார் சின்ன அண்ணன் ராசு.
''சரி, பழசை பேசி பயனில்லை. இப்போ என்ன செய்யலாம் சொல்லு. உன் வீட்டுக்காரர் என்ன அபிப்ராயப்படுகிறாரு?''
''அவரும், நம்மை மாதிரிதான் நினைக்கறாரு... 'மதியாதார் தலை வாசல் மிதியாதே' என்று சொலவடையே இருக்கே, நிச்சயதார்த்தம் நடந்ததே நமக்கு தெரியாது. அரசல் புரசலாகத்தான் செய்தி வந்தது. இப்போ கல்யாணத்திற்கும் நேரில் கூப்பிடலை... எப்படி போறது?''
''சரசு... நீ சொல்றது வாஸ்தவம் தான், ஆனா, நம்ம சண்முகம் நிலைமையை யோசித்துப் பார். அவனை பொறுத்தவரை, நம்ம மேலே இருக்கிற அன்பும், மரியாதையும் குறையலை. அவன் பெண்சாதி ஐஸ்வர்யா, நம்ம வீட்டு விசேஷங்களுக்கு வராட்டியும், அவன் அடி மனசிலே எத்தனை ஆதங்கம் தெரியுமா? பெண்சாதிக்கு தெரியாம, எத்தனை முறை, நம் வீட்டில் விசேஷம் நடக்கிற போது, அவன் முறைக்குரிய சாங்கியம் செய்து விட்டு போயிருக்கிறான்,'' என்றார் பரமசிவம்.
அண்ணனை தொடர்ந்து, ''அண்ணன் சொல்றது வாஸ்தவம் தான். அவுனுக்காகவாவது, நம் மதிப்பை விட்டுக் கொடுத்து, இந்த கல்யாணத்திற்கு போகணும். பார்க்கப் போனால், ஐஸ்வர்யாவை பெண் பார்த்து கட்டி வைத்ததே நாம் தானே. அவன் என்ன சொன்னான் ஞாபகமிருக்கா? 'அண்ணே... இது, ரொம்ப பெரிய இடம். நம்ம அந்தஸ்துக்கு ஒத்து வருமான்னு பார்த்துக்கோங்க'ண்ணு சொல்லலையா? நாம் தானே, நல்ல குடும்பமா இருக்கு என்று கட்டி வச்சோம்,'' என்றார் ராசு.
''கல்யாண சமயத்லே, நம்மை விட கொஞ்சம் உசந்த அந்தஸ்துலே தான் இருந்தாங்க, தூரத்து சொந்தமாச்சே. உறவ விட வேண்டாமேன்னு கட்டி வச்சோம். ஆனா, இந்த, 20 வருஷத்திலே நம்மை விட, பல மடங்கு உசந்து விட்டாங்களே,'' ஆதங்கப் பட்டாள் சரசு.
''அதனாலே, நான் என்ன சொல்ல வர்றேன்னா, கல்யாணத்தன்னிக்கு காலையிலே, இரண்டு வேன்லே நாம எல்லாரும் போறோம். நம்மாலான மொய் பணத்தை எழுதி கொடுத்து விட்டு, சாப்பிட்ட உடனே திரும்பிடறோம்.''
''எண்ணண்ணே சொல்றீங்க. நாம எல்லாரும் போறதா?'' திடுக்கிட்டாள் சரசு.
''ஆமாம் சரசு. நேத்து பூரா நான் எல்லாரையும் சந்திச்சு பேசி, இதுக்கு சம்மதிக்க வைத்திருக்கிறேன், நீயே யோசித்துப் பாரு. அந்த கல்யாண வீட்டிலே, நம்ம சண்முகத்தை தவிர, அத்தனை பேரும் ஐஸ்வர்யா வீட்டு ஆளுங்கதான். அப்போ, அவன் மனசு எத்தனை கஷ்டப்படும். அதை நாம உணர்ந்து செயல்பட வேண்டாமா? பணம் தான் பெரிசுன்னு ஐஸ்வர்யாவும், அவங்க வீட்டு மனுஷாளும் நினைக்கிறாங்க. உறவு தான் பெரிசு. நீங்க மதிக்காட்டியும் எங்க வீட்டு பையனை விட்டுக் கொடுக்க மாட்டோம்ன்னு, நாம் போய் நிற்க வேண்டாமா இல்லே... நாம போனா தான், கழுத்தை பிடித்து தள்ளப் போறாங்களா?''
அங்கு நெடு நேரம் மவுனம் நிலவியது!
''சரி மச்சான்... நீங்க சொல்றது சரி தான். நாம் எல்லாரும் போகலாம்,'' என்றார் சரசுவின் கணவர்.
கல்யாணத்தன்று காலை, மாப்பிள்ளை வீட்டார் தங்கி இருந்த அறையில், கசமுசா என, பேச்சு குரல்கள் ஓங்கி ஒலித்தன.
''எலே... பாஸ்கர், போய் என்னன்னு பார்; சீர் செனத்தியிலே, ஏதாவது குறை சொல்றாங்களா? எதுவா இருந்தாலும் கொடுத்திடலாம்,'' என்று கனத்திருந்த பர்சை தடவியபடியே சொன்னார் ஐஸ்வர்யாவின் தந்தை.
''நான் போய் கேட்டு விட்டு வந்து விட்டேன் பெரியப்பா. இது பண விஷயமாய் வந்த பிரச்னை இல்லே.''
''பின்னே வேறு என்னவாம்?'' சில்க் ஜிப்பாவும், மைனர் செயினும், தங்க வாட்சும் மின்னிட கேட்டார் ஐஸ்வர்யாவின் மாமா.
''நிச்சயதார்த்த சமயத்லே உறவுகளை அறிமுகப்படுத்திய போது, நம்ம வீட்டு உறவுகளை மட்டும் சொன்னோம். அப்போ, சண்முகம் மாப்பிள்ளை உறவுக்காரங்களைப் பற்றி விசாரித்த போது, ஏதோ சொல்லி சமாளித்து விட்டோம் இல்லையா? இப்போ கல்யாண நாளில் கூட, மாப்பிள்ளை வீட்டு உறவுகள் ஏன் வரலைன்னு கேட்கிறாங்க,'' என்றார் ஐஸ்வர்யாவின் அண்ணன்.
''இதென்னடா கூத்தா இருக்கு. அவங்க ஏன் வரலைன்னு, நமக்கு எப்படி தெரியும்? பத்திரிகை கூட பத்து நாள் முன்னாடி அனுப்பியாச்சு.''
''இல்லே சித்தப்பா... யாரோ சொல்லிட்டாங்க, அவங்க, சண்முகம் மாமாவைத் தவிர, சாதாரண அந்தஸ்துலே இருக்கிறதாலே வர கூச்சப்படுறாங்கன்னு, எதுக்கு அவங்க அப்படி கூச்சப்படுறாங்க என்றால், சண்முகத்தோட பெண்சாதி, நல்ல முறையிலே உறவு வச்சுக்கலைன்னு தானே அர்த்தம். நாளை எங்களுக்கும், இந்த நிலை தானே ஏற்படும். பணத்தை பெரிசா மதிச்சு, உறவைத் தள்ளுகிற சம்பந்தம் நமக்கு தேவையா என பேசிக்கிறாங்க.''
''இதென்னது பெரிய பூதமா கிளம்பறது?''
''நான் தான் அப்பவே சொன்னேனே... இவங்க சுமாரான அந்தஸ்துகாரங்க தான். நமக்கு தோதான இடமாக பார்க்கலாம் என்று சொன்னேன். கேட்டீங்களா?'' பாய்ந்தார் ஐஸ்வர்யாவின் அண்ணன்.
''சரி... இப்போ பேசி என்ன ஆகப்போறது, யாராவது வேனை எடுத்துக் கொண்டு போய், சண்முகம் வீட்டு உறவுகளை கூட்டி வாங்க. நல்ல வேளையா, அவங்க எல்லாரும் ஒரே ஊரிலே இருக்காங்க.''
''என்னடா சொல்றே அப்பு. இன்னும் இரண்டு மணி நேரத்தில் கல்யாணம் நடக்கணும். அதற்குள்ளே போய், அவங்களை சமாதானப்படுத்தி கூட்டிக்கிட்டு வர முடியுமா?''
''இப்போ என்ன செய்யறது? வேறே என்ன வழி? கல்யாணம் நின்னு போச்சுன்னா நமக்கு தானே அவமானம்.''
இந்த சமயம், 'ஹாரன்' ஒலித்தபடி இரண்டு வேன்கள் வந்து நிற்க, அவற்றிலிருந்து இறங்கிய சண்முகம் வீட்டு உறவுகளைப் பார்த்த போது, அனைவரும் பாய்ந்து ஓடி வரவேற்றனர். சற்று முன் நடந்த சம்பவங்களை அறிந்திராத அவர்கள், இந்த வரவேற்பை கண்டு அசந்து தான் போயினர்.
***
குந்தவை