PUBLISHED ON : பிப் 06, 2011

* சூரியச் சூறாவளி!
மிகப்பெரிய சூரியச் சூறாவளி 2012ல் நிகழும் என்று கூறுகின்றனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த சூரிய புயல், நூறு மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்டதாக இருக்கும். இதனால், பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்று, வரிசைப்படுத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
* நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும், தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும்.
* விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்துக்கு உதவும் உபகரணங்கள் முடங்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக, செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.
* நூறு ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப் புயல், முதன் முதலாக பூமியை தாக்கவுள்ளது. இதனால், பெரிய அளவுக்கு மின் வினியோகத் தடைகளும், தகவல் தொடர்பு சிக்னல்கள் இழப்பும் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.
சூரியப் புயல் தாக்கும் போது, சூரியனின் வெப்ப அளவு 10 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.
இந்த சூப்பர் சூரிய சூறாவளி, இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப் புலங்களை நம்பி இயங்கும் நம் தகவல் தொழில் நுட்ப உலகம், பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த வகையில், அதிசக்தி சூரியப்புயல், 2012 அல்லது 2013ல் ஏற்படும் என்பது உறுதி. அதன் விளைவுகள் பற்றி, இன்னமும் விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூரியப் புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள், பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால், இது மிக மிக வேகமாக நடக்கும், இடி இடிப்பது போன்ற நேரத்தில், அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசாவில் சூரியப் பவுதிகப் பிரிவு விஞ்ஞானி, டாக்டர் பிஷர். இதனால் ஏற்படும் சேதங்களை சீர் செய்ய, மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு, நீண்ட காலம் ஆகும் என்பதும் உண்மை. சூரிய சுழற்சியில், 24ம் கட்டத்தை எட்டுவதால், இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள். — ஜோல்னா பையன்.
** முதலாம் உலகப் போரில், அந்த இளைஞர் ராணுவத்தில் சேர்ந்தார். மலைப்பகுதியில் தன் சக வீரர்கள், சிதறியோடுவதைக் கண்டு துள்ளியெழுந்தார். குரல் கொடுத்து, அனைவரையும் அழைத்தார்; உற்சாகம் கொடுத்தார்.
அன்றிரவு அவருக்கு இரண்டு விஷயங்கள் புரிந்தன. ஒன்று, தனக்கிருக்கும் உடல் வலிமையின் உரம்; மற்றொன்று தலைமைப் பண்பின் திறம். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தன் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். அவர் தான், பின்னாளில் அமெரிக்க அதிபராக உயர்ந்த ஹாரி ட்ரூமென். சோதனைகள், நம்மையே நமக்கு அறிமுகம் செய்து வைக்கும். எனவே, சோதனைகளை விழிப்போடு எதிர் கொள்ளுங்கள். ***
காணாமல் போகிறது, 'காதோலை' கலாச்சாரம் !
கூடலூரில் வாழும் பழங்குடியின பனியர் இன பெண்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய, 'காதோலைகள்' வழக்கம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் வசித்து வரும் பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர், தங்களது கலாசாரங்களை இன்றும் மாறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இதில், பனியர் இன பெண்கள் ஓலைகளால் காதணி அணிந்து வருவது தற்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
பனியர் இன மக்களால், 'கைதை' என அழைக்கப்படும், சதுப்பு நிலங்களில் வளரும் தாழம்பூ வகையைச் சார்ந்த தாழை மரத்தின் குருத்து ஓலைகளையே காதணியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஓலைகளை வெயிலில் உலர வைத்து, உருளை வடிவமாக சுற்றி, காதணியாக மாற்றி, அணிந்து கொள்கின்றனர். வனத்தில் கிடைக்கும் இத்தகைய காதணிகளை, பனியர் இன பெண்கள் அணிவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தற்போதைய நாகரிக மாற்றத்தில் ஒரு சிலரை தவிர, பெரும்பாலான பனியர் இன இளம் பெண்கள், இந்த காதணிகளை பயன்படுத்தும் வழக்கத்தில் இருந்து மாறி, பேன்சி கடைகளில் கிடைக்கும் காதணிகளையே அதிகம் நாடிச் செல்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், 80 சதவீத பெண்கள் இந்த, 'காதோலை' பயன்படுத்தியது போய், 20 சதவீதம், அதுவும், வயதான பெண்கள் மட்டுமே தற்போது பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த காதணி வரலாற்று சுவடாக மாறிவிடும் நிலை உள்ளது.
— ஜோல்னா பையன்.
