PUBLISHED ON : பிப் 06, 2011

* ஒரு ஐந்தெழுத்து வார்த்தை...
அந்த வார்த்தை எனும்
தண்டவாளத்திலேயே
எல்லாரின் வாழ்க்கை
ரயிலும் ஓடி கொண்டிருக்கிறது!
* அதனால் தான்
உலகம் விடிகிறது...
இயற்கை தன்னை
புதுப்பித்துக் கொள்கிறது!
* சூரிய ஒளியால்
இயற்கை புத்துயிர்
பெறுவது போல —
* ஓடும் நதிகள் யாவும்
சமுத்திரத்தை
அடைவது போல —
* உணவைத் தேடி
எறும்புகள் ஊர்வலம்
தொடங்குவது போல —
*இந்த வார்த்தையை பின்பற்றி
மனிதகுலம் அடிக்கடி தன்னை
உயிர்ப்பித்துக் கொள்கிறது!
* வலிகளும், வேதனைகளும்
ரத்தமும், மரணங்களும்
நிறைந்த வரலாற்றை
தாங்கிக் கொள்ளவும் —
* நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும்
வலிமையோடு எதிர்கொள்ளவும்
இந்த வார்த்தையே
பயன்படுகிறது!
* மரணத்திடம் மாட்டிக் கொண்டு
போராடுபவர்களுக்கும்,
சோதனைகளால் வருந்துபவர்களுக்கும்,
வேதனையால் துடிப்பவர்களுக்கும்
இந்த வார்த்தையே
வேத வாக்கு!
* தொடர் துன்பங்களால்
இந்த வார்த்தையை
மறந்தவர்கள் உண்டு!
* அவர்களையும் இந்த
வார்த்தை எங்கோ ஒளிந்திருந்து
காப்பாற்றிக் கொண்டிருக்கிறது!
*அந்த வார்த்தைக்கு
அழிவே இல்லை...
அது அழிந்தால்
உலகமே இல்லை!
*அந்த வார்த்தை...
நம்பிக்கை!
— எம்.ஸ்ரீராம், சென்னை.
