
பல வெற்றிப்படங்களில் நடித்தவர், நடிகை மம்தா மோகன்தாஸ். இவர், தான் புற்றுநோயாளி என்பதையும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதையும் தயக்கமின்றி கூறுவதுடன், '2009ல் தான் எனக்கு இந்நோய் பற்றி தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த நான், சென்னை தனியார் மருத்துவமனையில், ஐந்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றேன். நோயின் தாக்கம் குறைந்த போது, திருமணம் செய்தேன்; ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஓர் ஆண்டிலேயே திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மீண்டும் நடிக்கத் துவங்கிய போது, நோய் மீண்டும் தலைதூக்கியது.
'பேஸ்புக்'கில் அமெரிக்க மருத்துவர் நீல் சங்கருடன் பரிச்சயம் ஏற்பட்டது. அமெரிக்க யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ்
(யு.சி.என்.ஏ.,) மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், புற்றுநோய்க்கு சிறந்த மருந்து ஒன்றை கண்டுபிடித்து, அது மிருகங்களுக்கு வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதாக கூறி, என்னையும் சிகிச்சைக்கு அழைத்தார்.
'நோயின் தாக்கத்தால் தவித்த நான், வருவது வரட்டும் என்று, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றேன். இப்போது, அனைவரும் வியக்கும்படி குணமடைந்து வருகிறேன். அடுத்த கட்ட சிகிச்சைக்கு பின், பூரண குணமாகி விடுவேன். உலகில் முதன்முதலாக இந்த சிகிச்சை பெற்ற பெண் நான் தான்...' என்று கூறி பெருமைப்படுகிறார்.
— ஜோல்னாபையன்.