தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்

பாக்ஸ் மேட்டர்


PUBLISHED ON : செப் 26, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*  நியூயார்க் நகரில் உயரமான கட்டடத்துக்கு மீண்டும் போட்டி!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இப்போது உள்ள மிக உயரமான கட்டடம், 'எம்பயர் ஸ்டேட் பில்டிங்!' 79 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடத்தின் உயரம் 1,200 அடி. இப்போது இந்த கட்டடத்தின் மிக அருகில், 900 அடி தூரத்தில் இன்னொரு பிரமாண்டமான, அதிக உயரம் கொண்ட கட்டடத்தை கட்ட இன்னொரு நிறுவனம் முடிவு செய்துள்ளது. நியூயார்க் நகரில் 34வது தெருவில் கட்டப்பட இருக்கும் இந்த கட்டடம் 1,216 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 'இந்த கட்டடம் கட்டப்பட்டால், எம்பயர் ஸ்டேட் பில்டிங் கட்டடத்தின் சர்வதேச அந்தஸ்து பறிபோகும். நியூயார்க் நகருக்கு மீண்டும் ஆபத்து ஏற்படும்!' என, அதன் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனை புது கட்டட உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். 'நியூயார்க்  நகரம் வளர்ச்சியடையும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும்!' என்பது அவர்கள் கருத்து. உயரமான கட்டடங்களுக்கு போட்டி இருப்பது நல்லதுதான். ஆனால், மீண்டும் நியூயார்க் நகரில்  இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவம் நடக்காமல் இருந்தால் சரி.   — ஜோல்னா பையன்.

* 72 வயதில் குழந்தை பெற்ற பெண்!

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஓம்காரி பன்வர்; வயது 72. இந்த வயதில் சமீபத்தில் இவர் தாய் ஆனார். அதுவும் ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மிக அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இவரது கணவர் பன்வர்; வயது 75. இதற்கு முன் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனை  மும்பையைச் சேர்ந்த பத்ரி தேவிக்கு கிடைத்திருந்தது. இவர் 66வது வயதில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்.இப்படி வயது முதிர்ந்த நிலையில், சில பெண்கள் சர்வ சாதாரண மாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, வேறு சில பெண்களின் வாழ்க்கை சோகமாக உள்ளது. அதில் ஒருவர்   ராஜோ தேவி. இளம் வயதில் திருமணம் ஆனது முதல், 70 வயது வரை இவருக்கு குழந்தை பாக்கியமே இல்லை. 70வது வயதில் செயற்கை முறையில் கருத்தரித்தார். அறுவை சிகிச்சை மூலம் இவர்  பிரசவித்தார். அதன் பின் கடந்த 18 மாதங்களாக உயிருக்கு போராடி வருகிறார். ஆசையாக இவர் பெற்ற குழந்தையை கூட இவரால் பராமரிக்க முடியவில்லை.  — ஜோல்னா பையன்.

* இந்தியாவில்  மொபைல் போன்  அதிகம்;  கழிப்பறைகள் குறைவு!

மக்கள் தொகையில், உலகின் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், சுகாதாரமான கழிப்பறைகளை பயன்படுத்துபவர்களை காட்டிலும், மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்தியாவில், 54 கோடியே 50 லட்சம் பேர் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதம்.அதே நேரத்தில், 31 சதவீதமான 36 கோடியே 60 லட்சம் மக்கள் மட்டுமே நவீன கழிப்பறையை பெற்றுள்ளனர். ஐ.நா.,வின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பல்கலைக்கழக இயக்குனர் ஜாபர் அடீல் இந்த ஆய்வின் முடிவுகளை தெரிவித்துள்ளார். ஒரு கழிப்பறைக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்ட 16 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.                — ஜோல்னா பையன்.

* நடை பயிற்சியை விட யோகா சிறந்தது!

 நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் ஆகியவை குறைய அதிகாலை நடைபயிற்சி சிறந்த பலனை தரும் என்பது மருத்துவ ரீதியான கண்டுபிடிப்பு. இந்நிலையில், நடை பயிற்சியை காட்டிலும், யோகா மூலம் இவற்றில் இருந்து நல்ல நிவாரணம் பெறலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  யோகா செய்வதால் நல்ல உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. யோகா பயிற்சின் போது, மூளையின், 'காம்மா அமினோபியூட்ரிக்' அதிக அளவில் சுரப்பதே காரணம்.  'காம்மா அமினோபியூட்ரிக் அளவு குறையும் போது மனச்சோர்வு மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன!' என்று அமெரிக்க, பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் செய்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்விற்காக இரண்டு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு மணி நேரம் யோகா பயிற்சியும், மற்றொரு குழுவிற்கு அதே நேரத்தில் நடை பயிற்சியும்  கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் இரண்டு குழுக்களிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நடை பயிற்சி செய்த குழுவை காட்டிலும், யோகா பயிற்சி பெற்ற குழுவில் உள்ளவர்கள் மனச்சோர்வு மற்றும் மன உளைச்சல் போன்றவை நீங்கி அதிக உற்சாகமும், புத்துணர்ச்சியும் பெற்றது தெரியவந்தது. 'யோகா பயிற்சி செய்யும் போது மன ஒழுங்கின்மையால் தோன்றும் பிரச்னைகளை சீராக்கப்படுகிறது!' என்று இந்த ஆய்வை மேற்கொண்ட குழுத்தலைவர் செரிஸ் ஸ்ரீட்டர் கூறுகிறார்.       — ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us