PUBLISHED ON : டிச 19, 2010
முதல் வாழ்த்து அட்டை!
இங்கிலாந்தில் 1843ல் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி லோவுக்கு அனுப்பினார் கார்ஸ்லே. தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கு அனுப்பத் துவங்கினர். அமெரிக்காவில் தற்போது வாழ்த்து அட்டைக்காக 25 கோடி டாலர் வரை செலவு செய்து வருகின்றனர். ***
முதல் அலங்காரம்!
கிறிஸ்துமஸ் மரத்திற்கு அலங்காரம் செய்யும் பழக்கத்தை இங்கிலந்து ராணியான விக்டோரியாவின் கணவர் ஆல்பர்ட்தான் முதன் முதலாக 1840ல் ஏற்படுத்தினார். கிறிஸ்து பிறந்த நாளுக்கு, 'கிறிஸ்துமஸ்' என்று பெயர் சூட்டியவர், 'டே' என்ற அமெரிக்கப் பெண்மணி ***
சாண்டாக்ளாஸ் தபால் நிலையம் ! - ராஜி ராதா
அமெரிக்கா உட்பட சில நாடுகளில் சான்டா க்ளாஸ் கடிதங்கள், பரிசுகளை அனுப்புவதற்கென்றே சில தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில், கிறிஸ்தவ அபிமானிகளால் மிகவும் அபூர்வமாக கருதப்படுவது பின்லாந்து நாட்டில், ஆர்க்டிக் சர்க்கிளில் உள்ள சான்டா க்ளாஸ் தபால் நிலையம்தான். முதிர்ந்த பைன் மரம் மற்றும் இயற்கைக் கல்லால் ஆன ஒரு கட்டடத்தில் இந்த தபால் நிலையம் இயங்கி வருகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுப் பொருட்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், முன்கூட்டியே இங்கு அனுப்பி வைத்து விடுவர். உதாரணமாக, கோடை காலத்தில் அனுப்பினால், அதை, குளிர் காலத்தில் உரிய நேரத்தில் முகவரி காரருக்கு சான்டா க்ளாஸ் அனுப்பி வைத்தது போல் அனுப்பி விடுவர். ஆர்க்டிக் சர்க்கிளின் தபால் முத்திரை அபூர்வம். இதைத் சேகரிக்க என்றே இங்கு அனுப்பி, திரும்பப் பெறுபவர்களும் உண்டு. இந்த தபால் நிலையம், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் படு பிசியாக செயல்படும். அப்போது, வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இருக்கும். சான்டா க்ளாஸ், ஒரு கதையில் வந்து குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் கற்பனை கேரக்டர்தான். ஆனால், அந்த உடையும், நடவடிக்கைகளும் மக்களை ஈர்த்து விட்டதால், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் சமயத்தில் மிகவும் விரும்பப்படும் மனிதராக வலம் வருகிறார் இந்த சான்டா க்ளாஸ். இப்போதும் கிறிஸ்துமஸ் தினத்தில் சான்டா க்ளாஸ் வந்து தங்களுக்கு பரிசுகளை வைத்துச் செல்வதாக குழந்தைகள் நம்புகின்றனர். தபால் தலை, கார்டு, லெட்டர் பார்சல் என சான்டா க்ளாஸே அனுப்புவது போல் கடிதம், பரிசுகள் பலவும் ரெடிமேடாக கிடைக்கின்றன. நீங்களும் உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாங்கி அனுப்பலாமே! ***
* அலாஸ்காவிலும் ஒரு சான்டா க்ளாஸ் தபால் நிலையம் உள்ளது.
* அமெரிக்காவின் இன்டியானா மற்றும் அரிசோனாஸ் மாநிலங்களில் சான்டா க்ளாஸ் என ஒரு ஊர் உள்ளது.
கிறிஸ்துமஸ் மாதம்!
நாட்காட்டியை மக்கள் பயன்படுத்த துவங்கிய நாட்களில், டிசம்பர் மாதத்திற்கு 29 நாட்கள் தான் இருந்தன. ஜூலியஸ் சீசர் நாட்காட்டியைத் திருத்தி அமைத்தபோது, 37 நாட்கள் கொண்டதாக டிசம்பர் மாதத்தை மாற்றினார். 'டெசம்' என்ற லத்தின் வார்த்தைக்கு, பத்து என்பது பொருள். அக்காலத்தில், ஓர் ஆண்டின் முதல் மாதம் மார்ச். அதனால், டிசம்பர் பத்தாவது மாதமானது. புதிய நாட்காட்டியில் தான் டிசம்பர் 12வது மாதமாகும் தகுதியை பெற்றது. எனவே, ஜெர்மனி நாட்டவர் டிசம்பர் மாதத்தை, 'கிறிஸ்துமஸ் மாதம்' என்று அழைக்கின்றனர்.
