
ஏப்., 19 மீனாட்சி திருக்கல்யாணம்
திருமண வீட்டுக்கு சென்றால், சுவையான விருந்தும், தேங்காய் மற்றும் பரிசுப்பொருட்கள் அடங்கிய தாம்பூல பையுமே கிடைக்கும். ஆனால், அன்னை மீனாட்சியின் கல்யாணத்திற்கு வந்தவர்கள், ஒரு நதியையே பரிசாகப் பெற்றனர்; அதுதான் வைகை!
மீனாட்சிக்கு திருமணம் நடந்தபோது, பெண் வீட்டார், தாங்கள் சமைத்துள்ள விருந்தைப் போன்று, வேறு எந்த கல்யாணத்திலும் பார்த்திருக்க முடியாது என்று பெருமை பேசினர். ஆன்மிகத்தில் நுழைவதற்கான தகுதியே, ஆணவம் இன்மை தான்.
மீனாட்சியின் பெற்றோரான மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலையின் ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், தன் பூதகணங்களில் ஒருவனான குண்டோதரனை வரவழைத்து, 'முதலில் இவனுக்கு விருந்து பரிமாறுங்கள்...' என்று கூறினார். குண்டோதரனை விருந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல, அவனோ, ஒரே நொடியில் அங்கிருந்த எல்லா உணவையும் காலி செய்து விட்டான். அதன்பின்னரே, இது, சிவன் நிகழ்த்திய லீலை என்பதை உணர்ந்தனர். இதன் மூலம், திருமணங்களில் ஆடம்பரம் கூடாது என்பதை, நமக்கு அறிவுறுத்தியுள்ளார் இறைவன்.
குண்டோதரனின் தாகம் தீர்க்க, ஒரு நதியை பிரவாகம் எடுக்கச் செய்தார் சிவன். குண்டோதரன், கை வைத்து குடித்ததால், 'வைகை' என்ற பெயர் வந்ததாகவும், அந்நதியில் வெள்ளம் கரைபுரண்டபோது, அதன் வேகத்தை குறைக்க, நதியின் மத்தியில் சிவன் கை வைத்து தடுத்ததால், 'வைகை' எனப் பெயர் வந்ததாகவும் சொல்வர்.
மேலும், மகாபலி மன்னனை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, மூன்றடியால் உலகளந்த போது, அவரது ஒரு திருவடி, விண்ணைக் கிழித்துச் சென்றது. அந்த திருவடிக்கு, தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார் பிரம்மா. அதுவே, 'வேகவதி' எனும் வைகை நதியாக ஓடுகிறது என்றும் தகவல் உண்டு.
அத்துடன், மகாவிஷ்ணுவிற்குரிய உலகம் வைகுண்டம்; சிவபெருமானுக்குரிய உலகம் கைலாயம். இவற்றின் முதல் எழுத்துகளைச் சேர்த்து, 'வைகை' எனப்பெயர் வந்தது என்றும் கூறுவர்.
இந்நதியில் நீராடி, சொக்கநாதரை வழிபடுவோருக்கு கைலாயத்திலும், கூடல் அழகரை வழிபடுவோருக்கு வைகுண்டத்திலும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இப்படிப்பட்ட சிறப்பு மிக்க வைகைக் கரையிலுள்ள மதுரையில் வசித்தவள் தான் வித்யாவதி என்ற பெண். பார்வதிதேவியின் பக்தையான இவள், 'தாயே பார்வதி... உலகிற்கே தாயான நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்...' என, தினமும் வேண்டுவாள். பார்வதியும் அவளது கோரிக்கையை ஏற்று, மற்றொரு ஜென்மத்தில், காஞ்சன மாலையாக பிறந்து, மலையத்துவஜ மன்னனை மணக்க அருள்பாலித்தாள்.
இத்தம்பதி குழந்தை வேண்டி, யாகம் செய்த போது, யாக குண்டத்தில் இருந்து ஒரு குழந்தை வெளிப்பட்டது; அக்குழந்தையே மீனாட்சி. அவளை சிவனுக்கே திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர்.
தன் மேல் பக்தியும், பாசமும் கொண்டோருக்கு மகளாக, தாயாக, சகோதரியாக விளங்குகிறாள் அன்னை மீனாட்சி. அவளை எந்த உறவு சொல்லி வேண்டுமானாலும் அழைக்கலாம். பச்சை நிறமுள்ள அந்த மரகதவல்லியின் திருக்கல்யாணத்தைக் காண, கண் கோடி வேண்டும்.
அன்னையின் திருமணம் காண அனைவரும் வாருங்கள்!
தி.செல்லப்பா

