PUBLISHED ON : ஏப் 17, 2016

அடியார்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அருள்பவர் இறைவன் என்பதற்கான சம்பவம் இது...
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர், முருகப் பெருமானை நேருக்கு நேராகத் தரிசித்தவர்; வள்ளி நாச்சியாரின் திருக்கரத்தால், விபூதி அளிக்கப் பெற்றவர்; கோவில்களில் உயிர் பலியிடும் பழக்கத்தை தடுத்து நிறுத்தியவர்; சூரியன், திருவிளக்கு மற்றும் நடராஜப் பெருமான் பற்றி, 'ஞாயிறு ஆயிரம், திருவிளக்காயிரம், தில்லைத் திருவாயிரம்' என, ஏராளமான துதிப்பாடல்களை எழுதியுள்ளார்.
இவர், ஒருமுறை, திருத்தல யாத்திரை செய்தவாறு, திருவரங்கத்திற்கு வந்தார். அப்போது, திருவரங்கப் பெருமானைக் குறித்து தாம் பாடிய, 'திருவரங்கத் திருவாயிரம்' எனும் அருந்தமிழ் நூலை, அங்கே அரங்கேற்ற நினைத்தார். அடியவரின் உள்ளம் அரங்கனுக்குப் புரியாமல் போகுமா? திருவரங்கத்தில் இருந்த அடியார்கள் கனவில் தோன்றி, தண்டபாணி சுவாமிகள் பாடிய, 'திருவரங்கத் திருவாயிரம்' எனும் நூலை, அரங்கேற்றம் செய்யுமாறு கட்டளையிட்டார் அரங்கன்.
அரங்கேற்றம் துவங்கியது; வண்ணச் சரபத்தின் வார்த்தை அமுதத்தைப் பருகிக் கொண்டிருந்தனர், அடியார்கள் கூட்டம். அப்போது, அடியார் ஒருவரின் மகளை, பாம்பு கடித்து, அவள் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் வந்தது. அரங்கேற்றம் தொடர்ந்து நடக்குமோ, நடக்காதோ என்ற நிலை! ஆனால், தண்டபாணி சுவாமிகள் கவலைப்படவில்லை. அவர் வேகமாகப் போய், கருடன் முன் நின்று,
அரங்கன் திருமுன் அமரும் கருடா
இரங்கி இரங்கிப் பார்ப்பனப் பெண்
ஏங்கச் சிரங்கொண்ட, பொல்லாவிடத்தைப்
பொடியாக்கிப் பூவுலகோர் நல்லான்
என்று ஓத அருள் நல்கு!
- என வேண்டி, திருநீறு தந்து, அப்பெண்ணுக்கு பூசச் சொன்னார். அப்போது, கருட பகவான், ஓர் அந்தணன் வடிவில் தண்டபாணி சுவாமிகளுக்குக் காட்சியளிக்க, அவரைப் பார்த்து, 'உங்கள் பெயர் யாது?' எனக் கேட்டார் தண்டபாணி சுவாமிகள்.
'என் பெயர் கருடாச்சாரி...' என்று சொல்லி, சற்று நேரம் சுவாமிகளிடம் உரையாடி, அங்கிருந்து திடீரென மறைந்தார். அதே விநாடியில், பாம்பு தீண்டியப் பெண், எந்தவித பாதிப்பும் இல்லாமல், பூரணமாகக் குணம் பெற்றாள் என்ற தகவல் வந்தது.
'ஏதும் அறியாத சாதாரண மனிதனைப் போலத் தோன்றி, என்னோடு உறவாடி, கருடன் செய்த அருள், அதிசயம்...' என்று பாடினார் தண்டபாணி சுவாமிகள்.
அருளாளர்களின் வார்த்தைகளுக்கு ஆண்டவன் கட்டுப்பட்டு, அல்லல்களைக் களைவார் என்பது, திருவரங்கத்தில் நிரூபணமானது.
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
பணிவார் பிணி தீர்த்து அருளிப்
பழைய அடியார்க்கு உன்
அணியார் பாதம் கொடுத்தி
அதுவும் அரிது என்றால்
திணியார் மூங்கில் அனையேன்
வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்து ஒல்லை
தாராய் பொய் தீர் மெய்யானே!
விளக்கம்: பொய்மை நீங்கிய சத்திய வடிவான சிவபெருமானே... உன்னை வணங்கும் அடியார்களின் பிறவிப் பிணியை நீக்கி அருள்கிறாய். உன் பழைய அடியார்களுக்கு (பக்குவப்பட்ட மனங்களுக்கு) உன் அழகு நிறைந்த திருவடிகளைத் தந்து அருள்கிறாய். அடியேனுக்கும் அவ்வாறு அருள் செய்! அது அரிது என்றால், வன்மை மிகுந்த மூங்கிலைப் போன்றவனாகிய அடியேனின் வினைகளை மட்டுமாவது நீக்கு. விரைந்து வந்து, உன் அருள் பாதங்களைத் தந்து, அடியேனுக்கும் அருள் செய்!

